Thursday, July 26, 2012

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 38


காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களின் நல் வாழ்வுக்காகப் போராடும் ஒருவனை பயங்கரவாதி என முத்திரையிட்டு அவனை அழிப்பதற்காக சிறப்பு அதிரடிப் படையைக் காட்டுக்குள் அனுப்பியது அரசாங்கம். அதிரடிப் படைத் தலைவனின் மனைவியைக் கடத்திச் செல்கிறான் பழங்குடி மக்களின் வாழ்வுக்காகப் போராடுபவன். அவள் அழகில் மயங்கிய அவன் ஒருதலைப்பட்ச‌மாகக் காதலிக்கின்றான். 14 நாட்களின் பின் அதிரடிப்படைத் தலைவனின் மனைவி விடுதலை செய்யப்படுகிறார். தன் மனைவி மீது சந்தேகப்பட்டு கேட்கக்கூடாத கேள்விகளைக் கேட்கிறான் அதிரடிப்படைத் தலைவன். எதிரியின் கட்டுப்பாட்டில் பிணைக் கைதியாக இருந்த மனைவியைச் சந்தேகப்படுகிறான் கணவன். இப்படிப்பட்ட சிக்கலான கதையுடன்2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ராவணன்.
காட்டுக்குள் வாழும் பழங்குடி மக்களுக்கு கடவுள்போல் உதவி செய்கிறார் விக்ரம். அந்த மக்களின் பிரச்சினைகள் தேவைகள் அனைத்தையும் தீர்த்து வைக்கிறார். தவறு செய்பவர்களை தயவு தாட்சண்யமின்றி போட்டுத் தள்ளுகிறார். வீரா என்ற விக்ரமின் பெயரைக் கேட்டாலே தப்புச் செய்யும் பழங்குடி மக்கள் வெலவெலத்துப் போவார்கள். விக்ரம் சட்டத்தைத் தன் கையில் எடுத்ததால் அரசாங்கம் அவனைப் பயங்கரவாதியாகப் பார்த்தது. விக்ரமைக் கொல்வதற்கு என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் பிருத்விராஜை அனுப்புகிறது.
பலம் பொருந்திய அதிரடிப் படையின் உதவியுடன் விக்ரமைத் தேடி காட்டினுள் நுழைகிறார் பிருத்விராஜ். அந்தக் காட்டைப் பற்றி நன்கு தெரிந்த காட்டு இலாகா அதிகாரியான கார்த்திக் பிருத்விராஜுக்கும் அவரது படைக்கும் உதவி செய்கிறார். பிருத்விராஜின் மனைவி அழகுச்சிலை ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்திச் செல்கிறார். பிருத்விராஜைப் பழிவாங்குவதற்கு ஐஸ்வர்யா ராயைக் கொலை செய்ய முடிவு செய்கிறார் விக்ரம். ஐஸ்வர்யா ராயின் துணிச்சலால் கொலை செய்யும் முடிவை மாற்றுகிறார் விக்ரம்.

