Sunday, August 25, 2024

தேடினேன் கிடைத்தது.

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் , அம்மன் கோயில் ஆகிய இரண்டு ஆலயங்களின் மீது எனது மாமி செல்வி சூரன் சிவபாக்கியம் ஊஞ்சல் பாட்டு  எழுதியதாக படிக்கும் காலத்தில் அறிந்தேன். அது ஒரு சம்பவம் என நினைத்து காலப் போக்கில் அதனை மறந்து விட்டேன்எனக்குத் தேவையான ஒரு சிலவற்றைப் பற்றித்தேடல் செய்தபோது அவை ஞாபக்த்துக்கு வந்தன.

அது சம்பவம் அல்ல, வரலாறு, ஆவணம் என்பதை உணர்ந்துகொண்டேன். இரண்டு கோயில்களுக்குமான ஊஞ்சல் பாடல்களைப் பற்றி பலரிடம் கேட்டேன்.  தெரியாது எனும் பதில்தான் கிடைத்தது.

புலோலி, துன்னாலை,வல்லிபுரக்குறிச்சி  ஆகிய ஊர்களில் உள்ள ஏதோ ஒரு அம்மன் கோயிலுக்கு மாமி ஊஞ்சல் பட்டு எழுதியதாக ஞாபகம் எந்த ஊர் என்பது சரியாக ஞாபகம்  இல்லை. அந்த அம்மன் கோயில் ஊஞ்சல் பாட்டு எழுதியதைப் பற்றிய சம்பவத்தை மாமி எனக்குச் சொன்னது  பசுமையாக மனதில் உள்ளது.

கோயிலுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது. ஊஞ்சல் பாட்டு கட்டாயம் வேண்டும்என குருக்கள் சொன்னார். அப்போது  அங்கிருந்தவர்கள், அந்தக் காலத்தில்  பிரபலமாக இருந்த பண்டிதர், புலவர் போன்றோரின் பெயரை கூறி அவர்களில் ஒருவரிடம் கேட்கலாம் என்றார்கள்.

கோயிலைக் கும்பிடச்சென்ற மாமிநான் எழுதுகிறேன்என்றார்.

ரீச்சர் உங்களால் முடியாது. வேறை ஆக்களிடம் கொடுக்கலாம்என சிலர் சொன்னார்கள்

அங்கு நின்ற ஒரு சிறுவனிடம் காசைக் கொடுத்த மாமி கொப்பி வாங்கி வரும்படி கூறினார். கோயில் மண்டபதில் இருந்து ஒரு மணித்தியாலத்தில்  ஊஞ்சல் பாட்டை எழுதினார். அதனைப் பார்த்த குருக்கள் பாராட்டினார்.

பொன்னூஞ்சல் பாடல் எழுதியமைக்காக கோயில் கும்பாபிஷேகத்தின் போது  சூரன் புத்திரி சிவபாக்கியத்தைப் பாராட்டி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். எமது ஊரில் இருந்து திரு.கமலாகரன், திரு புவனேந்திரன் ஆகிய இருவரும் அந்த விழாவுக்கு சென்றனர். அந்த விழாவைப் பற்றி இருவரும் எனக்குப் பலமுறை சொன்னார்கள்.

அட்சரத்த்தின் ஏற்பாட்டில் புலவரின் பாடல்களை இறுவட்டாக வெளியிடுவதற்காக புலவரைப் பற்றிய  புத்தகங்களைத் தேடினேன். தன்னிடம் சில புத்தகங்கள் இருப்பதாக திரு குலசேகரம் அவர்கள் சொன்னார்கள். உடனே அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றேன்.  மாமி எழுதிய ஊஞ்சல் பாடல் பற்றி அவரிடம் வினவினேன். புலோலி மனோன்மணி அம்மனைப் பற்றியது எனச்சொல்லி தன்னிடம் புத்தகம் இருக்கிறது என்றார்.

புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. வீட்டுக்குள் போய் ஐந்தி நிமிடங்களில் வந்து காணவில்லை. கிடக்கும் தேடித்தருகிறேன் என்றார்.  சிறகடித்த பட்டாம் பூச்சிகள் சிறகிழந்து விழுந்தது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலின் பெயர் தெரிந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன்.

ஒருமாதத்தின் பின் இன்று கலையில் வீட்டுக்குவந்து  திருப்பொஞ்னூஞ்சல்புத்தகத்தைத் தந்தார். அம்மன் அருள் கிடைத்ததுபோல் மகிழ்சி ஏற்பட்டது.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், போன்றவர்கள் பாடல் எழுதிய கதையைப் படித்து வியக்கும் எனக்கு  அன்று எனக்கு இந்த ஊஞ்சல் பாடலின்கதை வியப்பாகத் தெரியவில்லை.

திருவூஞ்சல் பா  அமைந்த கதை என  அம்பாள் அடியான் திரு . நடராசா அந்தப் புத்தகத்தில் குறுப்பிட்டுள்ளார்.

 

No comments: