Monday, April 20, 2009

வீழ்ந்தது ஐ.பி.எல் சம்பியன்



தென் ஆபிரிக்காவில் நடைபெறும் இரண்டாவது ஐ.பி.எல். கூதீஞுணtதூ 20 போட்டியில் ஐ.பி.எல். சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸும் ரன்னரான சென்னை சுப்பர் கிங்ஸும் பரிதாபமாக தோல்வியைத் தழுவின.
கேப்டவுனில் நடந்த முதலாவது போட்டியின் சென்னை சூப்பர் கிங்ஸ் 75 ஓட்டங்களினால் மும்பை இந்தியன்ஸிடம் தோல்வியடைந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
அபிஷேக் நாயரின் அதிரடியும் மாலிங்கவின் பந்து வீச்சும் மும்பை இந்தியனுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.
அனுபவம் உள்ள ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சனத் ஜயசூரியவும் சச்சின் டெண்டுல்கரும் இணைந்து 5.5 ஓவர்களில் 39 ஓட்டங்கள் எடுத்தனர். முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடிய துஷார, ஜெயசூரியவை ஆட்டமிழக்கச் செய்து முதலாவது விக்கெட்டை வீழ்த்தினார். 20 பந்துகளுக்கும் முகம் கொடுத்த ஜயசூரிய 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
10 ஓட்டங்கள் எடுத்திருந்த சச்சின் டெண்டுல்கரின் இலகுவான பிடியைத் தவறவிட்ட ஹைடன், ஜயசூர்ய அடித்த பந்தைப் பிடித்து பரிகாரம் தேடினார். அடுத்து களமிறங்கிய தவான் 21 பந்துகளில் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தபோது கோனியின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பார்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பராக கடமையாற்றினார்.
அடுத்து களமிறங்கிய டுமினி 7 ஓட்டங்கள் எடுத்தபோது கோனி வீசிய பந்தை அவரிடமிமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். பிராவோ ஐந்து ஓட்டங்களில் சர்மாவின் பந்தை ஹைடனிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். மும்பை இந்தியன்ஸ் முதலாவது விக்கெட்டை 39 ஓட்டங்களிலும், இரண்டாவது விக்கெட்டை 82 ஓட்டங்களிலும் மூன்றாவது விக்கெட்டை 95 ஓட்டங்களிலும் நான்காவது விக்கெட்டை 102 ஓட்டங்களிலும் இழந்து தடுமாறியபோது களத்தில் புகுந்த அபிஷேக் நாயர் கதகளி ஆடி மும்பை அணிக்கு உயிரூட்டினார். 14 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கப்படவில்லை என்று வெறுப்படைந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினார் நாயர். பிளின்டொப்பின் ஓவரில் இரண்டு சிக்ஸர் அடித்து ரசிர்களை குதூகலப்படுத்தினார்.
14 பந்துகளைச் சந்தித்த நாயர் மூன்று சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்கள் எடுத்தார். ஓரமின் பந்தை துஷாரவிடம் பிடிகொடுத்து நாயர் ஆட்டமிழந்தபோது மும்பை அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை வீரர்கள் ஆட்டமிழந்து கொண்டிருந்தபோது மும்பை இந்தியனின் அணித்தலைவரான சச்சின் டெண்டுல்கர் மறுமுனையில் நின்று அரைச்சதம் கடந்தார்.
ஹர்பஜன் ஒரே ஒரு பௌண்டரியுடன் ஆட்டம் இழந்தார். சஹிர்கான் இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சச்சின் ஆட்டமிழக்காது 59 ஓட்டங்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் ஏழு விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது.
நான்கு ஓவர்கள் பந்து வீசிய கோனி 32 ஓட்டங்களை கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய துஷார 32 ஓட்டங்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர்கள் பந்துவீசிய பிளின்டொப் 44 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய ஓராம் 30 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய ஜோ ஹிந்தர் சம்மா 25 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
166 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாவது பந்தில் பர்த்தீப் பட்டேலை இழந்தது. மலிங்க வீசிய பந்தை ஸ்லிப்பில் சச்சினிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார் பார்தீப் பட்டேல்.
நம்பிக்கையுடன் களமிறங்கிய ரெய்னா எட்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
பிளின்டொப், ஹைடன் ஜோடி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு உயிரூட்ட முயற்சித்தது. இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக பாடுபட்டனர். 23 பந்துகளைச் சந்தித்த பிளின்டொப் ஒரு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 24 ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஜனின் பந்தை அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
ஹைடன் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் மும்பையின் வெற்றி உறுதியாகியது.
டோனி 36, ஓராம் 6 ஓட்டங்களை எடுத்தனர். 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. மாலிங்க, சஹீர்கான், பிராவோ, ஜயசூரிய ஆகியோர் தலா நான்கு ஓவர்கள் பந்து வீசினர்.
15 ஓட்டங்களைக் கொடுத்த மாலிங்க மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 34 ஓட்டங்களை கொடுத்த சஹீர்கான் விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. 27 ஓட்டங்களை கொடுத்த பிராவோ 2 விக்கெட்டை வீழ்த்தினார். 34 ஓட்டங்களைக் கொடுத்த ஜயசூரிய இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார்.
கேப்டவுனில் நடந்த இரண்டாவது போட்டியில் ஐ.பி.எல் சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸ் கும்ப்ளேயின் மாயாஜால பந்து வீச்சில் தோல்வி அடைந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்து முதலில் துடுப்பெடுத்தாடியது. பீட்டர்சன்னின் தலைமையில் களமிறங்கிய பெங்களூர் ரோயல் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.
பெங்களூர் ரோயல்ஸின் மூன்று விக்கெட்டையும் மாஸ்கரனாஸ் வீழ்த்தி அதிர்ச்சியளித்தார் ரைடர் 0, தவ்லர் 0, உத்தப்பா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் களமிறங்கிய தலைவர் பீட்டர்ஸனும் முன்னாள் தலைவர் ட்ராவிட்டும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். 30 பந்துகளைச் சந்தித்த பீட்டர்சன் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோல்கி மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அகில் 9, பிரவீன்குமார் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர் 48 பந்துகளுக்கு முகம் கொடுத்த ட்ராவிட் ஒரு சிக்சர் 8 பவுண்டரிகள் அடங்கான 66 ஓட்டங்கள் எடுத்தார். ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது.
மஸ்கரனாஸ் மூன்று விக்கெட்டுகளையும் முனாவ்பட்டேல், ஷேன் வோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். ஹெண்டர்சன் ஒரு விக்கெடை வீழ்த்தினார்.
ஐ.பி.எல். சம்பியனான ராஜஸ்தான் ரோயல் 15.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 58 ஓட்டங்களை மட்டுமே எடுத்து பரிதாபமாக தோல்வியடைந்தது.
ஹெண்டர்சன், யூசுப் பதான், ஜடேஜா ஆகியோர் அதிகபட்சமாக 11 ஓட்டங்கள் எடுத்தனர். மூன்று பேர் ஓட்ட மெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தனர். ஏனையோர் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர்.
3.1 ஓவர்கள் பந்து வீசிய அனில் கும்ப்ளே ஐந்து ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரைடர், பிரவீன்குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ட்ராவிட் தெரிவு செய்யப்பட்டார்.
முதல் நாள் நடந்த போட்டியில் முத்திரை பதித்த டெண்டுல்கர், ட்ராவிட், கும்ளே ஆகிய மூவரும் சர்வதேச twenty 20 போட்டியில் இருந்து ஒதுங்கியவர்கள் ஆவர்

No comments: