Monday, August 5, 2024

ஆசிய கூடைப் பந்தாட்டப் போட்டியில் களம் இறங்கிய சீனாவின் நெடுஞ்சுவர்

 18 வயதுக்குட்பட்ட ஆசிய மகளிர் கூடைப்பந்து போட்டியில் களமிறங்கிய 7.5 அடி உயர சீன வீராங்கனை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

சீனமக்களின் சராசரி உயரத்தி விட அதிகளவு உயரமான வீராங்கனையைச் சமாளிக்க முடியாமல் எதிரணிகள் கலங்குகின்றன.

உலகின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கூடைப்பந்து. அமெரிக்கா போன்ற நாடுகளில் கூடைப்பந்து விளையாட்டு மிகவும் பிரபலம் ஆகும். ஆசிய கண்டம் உள்பட மற்ற நாடுகளிலும் இந்த விளையாட்டை பிரபலப்படுத்த கூடைப்பந்து சம்மேளனம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 18 வயதுக்குட்பட்ட மகளிர் ஆசிய கூடைப்பந்து போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஜப்பான், சீனா, கொரியா, மலேசியா போன்ற நாடுகள் பங்கேற்று ஆடி வருகின்றன. பொதுவாக ஜப்பான், சீனா, கொரியா நாடுகளில் வசிக்கும் மக்கள் சராசரி உயரமாகவே இருப்பார்கள்.

ஆப்பிரிக்க, அமெரிக்கர்கள், இந்தியர்களை காட்டிலும் இவர்களின் உயரம் மிக குறைவாகவே இருக்கும். ஆனால், சீனா அணிக்காக களமிறங்கிய ஜாங்க் ஜூயூ அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இவர் சர்வதேச கூடைப்பந்து போட்டிகளில் விளையாடத் தொடங்கியது முதலே இவரது மீது அனைவரது கவனமும் இருந்து வருகிறது. இதற்கு காரணம் இவரது உயரம். சீனர்கள் குள்ளமாக இருப்பார்கள் என்பதற்கு நேர் மாறாக இவர் 7.5 அடி உயரத்தில் இருக்கிறார்.

7.5 அடி உயரத்தில் இருக்கும் ஜாங்க் ஜூயூ சீன அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளார். கொரியாவிற்கு எதிரான போட்டியிலும் அவர் எதிரணி வீராங்கனைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். கொரியாவும் – சீனாவும் மோதிய இந்த அரையிறுதி ஆட்டத்தில் 79-61 என்ற கணக்கில் சீனா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இணையத்தில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஜாங்க் ஜூயூ கடந்த 2007ம் ஆண்டு பிறந்தவர். இவரது பெற்றோர்கள் கூடைப்பந்து வீரர்கள். 5 வயது முதலே ஜாங்க்கிற்கு அவர்கள் கூடைப்பந்து ஆட கற்றுத்தரத் தொடங்கியுள்ளனர். இவரது உயரமும், இவரது சிறப்பான ஆட்டமும் இவரை தேசிய அணியில் இடம்பெற வைத்தது. 14 வயதிலே 15 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் பங்கேற்று ஆடினார். மேலும், தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெறவும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

No comments: