Tuesday, February 3, 2015

2011,சொந்தமண்ணில் சாதித்தது இந்தியா

பத்தாவது உலக கோப்பை தொடரை இந்தியா, இலங்கை, வங்கதேச நாடுகள் இணைந்து நடத்தின. கடந்த முறை வெஸ்ட் இண்டீசில் நடந்த  தொடரில் 16 அணிகளை சேர்த்தது உலக மகா சொதப்பலாக அமைந்ததால் உஷாரான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இம்முறை 14 அணிகளை பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதவைத்தது. ஊறுகாயாக கனடா, அயர்லாந்து, கென்யா, நெதர்லாந்து அணிகள் இடம்பெற்றன. இரு பிரிவிலும்  முதல் 4 இடங்களைப் பிடித்த அணிகள் கால் இறுதியில் மோதும் வகையில் அட்டவணை அமைந்தது. நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யக்  கோரும் டிஆர்எஸ் முறை உலக கோப்பையில் அறிமுகமானது. மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்காக உலக கோப்பையை வெல்வோம்  என்ற உறுதியுடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர். பி பிரிவு தொடக்க லீக் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் மோதிய இந்தியா, 50 ஓவரில் 4 விக்கெட்  இழப்புக்கு 370 ரன் குவித்தது. 

சேவக் 175, கோஹ்லி 100* ரன் விளாசினர். வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன் எடுத்து தோற்றது. பெங்களூர் எம்.சின்னசாமி  ஸ்டேடியத்தில் இந்தியா  இங்கிலாந்து மோதிய பரபரப்பான லீக் ஆட்டம் சரிசமனில் முடிந்தது. இந்தியா 49.5 ஓவரில் 338 ரன் குவித்து ஆல் அவுட்  ஆனது. சச்சின் 120, கம்பீர் 51, யுவராஜ் 58 ரன் விளாசினர். இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 338 ரன் எடுக்க, யாருக்கும் வெற்றி  தோல்வியின்றி ஆட்டம் டைஆனது. கேப்டன் ஸ்டிராஸ் 158, பெல் 69 ரன் விளாசினர். இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன.  அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்த இந்தியா, நாக்பூரில் தென் ஆப்ரிக்காவுடன் நடந்த லீக் ஆட்டத்தில் போராடி  தோற்றது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா 48.4 ஓவரில் 296 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சேவக் 79, சச்சின் 111, கம்பீர் 69 ரன் விளாசமற்ற வீரர்கள் படுமோசமாக விளையாடி 350+ ரன் எடுக்கும் வாய்ப்பை வீணடித்தனர். 

39.3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 267 ரன் என்ற நிலையில் இருந்து, மேற்கொண்டு 29 ரன் மட்டுமே சேர்த்து சுருண்டனர் (4 பேர் டக் அவுட்). தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அம்லா 61, காலிஸ் 69, டிவில்லியர்ஸ் 52 ரன் எடுத்தனர்.  வெஸ்ட் இண்டீசுடன் சென்னையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா 80 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா 49.1 ஓவரில் 268 ரன்  ஆல் அவுட் (யுவராஜ் 113, கோஹ்லி 59). வெஸ்ட் இண்டீஸ் 43 ஓவரில் 188. தாக்காவில் நடந்த முதல் கால் இறுதியில் பாகிஸ்தான் அணி 10  விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசைப் பந்தாடியது. அகமதாபாத்தில் நடந்த 2வது கால் இறுதியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில்  நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வெளியேற்றி அசத்தியது. 

ஆஸி. 50 ஓவரில் 260/6 (கேப்டன் பான்டிங் 104). இந்தியா 47.4 ஓவரில் 261/5 (சச்சின் 53, கம்பீர் 50, யுவராஜ் 57*). மூன்றாவது கால் இறுதியில்  நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வியது தென் ஆப்ரிக்கா. கொழும்பு மைதானத்தில் நடந்த 4வது கால் இறுதியில் இலங்கை அணி 10 விக்கெட்  வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. அதே மைதானத்தில் நடந்த முதல் அரை இறுதியில் நியூசிலாந்தையும்  விழுங்கி ஏப்பம்விட்ட இலங்கை அணி பைனலுக்குள் நுழைந்தது. மொகாலியில் 2வது அரை இறுதி ஆட்டம். பரம எதிரிகளான இந்தியா  பாகிஸ்தான்  மோதின. டாசில் வென்று பேட் செய்த இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்தது. வழக்கம்போல சச்சின் அபாரமாக விளையாடி  85 ரன் விளாசினார். சேவக் 38, கம்பீர் 27, டோனி 25, ரெய்னா 36* ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் 231 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 29 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, உலக கோப்பையில்  பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற வரலாற்றை தக்கவைத்ததுடன் பைனலுக்கும் முன்னேறியது. சச்சின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா  இலங்கை மோதின. இலங்கை 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்  குவித்தது. ஜெயவர்தனே 103, கேப்டன் சங்கக்கரா 48, தில்ஷன் 33, சமரவீரா 21, குலசேகரா 32, திசாரா 22* ரன் விளாசினர். இந்திய சேசிங்கில்  சேவக் 0, சச்சின் 18 ரன் எடுத்து மலிங்கா வேகத்தில் ஆட்டமிழந்தது அதிர்ச்சி அளித்தாலும், அடுத்து வந்த வீரர்கள் உறுதியுடன் விளையாடி  வெற்றியை வசப்படுத்தினர். 

கம்பீர் 97, கோஹ்லி 35, டோனி 91*, யுவராஜ் 21* விளாச, இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து வென்று 28  ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக உலக சாம்பியனாகி சாதனை படைத்தது. கேப்டன் டோனி ஆட்ட நாயகன் விருதும், யுவராஜ் சிங் தொடர்  நாயகன் விருதும் பெற்றனர். உலக கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பிப்போம் என்ற சபதத்தை இந்திய வீரர்கள் நிறைவேற்றிக் காட்டினர். 

பைனலில் 2 முறை டாஸ்

இறுதிப் போட்டியில் டாஸ் போடப்பட்டபோது, இலங்கை கேப்டன் சங்கக்கரா ஹெட்ஸ்என்று கூறியதை சரியாகக் காதில் வாங்காத இந்திய  கேப்டன் டோனி டாசில் வென்றதாக நினைத்து முதலில் பேட் செய்வோம் என்று அறிவித்தார். சங்கக்கரா சரியாகக் கூறியதை போட்டி நடுவர் ஜெப்  குரோவால் உறுதி செய்ய முடியாததால், இரண்டாவது முறையாக டாஸ் போடப்பட்டது. இதிலும் சரியாகக் கணித்த சங்கக்கரா, தங்கள் அணி  முதலில் பேட் செய்யும் என அறிவித்தார்.



* வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால், பாகிஸ்தானின் சோயிப் அக்தர், இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கு இதுவே கடைசி ஒருநாள் தொடராக  அமைந்தது.
* ரன் குவிப்பில் இலங்கையின் தில்ஷன் 9 போட்டியில் 500 ரன் எடுத்து (அதிகம் 144, சராசரி 62.50) முதலிடம் பிடித்தார். இந்தியாவின் சச்சின் போட்டியில் 482 ரன் குவித்து 2வது இடமும் (அதிகம் 120, சராசரி 53.55), இலங்கை கேப்டன் சங்கக்கரா 465 ரன்னுடன் (அதிகம் 111, சராசரி 93.00)  3வது இடமும் பிடித்தனர்.
* விக்கெட் வேட்டையில் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி (சிறப்பு 5/16), இந்தியாவின் ஜாகீர் கான் (சிறப்பு 3/20) தலா 21 விக்கெட் கைப்பற்றி முதல் இடங்களப் பிடித்தனர். நியூசிலாந்தின் டிம் சவுத்தீ 18 விக்கெட் வீழ்த்தி 3வது இடம் பிடித்தார் (சிறப்பு 3/13).
* மொத்தம் 24 சதங்கள் விளாசப்பட்டன. வங்கதேசத்துக்கு எதிராக சேவக் விளாசிய 175 ரன் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. தில்ஷன்சச்சின், தரங்கா, டிவில்லியர்ஸ், டென் டஸ்சேட், ஜெயவர்தனே தலா 2 சதம் விளாசினர்.
* வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா எடுத்த 370/4, அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்

No comments: