தமிழக அசியலில் அசைக்கமுடியாத
சக்தியாக விளங்கிய பட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் அதிகார ஆசையால் அரசியல்
களத்தில் காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழக தேர்தல்
அறிவிக்கப்பட்டதும் திராவிட
முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகமும் முதலில் பட்டாளி
மக்கள் கட்சியுடன் தான் தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.
தமிழக முதலமைச்சரைத் தீர்மானிக்கும்
சக்தியாக இருந்த பட்டாளி மக்கள் கட்சி இன்று
செல்வாக்கிழந்துள்ளது. கூட்டணி சேர்ந்தே வெற்றி பெற முடியாத கட்சியின்
இளவலான அன்புமணியை முதல்வராக்கியே தீருவேன் என்று ராமதாஸ் சபதமெடுத்துள்ளார். கட்சி வேட்பாளர்களை விட
முதலமைச்சர் வேட்பாளர்கள் அதிகமாகிவிட்டனர். கருணாநிதி, ஜெயலலிதா தவிர
ஸ்டாலின்,அன்புமணி,விஜயகாந்த்,சீமான்
ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்
பட்டியலில் இருக்கின்றனர்.
அன்புமணி முதலமைச்சராகியது போன்ற விளம்பரங்களை வெளியிட்டு
திருப்தியடைகிறார் ராமதாஸ். வன்னியர்சமூக வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழககத்துக்கும்,அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் குடைச்சலைக் கொடுத்த ராமதாஸ் வாக்கு வங்கியை
இழந்துள்ளார். வன்னிய சமூகத்தை மேம்படுத்துவதற்காக இயக்கத்தை ஆரம்பித்த ராமதாஸ்
காலப்போக்கில் அந்த இயக்கத்தை அரசியல் கட்சியாக்கினார். .நானும் எனது வாரிசுகளும் தேர்தலில் போட்டியிடமட்டோம் என்ற வாக்குறுதியுடன் அவரது
அரசியல் பிரவேசம் ஆரம்பமாகியது. அரசியலின் நெளிவு சுளிவுகளை நன்கு தெரிந்து கொண்ட
ராமதாஸ் தேர்தலில் போட்டியிடாமல்
தனது மகனான அன்புமணியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி அமைச்சராக்கினர்.
யாருடன் கூட்டணி அமைத்தாலும் மகனுக்கு எம்பி பதவியை உறுதி செய்வார். கடந்த
நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில்
போட்டியிட்டு அன்புமணி எம்பியானார். அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர் பார்த்த
ராமதாஸ் கடைசியில் ஏமாற்றமடைந்தார்.
கருணாநிதியும்,ஜெயலலிதாவும் முதலமைச்சராவதற்கு பலமான
கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறார்கள். வன்னியர் சமூக வாக்குகளை மட்டும் நம்பி
மகனை முதலமைச்சாரக்குவேன் என ஒற்றைக்
காலில் நிற்கிறார் ராமதாஸ். தமிழக சட்ட சபை தேர்தலில் போட்டியிட விரும்பினால் அன்புமணி நாடாளுமன்ற
உறுப்பினர் பதவியை துறக்க வேண்டிய நிலை ஏற்படும் பலமான கட்சியுடன் இணையாமல் வெற்றி
பெற முடியாது என்பதை சாதாரண மக்கள் அறிவார்கள். அதனை அரசியல்வாதியான ராமதாஸ்
உணரவில்லை.
தமிழக காங்கிரஸ் கட்சியில் பலமான சக்தியாக விளங்கிய வாசன்
கட்சியில் இருந்து வெளியேறி தகப்பனின் கட்சிக்கு உயிர் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்த்தவர்களில் ஒருவரான மூப்பனார் தலைமையுடன்
பிணக்குப்பட்டு தனிக்கட்சி ஆரம்பித்தார். கங்கிரஸ் கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கு
எதிரான அலை அவரது கட்சியின் முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுடன்
காங்கிரஸ் கட்சி இணைவதை விரும்பாத மூப்பனார் தனிக்கட்சி ஆரம்பித்தார். தமிழக
காங்கிரசில் செல்வாக்கு உள்ளவர்களான பா.சிதம்பரம் போற தலைவர்கள் அவருடன் இனைந்து
வெளியேறினர்.கருணாநிதியுடன் கூட்டுச் சேர்ந்த
அவரது கட்சி வெற்றி பெற்றது.
ஜெயலலிதாவுக்கு எதிரான அலை, ரஜினியின் ஆதரவுக்குரல்
என்பனவற்றின் உதவியால் தமிழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக மூப்பனார் பரிணமித்தார்.
அரசியலில் கூட்டணி நிரந்தரமில்லை என்பற்கு
மூப்பனார் விதிவிலக்கல்ல. ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்த மூப்பனார் டைடிசியில்
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டார். அப்போது அவருக்கு
இருந்த செல்வாக்கு குறைந்தது. மூப்பனார் மறைந்ததும். கட்சியைக் கலைத்துவிட்டு
அவரது மகனான வாசன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசின் கோஷ்டிப்
பூசலுக்கு பலியான வாசன் தகப்பனின் கட்சிக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில்
செல்வாக்கு மிக்க தலைவர்கள் எவரும் அவருக்குப் பின்னால் செல்லவில்லை. காங்கிரஸ்
கட்சிக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரான அலை எதுவும் இல்லை. இந்த நிலையில் அவரது கட்சியால்
எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.
வாசனின் வெளியேற்த்தால்
காங்கிரஸின் செல்வாக்கு பாதிப்படையவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான
நெருக்கம் விரிவடைந்ததால் வாசன் கருணாநிதியின் பக்கம் செல்வார் என்று எதிர் பார்க்கப்பட்டது. வாசன் அமைதியாக இருந்தார். திராவிட
முன்னேற்றக் கழகமும் வாசனுக்கு அழைப்பு விடவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும்
காங்கிரஸும் தமது பகையை மறந்து ஒன்றாகியதால் வாசன் அங்கு செல்ல முடியாத நிலை
உள்ளது. மக்கள் நலக் கூட்டணி வாசனை வருந்தி அழைத்தது. அந்த அழைப்புக்கு
பதிலளிக்காது அலட்சியமாக இருந்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும்
என்பதே வாசனின் விருப்பம். ஜெயலலிதாவின் அழைப்புக்காக அவர் காத்திருக்கிறார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் முதலில் வெற்றிகரமாக அமையவில்லை.ஜெயலலிதாவின்
கடைக்கண் பார்வையினால் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவரானார். அப்படி ஒரு பதவி
வேண்டும் என்பது வாசனின் விருப்பம். மற்றைய தலைவர்கள் முதலமைச்சராக ஆசைப்பட வாசன்,
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை குறி வைக்கிறார். ஜெயலலிதாவுடன் இணைந்தால் அதிக
தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறலாம்
என வாசன் கருதுகிறார்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் ஜெயலலிதாவுக்கு பாதிப்பை
ஏற்படுத்தியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளை
விஜயகாந்த் அள்ளினார். விஜயகாந்தின்
வளர்ச்சியை முடக்குவதற்காக அவரை தனது பக்கத்துக்கு இழுப்பதில் ஜெயலலிதா வெற்றி
பெற்றார். கடந்த சட்ட சபைத் தேர்தலில் எதிர்பாராத வெற்றி விஜயகாந்தை மகிழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கடித்தது. தனது வெற்றிக்குக் கிடைத்த பரிசு எதிர்க்கட்சித் தலைவர் பதவி என
விஜயகாந்த் பெருமைப்பட்டார். காலப்போக்கில் தான் தோற்கடிக்கப்பட்டதை
உணர்ந்தார்.
தமிழக சட்ட சபைத்
தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தனது வாக்கின் பலத்தை
விஜயகாந்த் வெளிப்படுத்தியதால் அவருடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தார். வாசனுக்குரிய
வாக்கு வங்கி பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியாது. வாசன் மட்டும் தான்
அக்கட்சியில் உள்ள ஒரே ஒரு தலைவர். காங்கிரஸ் கட்சியால்தான் வாசனுக்கு மதிப்பு.
வாசனின் வெளியேற்றத்தால் காங்கிராஸ்
கட்சிக்குப் பாதிப்பு இல்லை
.
பலமான கூட்டணியில் இவர்கள் சேர்ந்தால் கட்சிக்கு இலாபம்.
இல்லையேல் முதலுக்கே மோசம். முதலமைச்சர் பதவிக்காக அன்புமணியும், ஜெயலலிதாவின்
அழைப்புக்காக வாசனும் காத்திருக்கின்றனர். தமிழக வாக்காளர்கள் தேர்தலுக்காக
காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவு இவர்களின் செல்வாக்கை பகிரங்கமாக்கும்.
ரமணி
தமிழ்த்தந்தி
27/03/16
No comments:
Post a Comment