Saturday, March 19, 2016

ஜெயலலிதாவின் நம்பிக்கையை இழந்த பன்னீர்செல்வம்


  விசுவாசமும் துரோகமும் அரசியலில் அசைக்க முடியாத இரண்டு பக்கங்களாக உள்ளன. கட்சியை வளர்க்கும் அதேவேளை தனது  தலைமையை பாதுகாப்பதில் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். தனது தலைமையை மீறாது பெட்டிப் பாம்பாக இருப்பவர்களையே தனக்கு அடுத்த இடத்தில் வைத்திருப்பார்கள். தலைவருக்கு விசுவாசமாக இருக்கும் இரண்டாம் கட்டத்தலைவர்கள் தமது  விஸ்வரூபத்தைக் காட்டத்தொடங்கும் போது அவர்கள் தலைவரால்   ஓரம் கட்டப்படுவார்கள். அரசியலில் எழுதப்படாத இந்த பொது விதி இப்போது பன்னீர்ச்செல்வத்தின் மீது பாய்ந்துள்ளது.
 ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்த ஓ. பன்னீர்ச்செல்வத்தின் மீது சந்தேகப்பார்வை விழுந்துள்ளது.     ஜெயலலிதாவின் முன்னிலையில்  சாஸ்டாங்கமாக  விழும்  பன்னீர்ச்செல்வத்தின் இன்னொரு முகம் வெளியே தெரிய வந்ததனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அன்பு, அடக்கம்,பணிவு மிக்க பன்னீர்ச்செல்வத்தின்  மீதான பல குற்றச்சாட்டுகள் ஜெயலலிதாவின் கவனத்துக்குச்சென்றதால் அவர் ஓரம் கட்டப்பட்டுள்ளார். பன்னீர்ச்செல்வத்தின் மகனும், உறவினர்களும், அவரது விசுவாசிகளும் செய்த சில அத்து மீறல்களால் ஜெயலலிதாவின்  கோபப்பார்வை அவர் மீது விழுந்துள்ளது. 

 ஜெயலலிதாவின் மீதான   குற்றச்சாட்டுகள்   நிரூபணமாகியதால் அவர் இரண்டு முறை சிறைக்குச் சென்றார். இரண்டு முறையும் பன்னீர்ச்செல்வம   முதலமைச்சராகp பதவி ஏற்றார். ஜெயலலிதா சிறையில் இருந்து திரும்பி வந்தபோது பரதனைப் போன்று பணிவுடன் முதலமைச்சர் பதவியை திரும்பக்கொடுத்தார். தற்காலிக முதல்வராக பதவி ஏற்ற பன்னீர்ச்செல்வம் நிரந்தர முதல்வராவதற்கு இரகசியமாகத் திட்டமிட்டதாகவும்  செய்தி கசிந்துள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த மேல் முறையீட்டு வழக்கில் அவர் குற்றவாளி என தீர்ப்பு  வந்தால் பன்னீர்ச்செல்வம் முதலமைச்சராவதற்கு  சதி செய்த குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
பன்னீர்ச்செல்வம்,நந்தம் விசுவநாதன் உட்பட ஐந்து பேர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில்  செல்வாக்கு மிகுந்தவர்களாக இருந்தனர்.  அந்த ஐவர் அணியின் மீது ஜெயலலிதாவின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. ஐவர் அணியின் விசுவாசிகளுக்கு வழங்கப்பட்ட கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்கள்  செல்லாக்காசாக்கப்பட்டுள்ள்ளனர். ஜெயலலிதாவின் விசுவாசத்தைப் பெறுவது  மிகவும் கடினமானது.உடன்பிறவா சகோதரியான சசிகலாவை அதிரடியாக வெளியேற்றியவர். ஜெயலலிதாவின்அமைச்சரவையில் இருப்பவர்கள் எப்போ பதவி பறிபோகும் என்று கலக்கத்துடன் இருப்பார்கள். தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்து தமது பதவி பறி போனதை அறிவார்கள். அமைச்சர்களை மாற்றுவதில் சாதனை படைத்துள்ளார். இரண்டாம் கட்டத் தலைவர்களின் தலையில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் என்பதற்கு பன்னீர்ச்செல்வமும் விதிவிலக்கல்ல. தொங்கி இருந்த கத்தி அவரதி தலையில் விழுந்துள்ளது.   அவரது விசுவசிகளையும் கத்தி விட்டு வைக்கவில்லை.
அரசியல் கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்கள் திட்டமிட்டு  முடக்கப்படுவது வரலாற்று உண்மை.  அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின்னர். திராவிட  முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது அண்ணாத்துரையின் இதயத்தில் இடம் பிடித்த கருணாநிதி தலைவரானார்.  . திராவிட  முன்னேற்றக் கழகத்தின் நட்சத்திரத் தலைவரான எம்.ஜி.ஆரின் அபரிமித செல்வாக்கு கருணாநிதியை கதி கலங்க வைத்தது. இரண்டாம் இடத்தில் இருக்கும் எம்.ஜி.ஆர் முதலிடத்துக்கு வந்துவிடுவரோ என்ற கலக்கம் கருணாநிதியை வாட்டியது.
திராவிட  முன்னேற்றக் கழக கணக்கு விவகாரத்தினால் கட்சியை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து முதல்வரானார். திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இரண்டாம் இடத்தில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில் முதலிடத்தைப் பிடித்தார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் வரை கருணாநிதி முதல்வராக முடியவில்லை. எம்.ஜி.ஆரின் இடத்தை வைகோ நிரப்பினார். வைகோவின் அனல் தெறிக்கும் பிரசாரத்தால் திராவிட  முன்னேற்றக் கழகம் உயிர் பெற்றது. வைகோவின் வளர்ச்சி கருணாநிதிக்கு தொல்லையைக் கொடுத்தது. தருணம் பார்த்து வைகோவை கழற்றிவிட்ட்டார் கருணாநிதி. திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இரண்டாம் கட்டத்  தலைவராக இருந்த வைகோ மறுமலர்ச்சி திராவிட  முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து தலைவரானார்.

 அண்ணாத்துரை காலத்தில் கருணாநிதியுடன் அரசியல் களத்தில் வளர்ந்த பேராசிரியர் அன்பழகன்  திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இரண்டாம் கட்டத் தலைவராக விளங்குகிறார். அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை. கருணாநிதி தனது மகனான    ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். கட்சித் தலைமையை அல்லது முதலமைச்சர் பதவியை மகனுக்குக் கொடுக்கும் துணிவு கருணாநிதிக்கு இல்லை.

   எம.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்  ஜெயலலிதாவின் அசுர வளர்ச்சி அவரைத் தலைவராக்கியது. ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த  பன்னீர்ச்செல்வம்  ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
வர்மா
துளியம்.கொம்
19/03/16



No comments: