தமிழக சட்ட சபைத் தேர்தலைத் தீர்மானிக்கும்
தலைவராக விஜயகாந்த் உருவாகியுள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடம்
இருந்த தலைமைப் பொறுப்பை விஜயகாந்த்
கைப்பற்றி உள்ளார். தமிழக சட்ட சபைத்
தேர்தல் மே மாதம் 16 திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் முடிவுக்காக காத்திருந்த
கட்சிகள் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை எதனையும் இன்னமும்
ஆரம்பிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி,மக்கள் நலக்
கூட்டணி ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை
நடத்திய விஜயகாந்த் தனித்துப்
போட்டியிடப்போவதாக அறிவித்ததும் அவரின் வருகைக்காக காத்திருந்த கட்சிகள்
அனைத்தும் அதிர்ச்சியில் உறைந்தன.
விஜயகாந்தின்
தனிவழி அறிவிப்பினால் திராவிட முன்னேற்றக் கழகம் தடுமாறுகிறது. பழம்
நழுவிவிட்டது பாலில் விழப்போகிறது
என உவமானம் சொன்ன கருணாநிதி அவமானப்பட்டுள்ளார். விஜயகாந்த் வராவிட்டால்
எமக்கு பாதிப்பில்லை என்று தனக்குத் தானே சமாதானம் சொல்கிறார் ஸ்டாலின்.
விஜயகாந்துடனான இரகசியப் பேச்சு வார்த்தை
வெற்றி பெற்றதனால் தான் பழம் பால் என்று கருணாநிதி சமிக்ஞை காட்டினார். துணை முதல்வர் பதவி, ஆட்சியில்
பங்கு, முக்கிய அமைச்சுப்பதவி என கெடுபிடி போட்ட விஜயகாந்த் 59 தொகுதிகளுக்கு இணங்கியதாக செய்தி
வெளியானது. அந்தச்செய்தி பற்றிய விவாதம் முடிவதற்கிடையில் விஜயகாந்த் தனித்துப்
போட்டியிடப்போவதாக அறிவித்தார்.
விஜயகாந்த் எம்முடன் கூட்டணி சேர்வார் என பாரதீய ஜனதாக் கட்சியும் மக்கள்
நலக் கூட்டணியும் பெரிதும் நம்பிக்கையுடன் காத்திருந்தன. விஜயகாந்துடனான
பேச்சுவார்த்தை நம்பிக்கையளிக்கிறது என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்களும் மக்கள்
நலக் கூட்டணித் தலைவர்களும் அறிக்கை
விட்டனர். அந்த அறிக்கைகள் எவற்றுக்கும்
விஜயகாந்த் பதிலளிக்கவில்லை. தமிழகத் தேர்தலில் எனது கட்சி தனித்துப்
போட்டியிடும் என அறிவித்தார். விஜயகாந்தை முதல்வராக்க விரும்புபவர்கள்
விஜயகாந்தின் தலைமையில் தேர்தலில் போட்டியிடலாம் என அவரின் மனைவி அறை கூவல்
விடுத்தார்.
. மகளிர் அணி
மாநாட்டில் முக்கியமான முடிவை
விஜயகாந்த் அறிவிக்க மாட்டர் என்றே பலரும் கருதினார்கள். ஆனால் பட்டென
போட்டுடைத்து தமிழக அரசியல் தலைவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டார்.
இதனைத்தான் ஜெயலலிதா எதிர்பார்த்தார்.விஜயகாந்தின் முடிவால் அவர் மகிழ்ச்சியடைந்துள்ளர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த்
சேரக் கூடாது என ஜெயலலிதா விரும்பினர்.
பாரதீய ஜனதாக் கட்சியுடன் விஜயகாந்த் சேர வேண்டும் என்பதே ஜெயலலிதாவின்
விருப்பம். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே
சிறிதளவு வாக்கு வித்தியாசமே உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் சேர்ந்தால் ஜெயலலிதாவால் வெற்றி பெற முடியாது. திராவிட
முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது. அவற்றுடன் விஜயகாந்தும்
சேர்ந்தால் அந்தக் கூட்டணி வெற்றி பெற்றுவிடும்.
ஜெயலலிதா விரும்பியது போலவே திராவிட முன்னேற்றக் கழகத்துடன்
விஜயகாந்த் சேரவில்லை. தேத்தல் நடைபெற
முன்பே வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் ஜெயலலிதா இருக்கிறார். திராவிட
முன்னேற்றக் கழகம, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி, மக்கள்
நலக் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி என ஐந்து பிரிவாக இருந்த தமிழக தேர்தல் களம்
விஜயகாந்த் தனித்து போட்டியிடுவதால் ஆறு முனையாக விரிந்துள்ளது. மக்கள் நலக் கூட்டணி அல்லது பாரதீய ஜனதாக் கட்சி விஜயகாந்துடன் இணைந்தால்
ஆறு முனைப் போட்டி ஐந்து முனைப் போட்டியாகிவிடும். இதுவரை காலமும் இப்படியான ஒரு
நிலை தமிழகத்தில் ஏற்பட்டதில்லை.
அரசியல் சாணக்கியர் என மகுடம் சூட்டிய கருணாநிதி பலமான கூட்டணிக்காக ஏங்குகிறார். ஆட்சியைப் பிடிக்க முடியாத விஜயகாந்த்
கூட்டணி இல்லாது தனித்துப் போட்டியிடப்
போவதாக அறிவித்துள்ளார். விஜயகாந்தின் முடிவு ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளது. கடந்த கால தேர்தல்களின் போது கருணாநிதியின் அரசியல் வியூகத்தை
உடைப்பதற்கு ஜெயலலிதா புதுப் புது
உத்திகளைக் கையாண்டார். வாரிசு அரசியல் ஊழல்
போன்ற குற்றச் சாட்டுகளை ஜெயலலிதா முன் வைத்தார். இம்முறை விஜயகாந்தின் அணுகு முறையால் ஜெயலலிதாவுக்கு
அதிக வேலை இல்லை. திராவிட முன்னேற்றக்
கழகத்தின் பிரசாரத்துக்கு
பதிலளிப்பதற்கான தேவை இருக்காது.
விஜயகாந்தின்
அரசியல் பிரவேசத்தால் ஜெயலலிதா பெரிதும் பாதிக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் பறித்தார். விஜயகாந்தின்
அரசியல் பிரவேசம் திராவிட முன்னேற்றக் கழகத்த்துக்கு சாதகமாக இருந்தது. கடந்த சட்ட மன்றத்
தேர்தலின் போது எதிரியான விஜயகாந்தை தனது வலையில் விழுத்தி கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பினார் ஜெயலலிதா.
அதே சூட்டோடு விஜயகாந்தின் கட்சியைப் பலவீனப்படுத்தி அவரை ஒதுக்கினார். கடந்த தமிழக தேர்தலின் போது
ஜெயலலிதாவுடன் சேர்ந்து இருந்து அவரை
முதல்வராக்கிய விஜயகாந்த் இம்முறை வெளியே இருந்து ஜெயலலிதாவை முதல்வராக்க காய்
நகர்த்துகிறார்.
விஜயகாந்த் வந்தால்தான் வெற்றி
பெறலாம் என்ற மாயை திராவிட
முன்னேற்றக் கழகத்தினுள் உண்டாக்கப்பட்டது. விஜயகாந்த் இல்லை என்றதும் திராவிட
முன்னேற்றக் கழகத்தின் சப்த நாடிகளும் அடங்கிவிட்டன. விஜயகாந்த் வருவர் என நம்பி
இருந்தவர்கள் அவர் இல்லாமல் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவதுஎன நம்பிக்கை இழந்தவர்களாக உள்ளனர். பழுத்த
அரசியல்வாதியான கருணாநிதி,
விஜயகாந்துக்காக காத்திருந்து ஏமாந்துவிட்டர். அரசியல் தலைவருக்குரிய குணம் எதுவும்
விஜயகாந்திடம் இல்லை எனத் தெரிந்து கொண்டும் அவரின் வாக்கு வங்கிக்காக
காத்திருந்து தவம் கிடந்த கருணாநிதி தந்து அரசியல் அனுபவங்கள் எல்லாவற்றையும் குழி
தோண்டிப் புதைத்துவிட்டார். நம்பிக்கை இழந்த தொண்டர்களுக்கு நம்பிக்கையளிக்க
வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற அடை
மொழியுடன் வலம் வந்த விஜயகாந்த் கூட்டணி பேரம் படியாததனால் தனித்துப்
போட்டியிடத் தீர்மானித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம,பாரதீய ஜனதாக் கட்சி,மக்கள் நலக் கூட்டணி ஆகியவறைத்
தேடிப்போன விஜயகாந்த் அக்கட்சிகள் தன்னைத் தேடி வரவேண்டும் என விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம விஜயகாந்தைத் தேடித் போகாது. மற்றைய கட்சிகள்
விஜயகாந்தைத் தேடிச்செல்லும் வாய்ப்பு உள்ளது. கட்சியின் ஏனைய
முக்கியஸ்தர்களினதும் தொண்டர்களினதும் விருப்பத்தைப் புறம் தள்ளி தனித்துப்
போட்டியிட விஜயகாந்த் தீர்மானித்துள்ளார். இது அவரின் மனைவி பிரேமலதாவின்
விருப்பம். மனைவியின் விருப்பத்தையே விஜயகாந்த் நிறைவேற்றியுள்ளார்.
வர்மா
No comments:
Post a Comment