Thursday, November 19, 2015

சரிந்தது மோடியின் செல்வாக்கு உற்சாகத்தில் எதிர்க்கட்சிகள்

இந்திய அரசியல் அரங்கில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டசபைத் தேர்தலில்  பிரதமர் மோடியின் தலைமையிலான கூட்டணி படுதோல்வியடந்தது. பரம எதிரிகளான நிதீஷ்குமார், லல்லு பிரசாத் ஆகியஇருவரும்  இணைந்து   காங்கிரஸு டன்  கைகோர்த்து தேர்தலைச் சந்தித்ததனால் எதிர்பாராத விதமாக பாரதீய ஜனதாக் கட்சி தோல்வியடைந்தது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தாலும் மேல்சபையில் பெரும்பான்மை இலலாமையினால் சில பிரேரணைகளை நிறைவேற்றமுடியாமல் பாரதீய ஜனதாக் கட்சி தடுமாறுகிறது. பீகார் சட்டசபைத்தேர்தலில் வெற்றிபெற்றால் மேல்சபை அங்கத்தவர்களின் எண்ணிக்கையைக் கூட்டலாம் என பாரதீய ஜனதாக் கட்சி எதிர்பார்த்தது. எதிர்பார்ப்புக்கு மாறாக எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்க உள்ளது.
காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மத்திய ஆட்சியைப்பிடித்த பின்னர் சட்ட சபைகளில்  செல்வாக்கு செலுத்த வேண்டும் என பாரதீய ஜனதா விரும்பியது. மத்திய பிரதேசம் சண்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பரதீய ஜனதாவின் செல்வாக்கு அதிகரித்தது. டில்லியில் வரலாறு காணாததோல்வியடைந்தது. ஆம் ஆத்மியின் எழுச்சி பாரதீயஜனதாவையும் காங்கிரஸையும் புறந்தள்ளியது. டில்லியில்  அடைந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு பீகார் சட்டசபைத் தேர்தலை பாரதீய ஜனதா எதிர் பார்த்தது.
பீகாரின் அசைக்க முடியாத‌ சக்தியாக செல்வாக்குடன் இருந்தவர் லல்லு பிரசாத் யாதவ். ஊழல் வழக்கில் சிக்கி பதவி இழந்தபோது படிப்பறிவில்லாத மனைவியை முதல்வராக்கி திரை மறைவில் ஆட்சியை நடத்தினார்.2005 ஆம் ஆண்டு பீகார் சட்டசபைத்தேர்தலில் விழுத்தப்பட்ட லல்லு அதன் பிறகு எழுந்திருக்கவில்லை. அவருடைய பரம எதிரியான நிதீஷ்குமாரின் செல்வாக்கு உச்சத்தைத்தொட்டது. 2013 ஆம் ஆண்டு மாட்டுத்தீவன வழக்கில் தண்டிக்கப்பட்ட லல்லு ஆறு வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.. இது நிதீஷ்குமாருக்கு சாதகமாக உள்ளது.

நிதீஷ்குமாரும் லல்லுவும் எதிரும் புதிருமாக இருக்கின்றனர். காங்கிரஸ்கட்சி தனி வழி போகிறது. இதனால் பாரதீயஜனதா இலகுவாக வெற்றி பெறுமென்று கருத்துக்கணிப்புகள் கூறின. தோல்வியின் விழிம்பில் நின்ற நிதீஷ்குமார் போலி கெளரவத்தைக் கைவிட்டு லல்லுவைத்தேடிச்சென்றார். நிதீஷ்குமார் தான் அடுத்த முதலமைச்சர் என்று அறிவித்துவிட்டு தேர்தல் பரப்புரைகளை ஆரம்பித்தார் லல்லு. பீகாரின் அரசியல் எதிரிகளை இணைத்ததில் காங்கிரஸுக்கு பெரும் பங்கு உண்டு.பொது எதிரியான பாரதீய ஜனதாவை புறம்தள்ளுவதற்கு எதிரிகள் மூவ‌ரும் இணையவேண்டும் என காங்கிரஸ் கருதியது.

லல்லுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரள் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து தேர்தலில் போட்டியிட்டன. பாரதீய ஜனதா,லோக் ஜனசக்தி,ராஷ்டீரிய லோக் சமதா,இந்துஸ்தானி அவாம் மோச்சா ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. நிதீஷ்குமாரின் வலதுகையாக இருந்த மாஞ்சியின் கட்சியே இந்துஸ்தானி அவாம் மோட்சா. நிதீஷ்குமாரின் கட்சியில் இருந்தூ மாஞ்சி வெளியேறியதால் அவரின் செல்வாக்கு குறைந்துவிடும் என கருத்துக் கணிப்புகள் கூறின.
பிரதமர் மோடியும் பாரதீய ஜனதாவின் தேசியத்தலைவர்  அமித்ஷாவும் பீகார் முழுவது திரிந்து பிரசாரம் செய்தனர். பீகாரில் இருந்து பாரதீய ஜனதாவை விரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் லல்லு களத்தில் இறங்கினார். பழைய லல்லுவை பீகார் மக்கள் மீண்டும் கண்டனர்.10 வருடங்களாக பீகாரின் முதல்வராக இருந்த நிதீஷின் செல்வாக்கு தேர்தல் வெற்றிக்கு பெரிது உதவியது.
பாரதீய ஜனதாவின் சகிப்புத்தன்மையற்ற போக்கு, மாட்டுக்கறி உண்பவர்களை விமர்சித்தது, இந்துமதவெறி, பாகிஸ்தானுக்கு ஓடு என்ற பிரசாரம் ஆகியன‌ பாரதீய ஜனதாவின் தோல்விக்கு பெரிதும் காரண‌மாக அமைந்தன. எதிர்க்கட்சிகளின் மத சார்பற்ற கொள்கைக்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வேறு சட்டசபைத் தேர்தல் வேறு என்பதை மத்திய அரசுக்கு வாக்காளர்கள் போதித்துள்ளனர்.
லல்லுவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது. லல்லுவின் கட்சி 74 இடங்களிலும், நிதீஸ்குமாரின் கட்சி 68 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றிபெற்றன.நிதீஷ்குமாரைவிட லல்லுவுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. தேர்தலுக்கு முன்னர் தான்கொடுத்த வாக்கின் பிரகாரம் நிதீஷ்குமாரே முதல்வர் என லல்லு அறிவித்துள்ளார்.ஐந்து சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒரு அமைச்சர் பதவிஎன மற்றைய கட்சிகளுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படும் என நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் இருந்த அதவானியை ஓரம்கட்டி பாரதீய ஜனதா கட்சியின் தலமையை மோடி பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தேர்தல் வெற்றியின் பின்னர் மோடியின் செல்வாக்கு வீழ்ச்சியடையத்தொடங்கியது. காங்கிரஸ் கட்சிமீதான கோபமே மோடியை பிரதமராக்கியது. இதனை உணராத மோடி தனது செல்வாக்கினால்தான் பாரதீய ஜனதாக் கட்சி  வெற்றி பெற்றதென நினைத்தார். டில்லி ,பீகார் ஆகிய மாநிலங்களில் மோடியின் மாயாஜாலம் செல்லுபடியாகவில்லை.
பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி,முரளிமனோகர் ஜோஷி, யஸ்வன் சிங்ஹா ஆகியோர் ஓரம் கட்டப்பட்டமையும் அக்கட்சியின் தோல்விகளுக்கு முக்கிய காரணம். இவர்கள் அனைவரும் இணைந்து பீகார் தோல்விக்கு எதிரான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதா 91 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை 157 இடங்களில் போட்டியிட்டு  59 இடங்களில்தான் வெற்றிபெற்றது. 
லலுவின் செல்வாக்கு பீகாரில் அதிகரித்துள்ளது.2010 ஆம் ஆண்டு 24 இடங்களில் லல்லுவின் கட்சி வெற்றி பெற்றது. இம்முறை 74 தொகுதிகளில் வெற்றிபெற்று சாதனை படைத்தது. லல்லுவின்கட்சியும் நிதீஷ்குமாரின் கட்சியும் தலா 101 தொகுதிகளில் போட்டியிட்டன. முதல்வரான நிதீஷ்குமாரின் கட்சி  68 தொகுதிகளில் வெற்றி  பெற்றது.இந்தக்கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மதசார்பற்ற கூட்டணியின் வெற்றியால் பரவசமடைந்த லல்லு, பாரதீய ஜனதாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆன்டு தமிழகம்,கேரளா,அசாம் உள்ளிட்ட ஐந்து சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தக்கூட்டணியில்  மற்றைய மாநில கட்சிகளும் இணைந்தால் பாரதீய ஜனதாவின் தோல்வியை தடுக்க முடியாது.

ரமணி
 தமிழ்த்தந்தி
15/11/2015 

No comments: