வெஸ்ட் இண்டீசில் நடந்த 9வது உலக கோப்பை போட்டி யாருக்குமே
திருப்தியாக அமையவில்லை... ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியாவைத் தவிர! பெர்முடா, கனடா, நெதர்லாந்து, அயர்லாந்து, கென்யா, ஸ்காட்லாந்து என்று
தேவையில்லாமல் கற்றுக்குட்டிகளை அதிகம் சேர்த்து மொத்தம் 16 அணிகளை நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில்
மோதவைத்தனர். உலக கோப்பையில் பவர் பிளே முதல் முறையாக அறிமுகமானது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றிலேயே ஜகா
வாங்கியது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. பயிற்சியாளர் கிரெக் சேப்பலின் பிரித்தாளும் சூழ்ச்சி, வலுவான இந்திய அணியை
சுக்குநூறாக சிதைத்துவிட்டதாக புகார் எழுந்ததுடன், சச்சினை 4வது வீரராகக் களமிறக்கிய அவரது வியூகம் கடுமையாக
விமர்சிக்கப்பட்டது.
பி
பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை சந்தித்தது.
போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த அந்த போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 49.3 ஓவரில் 191 ரன்னுக்கு ஆல் அவுட்
ஆனது. கங்குலி 66, யுவராஜ் 47 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர் (டோனி, ஹர்பஜன், அகர்கர் டக் அவுட்).
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன் எடுத்து வென்றது. அடுத்து பெர்முடாவுடன் நடந்த லீக்
ஆட்டத்தில் இந்தியா 257 ரன் வித்தியாசத்தில் வென்றது. கங்குலி 89, சேவக் 114, டோனி 29, யுவராஜ் 83, சச்சின் 57* ரன் விளாச, இந்தியா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு
413 ரன் எடுத்தது.
பெர்முடா 43.1 ஓவரில் 156 ரன்னுக்கு ஆல் அவுட். இந்த போட்டியில் சச்சின் 6வது வீரராகக் களமிறக்கப்பட்டார்.
3வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொண்டது
இந்தியா. இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுக்க, இந்தியா 43.3 ஓவரில் 185 ரன்னுக்கு சுருண்டது. சேவக் 48, கேப்டன் டிராவிட் 60, உத்தப்பா 18, ஹர்பஜன் 17* ரன் எடுத்தனர்.
சச்சின், டோனி டக் அவுட்.
சூப்பர் 8 சுற்றுக்கு கூட
முன்னேற முடியாமல் இந்திய அணி ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. கங்குலி சேவக், உத்தப்பா கங்குலி என்று தொடக்க
ஜோடிகளை மாற்றியதும், சச்சினை 4வது, 6வது என்று பேட்டிங் வரிசையில் அலைக்கழித்ததும் தோல்விக்கு
முக்கிய காரணமாக அமைந்தது. அயர்லாந்துக்கு எதிராக நடந்த 2வது லீக் ஆட்டத்தில் தோற்ற பாகிஸ்தான்
அணியும் பரிதாபமாக வெளியேற்றப்பட்டது. வங்கதேசம், அயர்லாந்து அணிகள் சூப்பர் 8ல் இடம் பெற்றதால், சுவாரசியம்
வெகுவாகக் குறைந்துவிட்டது.
வெஸ்ட்
இண்டீஸ், இங்கிலாந்து அணிகள்
சுத்தமாக பார்மில் இல்லை. உள்ளூர் நட்சத்திரம் பிரையன் லாராவுக்கு இதுவே கடைசி உலக
கோப்பையாக அமைந்தது. முதலாவது அரை இறுதியில் நியூசிலாந்து அணியை 81 ரன் வித்தியாசத்தில்
வீழ்த்தி இலங்கை பைனலுக்கு முன்னேறியது. மகிளா ஜெயவர்தனே 115 ரன் விளாசினார். இரண்டாவது அரை இறுதியில்
ஆஸ்திரேலியாவுடன் மோதிய தென் ஆப்ரிக்க வீரர்கள், வழக்கம்போல ‘திக்பிரமை’ பிடித்து நின்றனர். 9.5 ஓவரில் 27 ரன்னுக்கு 5 விக்கெட் என்ற ஆரம்ப
அதிர்ச்சியில் இருந்து அந்த அணியால் மீள முடியவில்லை. 43.5 ஓவரில் 149 ரன்னுக்கு ஆல் அவுட்
ஆனது. ஆஸ்திரேலியா 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து எளிதாக வென்று இறுதிப் போட்டிக்கு
தகுதி பெற்றது.
பிரிட்ஜ்டவுன், கென்சிங்டன் ஓவல்
மைதானத்தில் நடந்த பைனல் மழையால் பாதிக்கப்பட, தலா 38 ஓவர் கொண்ட போட்டியாக அறிவித்தனர். ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு
281 ரன் குவித்தது.
பேட்டிங் கிளவுசுக்குள் கோல்ப் பந்தை வைத்துக் கொண்டு விளையாடிய தொடக்க வீரர் கில்கிறிஸ்ட் 149 ரன் (104 பந்து, 13 பவுண்டரி, 8 சிக்சர்)
விளாசினார். இலங்கைக்கு 36 ஓவரில் 269 ரன் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது (டி/எல் விதி).
அந்த அணியால் 36 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜெயசூரியா 63, சங்கக்கரா 54 ரன் எடுக்க, மற்ற வீரர்கள்
ஒத்துழைக்கவில்லை. 53 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை கைப்பற்றி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தது.
அந்த அணி வென்ற 4வது உலக கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆடம்
கில்கிறிஸ்ட் ஆட்ட நாயகனாகவும் (பைனல்), தொடர் நாயகனாக கிளென் மெக்ராத்தும் தேர்வு செய்யப்பட்டனர்.
சர்ச்சை
ஓட்டல்
அறையில் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்த பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர், பின்னர் ஜமைக்கா
மருத்துவமனையில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
பாகிஸ்தான் வீரர்களுக்கிடையே மோதல், அயர்லாந்துக்கு எதிராக தோற்றதில்
மேட்ச் பிக்சிங், இதை மறைக்கவே உல்மர் படுகொலை செய்யப்பட்டார் என்று பல்வேறு
வதந்திகள் உலா வந்தன. பின்னர் அது இயற்கை மரணம் என்று அறிவிக்கப்பட்டது.
*வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் டிக்கெட் கட்டணத்தை
தாறுமாறாக நிர்ணயித்ததால் பெரும்பாலான ஸ்டேடியங்கள் வெறிச்சோடிக் கிடந்தன. இசைக்
கருவிகளை எடுத்து வர ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், போட்டிகள் டல்
அடித்தன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல் சுற்றிலேயே வெளியேறியதும் சுவாரசியம் குறைய
முக்கிய காரணமாகிவிட்டது.
* ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் 11 போட்டியில் 659 ரன் குவித்து (அதிகம் 158, சராசரி 73.22) முதலிடம்
பிடித்தார்.
* விக்கெட் வேட்டையில் ஆஸி. வேகம் கிளென் மெக்ராத் 26 விக்கெட் கைப்பற்றி
(சிறப்பு 3/14) முதலிடம் பிடித்தார்.
*வங்கதேச அணியில் தொடக்க வீரராகக் களமிறங்கிய தமிம் இக்பால் (17வயது), இந்தியாவுக்கு
எதிராக சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார்.
* நெதர்லாந்தின் டான் வான் பங்கே வீசிய ஓவரில் தென் ஆப்ரிக்காவின்
ஹெர்ஷல் கிப்ஸ் 6 சிக்சர் விளாசி சோபர்ஸ், சாஸ்திரி சாதனையை சமன் செய்தார்.
* சூப்பர் 8 சுற்றில் இலங்கையுடன் மோதிய தென் ஆப்ரிக்க அணிக்கு கைவசம் 5 விக்கெட் இருக்க 4 ரன் தேவைப்பட்ட
நிலையில், மலிங்கா 4 பந்தில் 4 விக்கெட்டுகளை
வீழ்த்த கடும் நெருக்கடி ஏற்பட்டது. அவர் 45வது ஓவரின் கடைசி 2 பந்தில் 2 விக்கெட்டும், 47வது ஓவரின் முதல் 2 பந்தில் 2 விக்கெட்டும் வீழ்த்தி ‘ஹாட்ரிக்’கையும் தாண்டி அபார சாதனை படைத்தார். எனினும், தென் ஆப்ரிக்கா ஒரு
விக்கெட் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி வென்றது
No comments:
Post a Comment