அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை என்பதை பீகார்
தேர்தல் உணர்த்தி உள்ளது.பொது எதிரியான பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்காக பரம
எதிரிகளான லல்லு,நிதீஷ்குமார்,சோனியா ஆகிய
மூவரும் கெளரவத்தைக் கைவிட்டு ஓரணியில் நின்று சாதித்துள்ளனர்.கருணாநிதி,வைகோ,திருமாவளவன்,ராமதாஸ்,வாசன்,இளங்கோவன்,சிதம்பரம்,நல்லகண்ணு,பி.மகேந்திரன்,விஜயகாந்த்
ஆகியோர் ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒற்றைக்காலில்
நிற்கின்றனர்.பீகாரில் மூன்று தலைவர்கள் ஒன்றிணைந்து பாரதீய ஜனதாவை
விரட்டினார்கள்.தமிழகத்தில் பத்துக்குமேற்பட்டதலைவர்கள் ஆளுக்கு ஒருதிக்கில்
நிற்பதனால் ஜெயலலிதாவின் வெற்றி பிரகாசமாக உள்ளது.
தமிழக அரசியல் தலைவர்களின் வரட்டுக்கெளரவம் ஜெயலலிதாவின்
வெற்றிக்கு செங்கம்பளம் விரித்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மெகா கூட்டணி
அமைக்கக்கூடாது என்பது ஜெயலலிதாவின் விருப்பம்.அவரின் விருப்பத்தை எதிர்க்கட்சித்
தலைவர்கள் சிரமேற்கொண்டு செவ்வனே நிறைவேற்றிவருகின்றனர்.
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் பெருவெற்றி
பெற்றார்.பாரதீய ஜனதாகூட்டணியில் வைகோ,விஜயகாந்த்,ராமதாஸ்
ஆகியோர் போட்டியிட்டனர். பாரதீய ஜனதாக் கட்சியின் வேட்பாளரும் ராமதாஸின் மகன்
அன்புமணியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றனர்.தனித்தனியாகப் போட்டியிட்ட
திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.அதே
போன்ற ஒருநிலையே எதிர் வரும் தமிழக சட்டசபைத் தேர்தலிலும் நடைபெறும் நிலை உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியைவிட திராவிட
முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி ஆறு சதவீதம் குறைவாக
உள்ளது. ஆறு சதவீத வாக்கு வங்கியை அதிகரிப்பதற்காக இரண்டு கட்சிகளுடன் கூட்டணி
சேரவேண்டிய நிலையில் உள்ளது திராவிட முன்னேற்றக்கழகம்.கூட்டணிக் கதவை அகலத்திறந்து
வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஏனைய கட்சிகள் ஏறெடுத்தும்
பார்க்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த வருடம் செப்டெம்பரில் நடைபெற்ற
கட்சிமாநாட்டில் ஜெயலலிதாதான் பொது எதிரி என பகிரங்கமாக அறிவித்த
வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டினார்.
ஸ்டாலின்,கருணாநிதி ஆகியோரை வைகோ சந்தித்ததார். உயர்நிலைக்
குழுக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என வைகோ அறிவித்ததனால்
இரண்டு கட்சித் தொண்டர்களும் உற்சாகமடைந்தனர்.இந்த உற்சாகம் நீண்ட நாட்கள்
நீடிக்கவில்லை.வைகோ தலைமையில் மக்கள் நல கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதால் திராவிட
முன்னேற்றக் கழகம் அதிர்ச்சி யடைந்துள்ளது.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம்,விடுதலைச்
சிறுத்தைகள்,கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் வாக்கு
வங்கு 6 முதல் 8 சதவீதமே உள்ளது.இந்தக்கூட்டணியால் வாக்குகளைப்பிரிக்க
முடியுமே தவிர ஆட்சியைப்பிடிக்க முடியாது.இந்தக்கூட்டணி திராவிட முன்னேற்றக்
கழகத்துடன் இணைந்தால் ஜெயலலிதா ஆட்சியை
இழப்பது நிச்சயம்.
விஜயகாந்தின்கட்சிக்கு 5 முதல் 8 சதவீத வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல்58 சதவீத வாக்கு வங்கி உள்ளது.இந்த இரண்டு கட்சிகளும் திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் கருணாநிதி முதல்வராகி விடுவார். தமிழகத்தின்
அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி தொக்கி நிற்பதனால் பிரதான எதிர்க் கட்சிகள் ஒரே
பாதையில் செல்ல விரும்பவில்லை.
கருணாநிதிதான் அடுத்த முதல்வர் என திராவிட முன்னேற்றக் கழ்கத்தினர்
நினைக்கின்றனர்.ஸ்டாலினுக்கு கருணாநிதி வழிவிட வேண்டும் என்பது ஸ்டாலினின்
ஆதரவாளர்களின் விருப்பம்.ஒரேகட்சியினுள் இரண்டு முதலமைச்சர்கள் இருக்கும்
விந்தையான அரசியல்தமிழகத்தில் நிலவுகிறது. முதல்வர் கனவில் இருக்கும் விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி
சேரத்துடிக்கிறார். பாரதீயஜனதாவின் வாக்கு வங்கி பரிதாபமாக உள்ளது.தமிழகத்தில் செல்வாக்குமிக்க தலைவர்கள்
யாரும் தமிழகத்தில் இல்லை. தமிழக கட்சிகளின் தயவை நம்பியே பாரதீய ஜனதா உள்ளது.
இவை எல்லாவற்றையும் தெளிவாகத்தெரிந்து கொண்ட விஜயகாந்த்,ஜெயலலிதாவுடனும்
கருணாநிதியுடனும் கூட்டணி இல்லை என மேடைதோறும் பிரசாரம் செய்கின்றார்.அவரின் மனைவி
ஒருபடிமேலேபோய் கருணாநிதியை மிக மோசமாகத் தாக்குகிறார்.
தனது மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த ராமதாஸ்
திராவிட முன்னேற்றக்கழகத்தை மிக மோசமாக விமர்சிக்கின்றார். அவருடைய மகன் அன்புமணி, ஸ்டானினுடன் மல்லுக்கட்டுகிறார்.
ஆளும்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையோ அதனை வழிநடத்தும் ஜெயலலிதாவையோ
விமர்சிக்காக தகப்பனும் மகனும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும்
குறிவைப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவரான ஸ்டாலினுக்கும்
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரான ராகுலுக்கும் பொருத்தம் சரியில்லை. இவர்களின்
பிடிவாதத்தினால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டு கட்சிகளும் இணையவில்லை.அதன்
பலனாக பொது எதிரியான ஜெயலலிதா வெற்றி பெற்றார்.இவர்கள் இருவரும் தமது
வரட்டுகெளரவத்தைக் கைவிட்டால் ஜெயலலிதாவை வீழ்த்தலாம் இல்லையேல் மீண்டும் அவர்
முதல்வராவதைத் தடுக்க முடியாது.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.மக்கள்
நலக்கூட்டணியை உடைத்து திருமாவளவனை உள்ளே
இழுக்க திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. அந்தக்கூட்டணியைப் பாதுகாக்க
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தன்னாலானதைச் செய்யக் காத்திருக்கிறது. வைகோவின் கட்சியின்
முக்கியஸ்தர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் சாய்ந்துவிட்டனர்.இறுதி நேரத்தில் இன்னும்
சிலர் அங்கிருந்து வருவார்கள் என திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கிறது.இதே
வேளை விஜயகாந்தின் கட்சியை உடைக்க அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் காய்
நகர்த்துகிறது.
ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் விரும்பினாலும்
தமிழகத்தலைவர்கள் விரும்பவில்லை.பீகார் மாநிலத்தலைவர்கள்
ஒன்றிணைந்து பாரதீய ஜனதாக் கட்சியை மண்கெளவ வைத்ததை முன்மாதிரியாகக்கொண்டு
தமிழகத்தலைவர்களும் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்தால்
அவர்களின் எதிர்பார்ப்பு நிறவேறும் இல்லையேல் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார்..
ரமணி
தமிழ்த்தந்தி
15/11/15
No comments:
Post a Comment