மலை உச்சியில் துப்பாக்கியைக் காட்டி ஐஸ்வர்யா ராயை மிரட்டுகிறார் விக்ரம். என் மரணம் உன் கையில் இல்லை எனச் சவால் விட்ட ஐஸ்வர்யா ராய் மலை உச்சியில் இருந்து குதிக்கிறார். அதிர்ச்சியடைந்த விக்ரம் மலை உச்சியில் இருந்து கொடிகளின் உதவியுடன் கீழே இறங்குகிறார். பேரிரைச்சலுடன் விழும் அருவி சலசலத்து ஓடும் நீரோடையில் ஐஸ்வர்யா ராயைத் தேடுகிறார் . மேலே நிமிர்ந்து பார்க்கிறார் விக்ரம். மரக்கிளையில் சிக்கி இருக்கும் ஐஸ்வர்யா ராயை காண்கிறார். ஐஸ்வர்யா ராயின் பாரம் தாங்காத மரக்கிளை முறிந்து நீரோடையில் விழுகிறது. கண் விழித்துப் பார்க்கும் ஐஸ்வர்யா ராய் எதிரே இருக்கும் விக்ரமைக் கண்டதும் கலக்கமடைகிறார். நடக்க முடியாமல் தடுமாறும் ஐஸ்வர்யா ராய்க்கு உதவி செய்ய கையை நீட்டுகிறார் விக்ரம். விக்ரமைத் தொட விரும்பாத ஐஸ்வர்யா ராய் தடுமாறி நடக்கிறார். தடியின் ஒரு முனையில் விக்ரம் பிடித்து முன்னே நடக்க, மறுமுனையில் பிடித்துப் பின் தொடர்ந்தார் ஐஸ்வர்யா ராய்.
(
ஐஸ்வர்யா ராயைக் கடத்தி வந்து கண்களைக் கட்டி, கைகளைக் கட்டி துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய போதும் ஐஸ்வர்யா ராயின் கண்களில் பய உணர்ச்சி வரவில்லை என்பதால் அவரை கொல்ல முடியாமல் தவிக்கிறார் விக்ரம். விக்ரமின் அண்ணா பிரபு, தம்பி சித்தார்த் ஆகியோருடன் காட்டுக்குள் நடக்கும் ஒரு குட்டித் தர்பாரை கண்டு ஆச்சரியப்படுகிறார் ஐஸ்வர்யா ராய். பயங்கரவாதி என அரசாங்கம் முத்திரை குத்திய விக்ரமின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் பழங்குடி மக்களைக் கண்டு வியப்படைகிறார் ஐஸ்வர்யா ராய்.
விக்ரமிடமிருந்து ஐஸ்வர்யா ராய் தப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைகின்றன. மனைவியை மீட்பதற்காக விக்ரம் இருக்கும் இடத்தைத் தேடித் திரிகிறார் பிருத்விராஜ். விக்ரமின் முன்னால் ஒரு இளைஞனைக் கொண்டு வந்து நிறுத்துகின்றனர். அவனைக் கண்டதும் விக்ரமின் கண்களில் இருந்து கோபக் கனல் வீசியது. அந்த இளைஞனை அணு அணுவாகச் சித்திரவதை செய்கிறார் விக்ரம். அதனைப் பார்க்கச் சகிக்காது கண்களை மூடுகிறார் ஐஸ்வர்யா ராய். தன் அன்புத் தங்கையின் கணவனான அந்த இளைஞனின் ஒரு கையை வெட்டி மரத்தில் தொங்க விடுகிறார் விக்ரம். மரத்தில் தொங்கியவனை பிருத்விராஜ் குழுவினர் மீட்கின்றனர். இது எமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என கார்த்திக் கூறுகிறார்.

பிருத்விராஜின் தலைமையிலான அதிரடிப் படை முகாமினுள் நுழைந்த விக்ரம் பிரபு குழுவினர் அங்கிருந்த ஆயுதங்களை அபகரித்ததுடன் பொலிஸ் அதிகாரி ஒருவரையும் கடத்தி வருகின்றனர். அந்தப் பொலிஸ் அதிகாரிக்கு மொட்டை அடித்து தலை தெரியும் படி நிலத்தினுள் புதைத்து வைக்கிறார் விக்ரம். சித்திரவதையினால் மயங்கி உள்ள அந்த பொலிஸ் அதிகாரியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் ஐஸ்வர்யா ராய். மயங்கிக் கிடக்கும் பொலிஸ் அதிகாரியை உதைத்தபடி தன் தங்கை எங்கே என்று கேட்கிறார் விக்ரம். அந்தப் பொலிஸ் அதிகாரி மிகவும் நல்லவர். தாயின் மீது மதிப்பும் பயமும் உள்ளவர் என்று கூறுகிறார் ஐஸ்வர்யா ராய்.
அந்த பொலிஸ் அதிகாரியின் மீதும் பொலிஸ்காரர் மீதும் விக்ரம் கொண்ட வெறித்தனமான பகைக்கான கதையை ஐஸ்வர்யா ராய் அறிகிறார். விக்ரமின் ஒரேயொரு அன்புத் தங்கை மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனைக் காதலித்தாள். அந்தத் திருமண வைபவம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பிருத்விராஜின் தலைமையிலான பொலிஸ் படை புகுந்து விக்ரமைக் கைது செய்ய முயற்சித்தது. பொலிஸ் அதிகாரிகள் விக்ரமை நெருங்க விடாது பழங்குடி மக்கள் தடுத்தனர். பிருத்விராஜின் துப்பாக்கிக் குண்டு விக்ரமின் கழுத்தைப் பதம் பார்த்தது. பழங்குடி மக்கள் பொலிஸாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு விக்ரமைக் காப்பாற்றினார்கள். பொலிஸாரைக் கண்ட மாப்பிள்ளை தலைமறைவாகி விட்டார்.

விக்ரமைப் பிடிக்க முடியாது ஏமாற்றமடைந்த பொலிஸார் விக்ரமின் தங்கை பிரியாமணியை பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச் செல்கின்றனர். இன்று உன் திருமணம் நாள். மாப்பிள்ளை ஓடிவிட்டான் முதல் இரவுக்கு யார் வேண்டும் என்று பிரியாமணியை கேட்டு துன்புறுத்துகின்றனர் பொலிஸார். அன்று இரவு முழுவதும் பிரியாமணியைச் சீரழித்து விட்டுச் செல்ல அனுமதித்தனர். எல்லா உண்மையையும் விக்ரமுக்குச் சொல்லி பிரியாமணி தற்கொலைசெய்கிறார். பிரியாமணியின் வாழ்க்கை சீரழிந்ததற்கு தன் கணவனும் காரணம் என்பதை அறிந்த ஐஸ்வர்யாராய் மனம் வெதும்புகிறார். ஐஸ்வர்யா ராயின் விருப்பத்துக்காக பொலிஸ் அதிகாரி விடுதலை செய்தார் விக்ரம்.

ஐஸ்வர்யாவைத் தேடி வந்த கார்த்திக் பிரபுவிடம் பிடிபடுகிறர். சமரசம் பேசலாம் என கார்த்தி கூறுகிறார். விக்ரமின் கடைத்தம்பி சித்தார்த்தும் சமாதானமாக செல்வோம் என்று கூறுகிறார். சமாதானம் பேசச் செல்லும் சித்தார்த்தை சுட்டுக் கொல்கிறார் பிருத்விராஜ். வெருண்டெழுந்த விக்ரம். பிரவு ஆகியோர் அதிரடிப் படை முகாமைத் தாக்குகின்றனர். பாலத்தின் இரு பக்கங்களிலும் தீப்பற்றி எரிகையில் நடுவிலே விக்ரமும் பிருத்விராஜும் மோதுகின்றனர். மரத்தி@ல கட்டப்பட்டிருக்கும் ஐஸ்வர்யா இந்த மோதலைப் பார்த்துப் பதை பதைக்கிறார். தீப்பற்றி பாலம் உடைந்து விழுகிறது. சிறிது நேரத்தில் விக்ரம் வருகிறார். தன் கணவன் எங்கே எனக் கேட்கிறார். ஐஸ்வர்யாவிடம் உடும்பு போல் தவழ்ந்து மேலே வருகிறான் எனக் கூறிவிட்டுச் செல்கிறார் விக்ரம்.

மேலே வந்த பிருத்திவ்விராஜ், ஐஸ்வர்யாவை கண்டு சந்தோஷப்படுகிறார். இந்தப் போராட்டம் வேண்டாம் வீட்டுக்குப் போவோம் என்று கூறுகிறார். ஐஸ்வர்யா ரயிலில் இருவரும் செல்லும் போது 14 நாட்கள் அவனுடன்இருந்தாய். அவன் உன்னைத் தொட்டானா? என்று கேட்கிறார் பிருத்விராஜ். மனைவியிடம் கணவன் கேட்கக்கூடாத கேள்விகளைத் தன் கணவன் கேட்டதால் துடிதுடிக்கிறார் ஐஸ்வர்யாராய். இல்லை என்கிறார் ஐஸ்வர்யாராய் பொய் சொல்வதாகக் கூறுகிறார். பிருத்திவிராஜ் ரயிலின் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி விட்டு ரயிலியிருந்து இறங்கி விக்ரமைத் தேடிச் செல்கிறார் ஐஸ்வர்யராய்.


விக்ரமைச் சந்தித்து ஐஸ்வர்யாராய் தன் கணவனிடம் என்ன கூறினாய் எனக் @கட்கிறாள். பாலத்தில் சண்டையிடும் போது எல்லாவற்றையும் கூறினார் என் கைகறைபடிந்ததை உன்மனைவிக்காக என்மனசு மாற முன் அவளைக் கூட்டிச் செல் என்றுசொன்ன‌தாகச் சொல்கிறார் விக்ரம். இவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கையில் அதிடிப்படையுடன் அங்கு வருகிறார். பிருத்திவிராஜின் துப்பாக்கியைக் குறி பார்க்க இடையிலே புகுந்த ஐஸ்வர்யாராய் சுட வேண்டாம் என்று கூறுகிறார். ஐஸ்வர்யாராயைத் தொடாமல் இருந்த விக்ரம் பெண்ணின் பின்னால் நின்று உயிர்ப் பிச்சை கேட்க விரும்பாது அவரது தலையில் கையை வைத்து அமுக்குகிறார். அந்த இடைவெளியில் பிருத்திவிராஜின் தோட்டாக்கள் விக்ரமின் உடலில் பாய்ந்தன. அதிரடிப் படையினரின் துப்பாக்கிகளும் விக்ரமின் உடலைச் சல்லடையாக்கின. விக்ரம் ஐஸ்வர்யாராய் மீது ஒருதலைக் காதல் கொள்கிறார். அதை பெரிதாக்காது அடக்கி வைத்தார் மணிரத்தினம்.


விக்ரம், பிரபு, ஐஸ்வர்யா கார்த்திக் பிருத்திவிராஜ் சித்தார்த் பிரியாமணி ஆகியோர் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். காடுமலை, அருவி, பாலம், நீரோடை என்பன படத்தின் சகல காட்சிகளையும் மனதில் நிறுத்தின. ஒளிப்பதிவு சந்தோஷ்சிவன், மணிகண்டன் சந்தோஷ்சிவனின் முத்திரை பளிச்செனத் தெரிந்தது. பாடல்கள் வைரமுத்து, இசை ஏ.ஆர்.ரஹ்மான் ராவணன் படத்துக்கு பாடல்களும் இசையும் பெரும்பாலமாக உள்ளன. வசனம் சுஹாசினி பெண்களை முதன்மைப்படுத்தும் வசனங்களை ஆங்காங்கே தூவியுள்ளார். திரைக்கதை இயக்கம் மணிரத்னம்.

வீரா வீராவீரா வீரா, உயிரே போகுது உயிரே போகுது, காட்டுச்சிறுக்கிக் காட்டுக் சிறுக்கியே, கள்வனே கள்வனே ஆகிய பாடல்கள் மனதைக் கவர்ந்தன. காட்டுச் சிறுக்கிப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. கள்வனே கள்வனே என்ற பாடலுக்கு ஐஸ்வர்யாவின் நடனம் சிறப்பாக இருந்தது. தொலைக்காட்சிகள் இப்பாடலை அடிக்கடி ஒளிபரப்பாது வஞ்சகம் செய்து விட்டன.

விக்ரமின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க தன் மனைவி மீது சந்தேகப்பட்டதாக பிருத்திவிராஜ் பொய் கூறியதாகக் கதையை முடித்து தப்பிவிட்டார் மணிரத்தினம் பெரும் எதிர்பார்ப்புடன் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் தோல்வியடைந்தது. ஆனால் ஹிந்தியில் விக்ரமுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ராமாயணக் கதையை@ய ராவணனாக மணிரத்தினம் உருவாக்குகிறார் என்ற உண்மை தெரிந்ததால் படத்துடன் ஒன்றிப் போக முடியவில்லை. அடுத்து இது தான் நடக்கும் என்று தெரிந்து விடுகிறது.

அக்கினி நட்சத்திரத்தில் எதிரும் புதிருமாக நடித்த பிரபுவும், கார்த்திக்கும் இப்படத்திலும் எதிரும் புதிருமாக நடித்தனர். 
ரமணி
மித்திரன்01/07/12




2 comments:

Doha Talkies said...

அருமையான பதிவு.
நீங்கள் சொல்வது உண்மை தான்.

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா