Monday, November 30, 2015

அரசியல் அரங்கில் உருவாகும் மோடிக்கு எதிரான அலை


இந்தியப் பொதுத்தேர்தலில் வீசிய மோடி அலையால் ஆட்சி பீடத்தில் இருந்த  காங்கிரஸ் கட்சி  தூக்கி  எறியப்பட்டது. காங்கிரஸ் கட்சியுடன்  இணைந்த சில மாநிலக் கட்சிகளும் மோடி அலையில்  மூழ்கின. பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ்குமார்,லல்லு,சோனியா ஆகியோர் ஒன்றிணைந்து பெற்ற வெற்றியால் மோடிக்கு எதிரான அலை தோன்றும் சாத்தியம் உருவாகி உள்ளது. பாரதீய ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் பீகார் முதல்வரின் பதவி ஏற்ப்பு விழாவில்   பங்குபற்றியது நம்பிக்கையை  ஏற்படுத்தி  உள்ளது.
. பீகார் சட்டசபை தேர்தலில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லல்லு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த கூட்டணியின் வெற்றியானது நாடு முழுவதும் பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கவும் தொடங்கியுள்ளது. தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிரான மாற்று அணி அமைவதற்கான வலுவான அடித்தளத்தை பீகார் தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ளது.. இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க.வுக்கு எதிராக முன்னாள் பிரதமர், எட்டு முதலமைச்சர்கள் உட்பட 35  கட்சிகளின்  தலைவர்கள் பீகார் முதல்வராக நிதீ ஷ்குமார் பதவியேற்கும்   விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், சிக்கிம் முதல்வர் சாம்லிங், மணிப்பூர் முதல்வர் இபோபிசிங், இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ரசிங், உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்நாடகா முதல்வர் சித்தராமையா
 ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸின் குலாம்நபி ஆசாத், தேசியவாத கட்சித் தலைவர் சரத்பவார், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா


 டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், ஹரியானா முன்னாள் முதல்வர் பூபேந்திரசிங் ஹூடா, குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்,



 தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா அமைச்சர் சுபாஷ் தேசாய், தேசியவாத காங்கிரஸின் பிரபுல் படேல், லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரகாஷ் அம்பேத்கர், இந்திய தேசிய லோக்தளத்தின் அபய் சவுதாலா, ராம்ஜேத்மலானி, முன்னாள் எம்.பி.க்கள் எச்.கே. தூவா, ராஜ்பப்பர் ஆகியோர் நிதீஷ்குமார் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

பீகாரில் எதிரும் புதிருமாக இருந்த மூன்று தலைவர்களும் ஒண்றிணைந்ததைப்போல் நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் ஒன்றிணைந்து  பாரதீய  ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்  என விரும்புகின்றனர்.  அதற்கு அச்சாரமாக பீகாரில் ஒன்று  கூடி  ஆலோசனை நடத்தினர்.
  பீகார்  மாநில முதல்வராக, 5வது முறையாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார்  பதவியேற்றார். அவருடன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர்  லல்லு பிரசாத் யாதவின், இரு மகன்கள் உட்பட, 28 பேர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.


பீகார் மாநிலத்தில், சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்,  லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம்பெற்ற, 'மெகா' கூட்டணி, 178 தொகுதிகளை கைப்பற்றியது. இதையடுத்து, தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில், நிதீ ஷ் குமார் தலைமையிலான புதிய அரசின் பதவியேற்பு விழா, கோலாகலமாக  நடைபெற்றது. இதில், நிதீஷ் குமார், ஐந்தாவது முறையாக பீகார் முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு, கவர்னர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதையடுத்து, 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களில், தலா, 12 பேர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்; நான்கு பேர் காங்கிரசார்.



பீகார் சட்டசபை தேர்தலில், முதன் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற,  லல்லு பிரசாத்தின் இரு மகன்களான தேஜஸ்வி, தேஜ் பிரதாப் ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இருவரில், 26 வயதான தேஜஸ்விக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நிதீஷ் அமைச்சரவையில், இம்முறை புதுமுகங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர்; அத்துடன் நிதீஷ் மற்றும்  லல்லு கட்சிகளைச் சேர்ந்த இரு பெண்களுக்கும், அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


நிதீஷ்குமாரின் அமைச்சரவை ஏனைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இதே போன்ற செயற்திட்டத்தை ஏனைய மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்  என்பதே வடமாநிலத் தலைவர்களின் விருப்பம்.மாநிலங்களில் பாரதீய ஜனதாவின் செல்வாக்கை இல்லாமல் செய்தால் நாடாளுமன்றத்  தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிக்கலாம். பொது எதிரியான பாரதீய ஜனதாவை வீழ்த்துவதற்கு கொள்கைகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு   ஒன்றிணையும்  திட்டம் ஆரம்பமாகிவிட்டது. பாரதீய ஜனதாவின்  ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணையத் தயாராகிவிட்டன. பாரதீய ஜனதாவின் தயவில் உள்ள மாநில ஆட்சியையும் அகற்றுவதற்கு வடமாநிலத் தலைவர்கள் தயாராகிவிட்டனர்.

தமிழகத்திலிருந்து சென்ற ஸ்டாலின்,டி.ஆர்.பாலு ஆகியோருடன் வடமாநிலத்தலைவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.  பிரதமர் மோடியின் கடைக்கண் பார்வையிலேயே தமிழக‌ முதல்வர் ஜெயலலிதா ஆட்சி செய்கிறார் என்ற சந்தேகம் அரசியல் தலைவர்களிடையே  உள்ளது. ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் மத்திய அமைச்சர் ஒருவர் அவரைச் சந்தித்ததையும், தமிழகத்துக்குச் சென்ற பிரதமர் மோடி  மரபை மீறி ஜெயலலிதாவை  அவரது வீட்டிலே சந்தித்ததையும் ஏனைய தலைவர்கள் ரசிக்கவில்லை. பாரதீய ஜனதாவை வீழ்த்தும் அதேவேளை அக்கட்சியின் ஆசிபெற்ற ஜெயலலிதாவையும் அகற்ற வேண்டும் என விரும்புகிறார்கள்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போவதாக  ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர மோடி விரும்புகிறார்.  ஆனால் ஜெயலலிதா அதற்குத் தயாராக  இல்லை. தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுவதே அவரது குறிக்கோள்.  நாடாளுமன்ற தேர்தலில்   தமிழகத்தில்  மோடியின் அலை  வீசவில்லை. ஜெயலலிதா இல்லை என்றால் தமிழகத்தில்  பாரதீய ஜனதா செல்லாக்  காசாகிவிடும்
 தமிழக அரசியல் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒவ்வொரு திசையில் உள்ளன. தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ,நிதீஷ் குமாரை முன்மாதிரியாகக் கொண்டு திராவிட முன்னேற்றக்   கழகம்  இறங்கி வரவேண்டும் என  ஸ்டாலினுக்கு ஆலோசனை  கூறப்பட்டுள்ளது. ஆட்சியில் பங்கு என்ற கோஷத்தை  திராவிட முன்னேற்றக்   கழகம்  ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் காரணமாக எந்தக் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன்   கூட்டணி சேர விரும்பவில்லை.

ராகுல்,விஜயகாந்த்,அன்புமணி ஆகியோர் ஸ்டாலினை பகைவனாக கருதுகிறார்கள் . இந்தப் பகை ஒழிந்தால் ஜெலயலிதாவை வீழ்த்துவது சுலபம். இதனை வடமாநிலத் தலைவர்கள் ஸ்டாலினுக்கு உணர்த்தி உள்ளனர்.

  தமிழகத்தில் தனித்து நிற்கும் காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி   சேர்வதெனத்தெரியாது தடுமாறுகிறது.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு ராகுல் விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுக்கு எதிரான அலையில் காங்கிரஸ் இருப்பதனால் வடமாநிலத் தலைவர்கள் ராகுலை வழிக்குக் கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

முதல்வர் கனவில் இருக்கும் விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர விரும்புகிறார். மோடிக்கு எதிரான அலையால் அவரின் கனவு தவிடுபொடியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவியைக் காட்டி விஜயகாந்தை கூட்டனியில் சேர்க்கும் திட்டம் உள்ளது. இந்தக் கூட்டணி உறுதியானால் வைகோ தலைமையிலான கூட்டணி உடைந்துவிடும்.மோடிக்கு எதிரான அலையில் ஜெயலலிதா அள்ளுப்படுவாரா அல்லது தப்பிப்பிழைப்பாரா என்பதை தேர்தல் நெருங்குகையில் தெரிந்துவிடும்.
வர்மா
தமிழ்த்தந்தி
29/11/15

 


No comments: