தமிழக அரசுக்கு எதிராகப் புதிய போராட்டக் களத்தை அறிவித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும், திராவிட முன்னேற்றக்கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது கண்வைத்தது. நில அபகரிப்புகளில் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு சில நாட்கள் சிறைவாசம் அனுபவித்த அவர்கள் பின்னர் பிணையில் வெளிவந்தனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பிணையில் வெளிவர முடியாத குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்கள் ஒருவருடம் பிணையில் வெளிவர முடியாது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படும் போது சட்டப்படி சந்திப்போம்என்று கூறிவந்த கருணாநிதி பொறுத்தது போ தும் பொங்கிஎழு என்று அறை கூவல் விடுத்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கைது நடவடிக்கையைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. நான்காம் திகதி நடைபெறும் இப்போராட்டத்தில் இலட்சக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறைக்குள் செல்ல வேண்டும் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார். தமிழக அரசின் அராஜகத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இப்போராட்டத்தில் அதிகளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா முதல்வரானதும் கருணாநிதி, ஸ்டா லின், அழகிரி ஆகியோர் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஸ்டாலினுக்கு எதிராகப் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதும், தன் மீது குற்றம் இருந்தால் தன்னை கைது செய்யும்படி சவால் விட்டார். ஸ்டாலினின் சவாலை சமாளிக்க முடியாத காவல்துறை அமைதியாகிவிட்டது. அழகிரியின் மனைவியின் கட்டிடம் மீதும் நில அபகரிப்புப் புகார் சுமத்தப்பட்டது. இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அழகிரியின் சகாக்கள் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையால் மதுரையை ஆட்டிப் படைத்த அழகிரி அமைதியாக இருக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது தமிழகமே கொந்தளித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர சகல அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படும் போது எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டனத்தை தெரிவிக்கவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கைது படலத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சி செய்கிறது திராவிட மு ன்ற்றக் கழகம்.
சட்டத்தில் உள்ள ஓட்டைகளைத் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளார் ஜெயலலிதா. வைகோவைச் சிறையில் தள்ளி அவரது அரசியல் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தார். அன்று தமிழகம் கொந்தளித்தது. நாட்டைப் பாதுகாக்கும் சட்டங்கள் மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதில் ஜெயலலிதா முதன்மையானவர். 4 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறைநிரப்பும் போராட்டத்தைத் தடுப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்வார் என்பதை நன்கு அறிந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக பொலிஸ் டி.ஜி.பி. யிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தலைவர்களையும், சிறை நிரப்பும் போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களையும் கைது செய்தால் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என தமிழக அரசு நினைக்கக் கூடும். ஆகையினால் முன்னெச்சரிக்கையாக வீட்டில் எவரையும் கைது செய்யக் கூடாது என்று மனுக்கொடுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம்.
திராவிட முன்னேற்றக் கழக சட்டத் துறை செயலர் ஆர்.எஸ். பாரதி, தமிழக பொலிஸ் டி.ஜி.பி.யிடம் கொடுத்த மனுவில் 12.12. 2003 அன்று அன்றைய சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பின் நகல் இணைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 15.12.2003 அன்று அறவழியில் நடைபெற இருந்த போராட்டம் சார்பில் ஆற்காடு வீராசாமி ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பில் பொலிஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாரையும் வீட்டில் சென்று கைது செய்யக் கூடாது. பொது இடத்தில் குற்றம் புரிய முயற்சி செய்தால் அவர்களைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யலாம். அறப்போர் மறியலில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஊர்வலமாகச் செல்வதற்கும், கோஷங்கள் எழுப்புவதற்கும் காவல்துறை அனுமதித்திடல் வேண்டும். மேலும் ஊர்வலம் தொடங்கும் இடத்தையும் முடிவடையும் இடத்தையும் காவல் துறை எழுத்து பூர்வமாகத் தெரிவித்திட வேண்டும். இடைப்பட்ட தூரத்தில் எவரையும் கைது செய்யக்கூடாது.
தமிழக ஆட்சியைப் பறிகொடுத்தாலும் தமிழகத்தில் தனது செல்வாக்கைப் பகிரங்கப்படுத்த இந்தக் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த திராவிட முன்னேற்றக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக சட்ட சபை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், ஒன்றியச் செயலர்கள் தமது சக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றத் தலைøம விரும்புகிறது.
சிறை நிரப்பும் போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற ஸ்டாலின் களத்தில் இறங்கியுள்ளார். இப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கு நீதிமன்றத்தை நாடியுள்ளார் கனிமொழி. இப்போராட்டத்துக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பது போல ஒதுங்கியுள்ளமை அழகிரி திராவிட முன்னேற்றக் கழகக் கோஷ்டிப் பூசலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார் கருணாநிதி. பிடி கொடாமல் நழுவுகிறார் அழகிரி.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 01/07/12
No comments:
Post a Comment