Saturday, March 5, 2016

வில்லங்க விஜயகாந்த் விரக்தியில் உறுப்பினர்கள்

தமிழக சட்ட சபைக்கான தேர்தல்  பற்றிய அறிவிப்பு முறைப்படி வெளியகுமுன்னரே சகல அரசியல் கட்சிகளும் கூட்டணி பற்றி இரகசியமாகவும் வெளிப்படையாகவும் பேசத்தொடங்கிவிட்டன. வைகோ,திருமாவளவன்,ஆகியோர்  இடதுசாரித் தலைவர்களுடன்  இணைந்து தேர்தலைச்சந்திக்கத் தயாராகிவிட்டனர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட்டணி பற்றி உறுதியான முடிவை எடுக்கமுன்னர் மக்கள் நலக் கூட்டணி தேர்தலுக்குத் தயாராகிவிட்டது. விஜயகாந்தையும் வாசனையும் எதிர்பார்த்து மக்கள் நலக் கூட்டணி  காத்திருக்கிறது. வாசன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தை பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார். விஜயகாந்த் ஒரே நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழக‌ம்,பாரதீய ஜனதாக் கட்சி, மக்கள் நலக் கூட்டணி ஆகியவற்றுடன் பேரம் பேசுகிறார். 
முதல்வர் கனவில் இருக்கும் விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைய விரும்பவில்லை. விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என அறிவிப்பதற்கு மக்கள் நலக் கூட்டணி தயாராக இருக்கிறது. விஜயகாந்தின் பார்வை பாரதீய ஜனதாவின் பக்கம் உள்ளது. பாரதீய ஜனதாவுடன் இணைந்தால் மத்திய அரசில் அமைச்சுப் பதவி பெறலாம் என்று விஜயகாந்த் நினைக்கிறார்.விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணையப்போகிறார் எனவும் பாரதீய ஜனதாவுடன் சேரப்போகிறார் எனவும் முரண்பட்ட செய்திகள் வெளியாகின்றன. இச்செய்திகளை மறுக்காது இரண்டு கட்சிகளுக்கும் போக்குக்காட்டிக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்தின் உறுதியான முடிவு தெரியாது அவரது கட்சி உறுப்பினர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
 பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்துக்கு விஜயம் செய்து விஜயகாந்துடன் பேச்சு வார்த்தை நடத்தினார். விஜயகாந்த் வழக்கம்போல பிடிகொடாது பேச்சு வார்த்தை நடத்தினார். முதலவர் வேட்பாளராக தன்னை அறிவிக்கும் படி விஜயகாந்த்  வேண்டுகோள் விடுத்துள்ளார். மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் போது முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் இல்லை. அதனால் அப்படியான அறிவிப்பை வெளியிட  பாரதீய ஜனதாக் கட்சி மறுக்கிறது. இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டால் ஏனைய மாநிலத்தில் செல்வாக்கான கட்சிகளும் இதனை கோர வாய்ப்பு உள்ளது.
 பாரதீய ஜனதாக் கட்சியுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறை கூறும் பேச்சு வார்த்தையாக மாறியது. பாரதீய ஜனதாக்  கட்சியில் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் தன்னை மத்திய அமைச்சர்கள் மதிப்பதில்லை என்ற புகார் பட்டியலை பிரகாஷ்  ஜவடேகரிடம் விஜயகாந்த் எடுத்தியம்பினார். தமிழகத்துக்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள் தனது அரசியல் எதிரியான ஜெயலலிதாவை சென்று சந்திப்பதை விஜயகாந்தால் சகிக்க முடியவில்லை.மத்திய அமைச்சார்கள்  தமிழகத்துக்கு விஜயம் செய்யும் போது கூட்டணிக் கட்சித் தலைவரான தன்னைச் சந்திக்க வேண்டும் என விஜயகாந்த் எதிர் பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால், மத்திய   அரசுக்கு விஜயகாந்தை விட ஜெயலலிதா மிக முக்கியமானவர். நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தின் தயவு பாரதீய ஜனதாக் கட்சிக்குத் தேவை அதனால்  ஜெயலலிதாவைத் திருப்திப்படுத்த வேண்டிய கடப்பாடு அக் கட்சித் தலைவர்களுக்கு உள்ளது.



பாரதீய ஜனதாக்  கட்சியை ஜெயலலிதா சற்று தள்ளியே வைத்திருக்கிறார். ஜெயலலிதாவுடன்  அல்லது விஜயகாந்துடன் maddum தான் பாரதீய ஜனதா இணையும் வாய்ப்பு உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சியை விட்டுபிடிக்க  ஜெயலலிதா விரும்புகிறார்.  பாரதீய ஜனதாவுடன் சேரமாட்டோம் என மக்கள் நலக் கூட்டணி பகிரங்கமாக அறிவித்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழக‌ம்  காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளது. கண்ணைக்குத் தெரியும் இரண்டு தெரிவுகளில் ஒன்றான விஜயகாந்தை வளைத்துப்போட பாரதீய ஜனதாக் கட்சி முயற்சி செய்கிறது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடனான பேச்சு வார்த்தைதியின் பின்னர் மரியாதையை நிமித்தமான சந்திப்பு என விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனால் சற்று எரிச்சலடைந்த  பாரதீய ஜனதாக் கட்சி  சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மீண்டும் விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது.
தமிழகத்துக்கு விஜயம் செய்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் சிறிய கட்சிகளுடன் பேச்சு வரத்தை நடத்தி விஜயகாந்தை எரிச்சலடைய வைத்துள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சி,புதிய நீதிக் கட்சித் தலைவர்கள் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து கூட்டணியை  உறுதி செய்துள்ளனர். சரத்குமாரைத் தேடிச்சென்று பிரகாஷ் ஜவடேகர் சந்தித்தது புதிய திருப்பமாக உள்ளது. ஜெயலலிதாவின் பிரசாரப்  பிரங்கி போலச்செயற்பட்ட சரத்குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌க் கூட்டணியில் இருந்து அண்மையில் வெளியேறி  திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைவதற்கு முயற்சி செய்தார். விஜயகாந்தை எதிர்  பார்த்துக்கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழக‌ம்  சரத்குமாரைக் கண்டுகொள்ளவில்லை.பிரகாஷ் ஜவடேகர்  தேடிச்சென்று சந்தித்தது சரத்குமாருக்கு இன்ப அதிர்ச்ச்சியாக உள்ளது. இதேவேளை விஜயகந்துக்கான எச்சரிக்கையாகவும் இது கணிக்கப்படுக்றது.
 விஜயகாந்தின்    பார்வை பாரதீய  ஜனதாக் கட்சியின் பக்கம் உள்ளது. அவரது கட்சி உறுப்பினர்கள் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைவதை விரும்புகின்றனர். தேர்தலில் போட்டியிட விருப்பு மனுத் தாக்கல் செய்தவர்களிடம்  விஜயகாந்த் நடத்திய நேர்காணலில் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் சேர்வதையே அனைவரும் விரும்புவதாகத் தெரிய வருகிறது. வெற்றி பெறும்  கூட்டணியில் சேர்வதை விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்கள் விரும்புகிறார்கள். விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திராவிட முன்னேற்றக் கழக‌த்த்டன் இணைவதை விரும்பவில்லை. மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்ட விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழக‌த்தை தவிர்க்கமுனைகிறார்.

திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றியடையலாம் என விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள்.   விஜயகாந்த் முதலமைச்சராக முடியாது. நாளைய முதலமைச்சர்  என்ற கனவில் இருக்கும் விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைவதற்கு பின்னடிக்கிறார். திராவிட முன்னேற்றக் கழக‌ம் ஏற்றுக்கொள்ளாத முடியாத நிபந்தனைகளை அவர் முன்வைக்கிறார். 75 தொகுதிகள், ஆட்சியில் பங்கு , துணை முதலமைச்சர், பத்து அமைச்சர்கள்,அடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில்  50 சதவித இடம் ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை   திராவிட முன்னேற்றக் கழகம்  அடியோடு நிராகரித்து விட்டது.

கருணாநிதிக்கு  அடுத்த இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார். இருவருக்கும் இடையில் விஜயகாந்த் வருவதை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்  கொள்ளாது. விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது திராவிட முன்னேற்றக் கழகம் தான் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கியது.எதிர்க் கட்சித் தலைவர் பதவிய சரியான முறையில் பயன்படுத்தாத  விஜயகாந்த்  துணை முதலவர் பதவிக்கு ஆசைப்படுகிறார்.
 தமிழக சட்டசபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியிட முன்னர் விஜயகாந்த் தனது உறுதியான முடிவை வெளியிட வேண்டும். கட்சியின் வக்குகி வாங்கியை அதிகரிப்பதற்காக பலமான கூட்டணியில் சேரவேண்டிய கட்டாயம் விஜயகாந்துக்கு உள்ளது. அவரது கட்சியில் விஜயகாந்த் maddum தான் தனி ஒரு தலைவராக விளங்குகிறார். அவரது கட்சியின் வாக்கு வங்கி குறைவடைந்து போகிறது. தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் அவரது கட்சியின்  வாக்கு வங்கி  குறைவடைந்தால் அடுத்து வரும் தேர்தல்களின் அவரால் பேரம் பேச முடியாது.
 வர்மா
 தமிழ்த்தந்தி

06/03/16

No comments: