Sunday, April 19, 2009

குழப்பத்தில் கூட்டணி தயக்கத்தில் ஜெயலலிதா

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான முறுகல் நிலை இன்னமும் தீரவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒதுக்கிய நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு கட்சித் தலைவர்களும் பத்திரிகைகளுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் ஒன்றாக நின்று சிரித்துக் கொண்டு காட்சியளிப்பது வழமை. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியின் தலைவரைச் சந்தித்து ஆசி பெறுவது சம்பிரதாயம்.
கூட்டணிக் கட்சிகளிடையே உள்ள வழமையையும் சம்பிரதாயங்களையும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கடைப்பிடிக்கவில்லை.தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் வைகோவும் ஒன்றாகக் கையெழுத்திடவில்லை. வைகோவும் ஜெயலலிதாவும் சந்தித்து ஒரு மாதத்துக்கு மேலாகி விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை இரண்டு பேரும் மறுக்கவில்லை. ஆகையினால் அந்தச் செய்தி உண்மைதான் என்று உறுதிபடத் தெரிகிறது.
கலைஞர் கருணõநிதி ஒரு தொகுதியை கூடுதலாகக் கொடுக்காததால் கோபித்துக் கொண்டு ஜெயலலிதாவிடம் தஞ்சமடைந்த வைகோ இன்று வரை ஜெயலலிதாவுக்கு விசுவாசமாகவே உள்ளார். ஆனால், ஜெயலலிதாவோ அந்த விசுவாசத்துக்கு கொஞ்சமும் மதிப்புக் கொடுக்காது காரியமாற்றுகிறார்.
வைகோ ஆறு தொகுதிகள் கேட்டபோது நான்கு தொகுதிகளை மட்டுமே ஜெயலலிதா கொடுத்துள்ளார். இரண்டு தொகுதிகள் குறைத்துக் கொடுக்கப்பட்ட போதும் அங்கிருந்து வெளியேற முடியாத சூழ்நிலைக் கைதியாகவுள் ளார் வைகோ.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றி இலகுவாகி விடும் என்பதனால் ஜெயலலிதாவின் சர்வாதிகாரத்துக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் வைகோ.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இருந்து வைகோ வெளியேற வேண்டும் என்பதையே தமிழக முதல்வர் எதிர்பார்க்கின்றார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் வைகோ தொடர்ந்தும் இருப்பதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான பிரசாரம் உத்வேகம் பெற்றுள்ளது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களை அலட்சியப்படுத்துவதில் ஜெயலலிதாவுக்கு நிகர் ஜெயலலிதா தான். கடந்த தமிழக சட்ட மன்றத் தேர்தலில் வைகோவும் ஜெயலலிதாவும் ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்யவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி சேர்ந்த போதும் ஜெயலலிதா காங்கிரஸ் தலைவி சோனியாவைக் கண்டு கொள்ளவில்லை. அதேபோன்று தான் வைகோவுடனும் நடந்துகொண்டார். அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் –வைகோ மேடையில் அமர்ந்தார். எனினும் வைகோவின் தேர்தல் பிரசாரத்திற்கு ஜெயலலிதா செல்வாரா என்ற சந்தேகம்
உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளிலும் வைகோவின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். இப்போதும் நான்கு தொகுதிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நான்கிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் வைகோ. ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும் அவரது அரசியல் எதிர்காலம் சிக்கல் நிறைந்ததாகி விடும்.

திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல் கட்சியில் உள்ள ஒரு சிலரிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பழைய நாடாளுமன்ற உறுப்பினர்களில் எட்டுப் பேருக்கு மட்டுமே மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 13 பேரும் புதுமுகங்கள். கட்சியில் ஈடுபõடு இல்லாதவர்களுக்கும் செல்வாக்கு இல்லாதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் குமுறுகின்றனர். பழையவர்களை விட புதியவர்கள் உற்சாகத்துடன் காரியமாற்றுவார்கள் என்ற நம்பிக்கை தி.மு.க. தலைமைக்கு இருப்பதால் புதியவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து தாவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் ஆகிய இருவரும் தமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஏமாந்து போனார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளும் முஸ்லிம்களுக்கு ஒரு தொகுதியைக் கூட ஒதுக்கவில்லை. முஸ்லிம் வேட்பாளர்களை இவை நிறுத்தாததால் முஸ்லிம்கள் வெறுப்புற்றுள்ளனர். காலந் தாழ்த்தி இதனை உணர்ந்த ஜெயலலிதா மத்திய சென்னை வேட்பாளரான எஸ்.எஸ். சந்திரனை நீக்கி விட்டு முஹம்மது அலி ஜின்னாவை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயங்கிய எஸ்.எஸ். சந்திரனை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதனால் அங்கு முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மத்திய சென்னையில் தயாநிதி மாறனுக்கு போட்டியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முஸ்லிம் வேட்பாளரை ஜெயலலிதா களத்தில் இறக்கியுள்ளார். மூன்று வேட்பாளர்களை அதிரடியாக மாற்றிய ஜெயலலிதா, இப்போது நான்காவது வேட்பாளøரயும் மாற்றியுள்ளார். வேட்பு மனுத் தாக்கல் செய்த பின்னர் அதனை வாபஸ் பெற வைத்தவர் ஜெயலலிதா.
அவரது அதிரடி அரசியலால் கலங்கிப் போயுள்ளனர் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக வேட்பாளர்கள்மாற்றம், வைகோவுடனான முறுகல் போன்றவற்றினால் ஜெயலலிதா குழம்பியிருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை தோல்வியடையச் செய்யலாம் என்ற நம்பிக்கையில் உள்ளார்
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/04/2009

No comments: