Sunday, July 29, 2012

உற்சாகமான கருணாநிதி கவலைபடாத ஜெயலலிதா



இந்திய ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் வெற்றி, சிறை நிரப்புப் போராட்டத்தால் தமிழக அரசு மிரண்டது. ஸ்பெக்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி, ஆர்.ராசா ஆகியோர் வெளியே வந்தது என்பவற்றினால் கருணாநிதி மகிழ்ச்சியாக உள்ளார். இந்திய ஜனாதிபதித் தேர்தலில் பிரணாப் முகர்ஜி எதிர்பார்த்ததை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் இடையேயான இடைவெளி இந்திய ஜனாதிபதித் தேர்தலின் மூலம் வெகுவாகக் குறைந்துள்ளது. 

தமிழகத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் கருணாநிதியுடன் அல்லது ஜெயலலிதாவுடன் கூட்டு சேர வேண்டிய நிலையில் உள்ளது. காங்கிரஸ்  ஜெயலலிதா கூட்டணி என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியாது. கூட்டணிக் கட்சிக்கு நெருக்கடி கொடுக்காத நல்ல பிள்ளையான கருணாநிதியுடன் கூட்டுச் சேர்வதையே சோனியா காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக்கழகத்தின் மீதும் கருணாநிதி மீதும் விருப்பமில்லாதவர்களும் சோனியாவின் விருப்பத்தை மீற முடியாது அமைதியாக இருக்கின்றார்கள்.

ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் இழந்து விட்ட அமைச்சுப் பதவியை மீண்டும் பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் திராவிட முன்னேற்றக்கழகத்திடம் உள்ளது. ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினை பரபரப்பாக பேசப்பட்ட நேரம் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அமைச்சுப் பதவியையே ஆர்.ராசாவும், தயாநிதி மாறனும் ராஜினாமாச் செய்தனர். ஸ்பெக்ரம் ஊழலில் தயாநிதி மாறனும் சிக்குகிறார். கைது செய்யப்படப் போகிறார் என்ற செய்தி காற்றுடன் கலந்து விட்டது. அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சுப் பதவியை ஏற்பதற்கு தயாராக உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம் சோனியா, மன்மோகன்சிங்கும் ரி.ஆர்.பாலு மீது கொண்ட கோபம் தணிந்துள்ளது. ஆகையினால் ரி.ஆர்.பாலு அமைச்சராகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்ட சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் சிறைநிரப்புப் போராட்டத்தின் மூலம் புத்துயிர் பெற்றுள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். வேறு கட்சிகளிலிருந்து வெளியேறிய 4200 பேர் அண்மையில் திராவிட முன்னேற்றக்கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் புதுத் தெம்பை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சியைப் பிரமாண்டமாக நடத்தி ஏனைய கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது திராவிட முன்னேற்றம் கழகம்.

இந்திய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் நாட்டில் பி.ஏ.சல்மா அதிக வாக்குகளைப் பெற்றார். பி.ஏ.சல்மாவுக்கு 145 வாக்குகளும்  முகர்ஜிக்கு 45 வாக்குகள் கிடைத்தன. திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ் கட்சி, புதிய தமிழகம், மனித நேயக்கட்சி, மார்க்ஸிசக்கட்சி ஆகியன முகர்ஜிக்கு வாக்களித்தன. பி.ஏ.சல்மாவுக்கு வாக்களித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 150 உறுப்பினர்கள் உள்ளனர். இரண்டு உறுப்பினர்களின் வாக்கு செல்லாதவையாகின.
துணை ஜனாதிபதி தேர்தல் ஓகஸ்ட் 7 ஆம் திகதி நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதியாக அன்சாரியையே காங்கிரஸ் கட்சி மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளது. பாரதீய ஜனதாக்கட்சி ஜஸ்வந்த் சிங்கை துணை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க உள்ளது. காங்கிரஸ் கட்சியில் கூட்டணி இல்லாத கட்சிகளிடம் ஆதரவு கோர பாரதீய ஜனதாக்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலின் போது பாரதீய ஜனதாக்கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா ஆகியவை முகர்ஜிக்கு வாக்களித்தன. ஆனால் துணை ஜனாதிபதி தேர்தலில் அவை ஜஸ்வந்த்சிங்கை ஆதரிக்க உள்ளன.
துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் உள்ள உறுப்பினர்களே வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். சட்ட சபை உறுப்பினர்கள் வாக்களிப்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்களும் மேல் சபையில் 245 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத பகுஜன சமாஜகட்சி, சமாஜ்வாதி, ராஷ்டிதீய ஜனதாத்தளம் ஆகியன ஹமீத் அன்சாரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக சுமார் 450 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீத் அன்சாரிக்கு வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதாக்கூட்டணியில் 215 நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஜஸ்வந்த் சிங்குக்கு ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் தமிழக அரசுக்கு எதிராக அடக்கி வாசிப்பதனால் எதிர்க்கட்சி என்ற ஸ்தானத்தைப் பெறுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் முயற்சி செய்கிறது. தமிழக அரசு விடுத்த தவறுகளைத் தட்டிக் கேட்காது ஜெயலலிதாவை குறி வைத்து பேசுவதி@லயே விஜயகாந்த் காலம் கடத்துகிறார். விஜயகாந்தின் செல்வாக்குக் குறைந்து விட்டது என்பதை இடைத் தேர்தல்களின் மூலம் ஜெயலலிதா நிரூபித்துள்ளார்.
இன்னொரு அரசியல் கட்சியின் ஆதரவு இல்லாமல் விஜயகாந்த்தால் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதாவை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்து காத்திருக்கிறார் விஜயகாந்த்.

 வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு29/07/12

No comments: