சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும்
இந்துசமய அலுவல்கள் அமைச்சு வடக்கில்
நிர்மானிக்கும் 65 ஆயிரம் வீடமைப்புத்திட்டத்தில் பாரிய மோசடி
நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி கலந்து கொண்ட
வைபவத்தில் உரையாற்றிய .வடமாகாண
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்த வீடுகள் யாழ்ப்பாண மக்களுக்கு ஏற்றதல்ல
என்று எடுத்துரைத்தார். வடக்கு, கிழக்கு மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும்
திட்டத்தில் மோசடி இடம்பெற்றிருப்பதாகவும் ஒரு வீட்டிற்காக மதிப்பிடப்பட்டுள்ள
தொகை அதிகம் எனவும் பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்கவும், எம்.ஏ. சுமந்தினும் பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினர். அமைச்சர்
டி.எம்.சுவாமிநாதன் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து மோசடி எவையும்
நடைபெறவில்லை என்றார்.
வடக்கில் முன்னெடுக்கப்படும் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாணசபையில்
பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.வடக்கு மாகாணத்தில்அமைக்கப்படும் வீட்டுத் திட்டம்
பற்றிய சர்ச்சை காரணமாக வடமாகாண சபையில்
ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த வாரம் நடைபெற்ற அமர்வில் இந்த வீட்டுத்திட்டத்தை
வடக்கு மாகாணசபையுடன் கலந்தாலோசித்து முன்னெடுக்குமாறும், அதுவரைக்கும்
இவ்வீட்டுத்திட்டத்தை இடைநிறுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்ட பிரேரணையொன்று
ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனூடாக தொலைநகல் மூலம்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்களும் வசதியாக வாழவேண்டும் என்பதற்காக வடக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள் குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு
முன்னெடுத்துள்ளது. இதற்கான அனுமதி கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது.
இந்தியாவில் உள்ள பிரபலமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம்
முறைகேடானது என்ற கருத்து பரவலாக உள்ளது. இலங்கையின் சூழலுக்கு இந்த வீடு
உகந்ததல்ல என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சரிடம் இருந்து சரியான பதில்
கிடைக்கவில்லை. உலோகத்தினால் வீடு அமைக்கப்பட
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தின் வெப்பநிலைக்கு
உலோகத்தினாலான வீடுகள் வாழும் சூழ் நிலைக்கு ஏற்றதல்ல என்பதை அமைச்சு உணரத்தவறி
உள்ளதாக கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. நிலம்,சுவர் அனைத்தும்
உலோகத்தினாலானவை சமையலறை இல்லை எனத்
தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுத் தளவாடப் பொருட்கள், மின் இணைப்பு,காஸ், வைபை என்பனவற்றை வீடு கட்டும் நிறுவனம் இலவசமாக
வழங்கும் என கூறப்படுகிறது. யாழ்ப்பணத்தில் உள்ள மக்களில் அதிகமானோர் சமையலுக்கு
விறகையே பயன் படுத்துகின்றனர். வீட்டில் உள்ள பயன் தரு மரங்களில் இருந்து விறகு
கிடைக்கிறது. இலவச காஸ் எவ்வளவு
காலத்துக்கு வழங்குவார்கள் எனக் குறிப்பிடவில்லை. வீடு கட்டுவதையே யாழ்ப்பாண மக்கள்
விரும்புவர்கள். இந்திய நிறுவனம் வீடு கட்டப்போவதகத் தெரிவிக்கப்படுகிறது.
உண்மையில் அந்த நிறுவனம் வீடு கட்டுவதில்லை. அந்த நிறுவனத்தால் வீடுகள்
இணைக்கப்படுகின்றன.
சாத்திரம் சம்பிரதயங்களில் அதிக நம்பிக்கை உள்ள யாழ்ப்பாண
மக்கள் வீடு கட்டும் போது வாஸ்த்து சாத்திரம் பார்ப்பார்கள். தாயறை எங்கே இருக்க
வேண்டும், சமையலறை எந்தத் திசையில் இருக்க வேண்டும் கிணறு அமையும் இடம் அங்கே நல்ல நீர் உள்ளதா, மலசலகூடம் இருக்கும் இடம்
என்பனவற்றை தமக்கு நம்பிக்கையான சாத்திரியுடன் ஆலோசித்தே வீடு கட்டுவார்கள். தமது பிள்ளைகளின் சாதகத்துக்கு ஏற்ற
வகையிலேதான் யாழ்ப்பாணத்தில் உள்ள வீடுகள் உள்ளன. இந்திய நிறுவனம் அமைக்கும்
வீடுகளில் இந்த சாத்திர சம்பிரதாயங்கள் எவையும் இல்லை.
இந்தியாவின் உதவியுடன் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு ஐந்து
இலட்சம் ரூபா வழங்கப்பட்டது. பயனாளிகள்
தமக்கு சாதகமான வகையிலே வீடுகளை கட்டினார்கள். அதிகமானோர் மேலதிகமாகச்
செலவுசெய்து தமக்கு வசதியான
வீடுகளைக் கட்டினார்கள். பயனாளிகளுக்கு விருப்பம் இல்லாத வீடுகளையே இந்திய
நிறுவனம் கொடுக்கப்போவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.வைபை போன்ற வசதிகளை சிலர் எதிர் பார்க்கவில்லை.
நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக பாராளுமன்றத்தில்
நடந்த விவாதத்தில் எம்.ஏ. சுமந்திரன்
வீட்டுத்திட்டம் பற்றி கருத்துத் தெரிவிக்கையில்
இந்திய வீடுகளுக்கு தலா 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா
மதிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 21 இலட்சம்
ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. இது இந்திய வீடுகளை விட 3 மடங்காகும். இதனை கொண்டு 2
வீடுகள் நிர்மாணிக்க முடியும்.எமது மக்களுக்கு வீடுகள் தேவை. அவர்களுக்கு இலவசமாக
வீடுகள் அமைப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்.
அரசாங்கம் வழங்கும் வீடுகளுக்கு தளபாடங்கள் சூரிய சக்தி நீர் வசதி என்பன
வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் சரியான பெறுமதி தெரியாதுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த
வீடுகள் 5 வருடங்கள் கூட நிலைக்குமா என்பது சந்தேகமே. இவற்றின் தரம் தொடர்பில்
பிரச்சினை இருக்கிறது. இந்தத் திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீளாய்வு செய்ய
வேண்டும்.
வீட்டுத்திட்டம் குறித்து அநுரகுமார திஸாநாயக்க
தெரிவித்ததாவது
இடம்பெயர்ந்த மக்களுக்காக 65 ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கு
மாகாணங்களில் கட்டுவதற்காக நீண்டகால அடிப்படையில் என வெளிநாட்டு கடன் உதவி
கிடைத்துள்ளது. இதற்காக திறந்த கேள்வி மனு கோரப்பட்டது.ஆனால் கொள்முதல் செயற்பாடு
இரகசியமாக வெளிப்படைத் தன்மையின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பாரிய நிதி மோசடி
இடம்பெற்றுள்ளது.ஒரு வீட்டிற்கு 12 லட்சம் ரூபா செலவிட முதலில் மதிப்பீடு
செய்யப்பட்டது. பின்னர் இது 21 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தின் ஒரு வீட்டுக்கு 5 லட்சத்து 50
ஆயிரம் ரூபா செலவிடப்பட்டது. இந்த மோசடியை மறைக்கும் நோக்கில் மோசடிக்கு எதிரான
அமைச்சு அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.21 லட்சத்தில் இரு வீடுகள் கட்ட
முடியும். வீடுகளுக்கு கிணறு, மின், தளபாட வசதிகள் வழங்குவதாக அமைச்சு கூறுகிறது.
வீடு கட்டுவதை ஒரு நிறுவனத்திற்கும், ஏனைய வசதிகள் வழங்குவதை வேறு
நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் என்றார்
வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் 65 ஆயிரம்
வீட்டுத்திட்டத்தில் எந்தவொரு மோசடியும் இடம்பெறவில்லை. இதன் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும்
நிராகரிக்கின்றோம் என்று மீள்குடியேற்றம்
புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்..
65 ஆயிரம் வீட்டுத்திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு
முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயமும் முறையற்ற தகவல்களைக் கொண்டே கூறப்பட்டுள்ளது.
22ஆம் திகதி செப்டெம்பர் 2015 ஆம் ஆண்டு 65 ஆயிரம் வீடுகளை வடக்கில் அமைப்பதற்கான
அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்த வீட்டுத் திட்டத்திற்கான நிதிச் செலவீனமானது வரவு
செலவு திட்டத்தைப் பாதிக்காதவாறு பெறப்பட்டு 12 வருடங்களில் கடனை மீளச்
செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அந்த வீடுகளை
அமைப்பதற்கான கேள்விமனுக்கள் கோரப்பட்டன.
எட்டு நிறுவனங்கள் விலைமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
அவற்றில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பன்முக நிறுவனமே முறையான தரமான விலைமனுவைத்
தாக்கல் செய்திருந்ததோடு சர்வதேச வங்கியொன்றின் ஊடாக கடனை மீளத் திருப்பிச்
செலுத்துவதற்கான ஏற்பாட்டையும் செய்திருந்தது.
அத்துடன் மிகக் குறைந்த வட்டி வீதமான 1.34, 1.74 வரையான
வட்டியையே அறவிடுவதற்கும் ஏற்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் தான் சர்வதேச
தரம் வாய்ந்த அந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையளிக்கப்பட்டது.மேலும், 12லட்சமாக
இருந்த வீட்டின் தொகை 21லட்சமாக அதிகரித்திருப்பதற்கான காரணம் மேலதிக பெறுமதி
அதிகரித்தமையேயாகும். விசேடமாக ஆரம்ப கணிப்பீட்டின் போது 133 ரூபாவாக காணப்பட்ட
டொலரின் பெறுமதி தற்போது 143 ரூபாவாக அதிகரித்திருப்பதால் தற்போது வீட்டுக்கான
செலவீனமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவை நவீன தொழில் நுட்பம் உள்ள வீடுகள்.. அதாவது வைபை, சூரிய
ஒளிச் சக்தியைப் பயன்படுத்தும் வகையிலான தொழில்நுட்பம்இ மலசலகூட வசதிகள் ஆகியன
காணப்படுகின்றன. மேலும் இந்த வீட்டுக்கான தளபாடங்களை குறித்த நிறுவனம் இலவசமாக
வழங்குகின்றது. ஆகவேதான் அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி வீட்டு செயற்திட்டம் தொடர்பான
செயற்றிட்டக்குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு நிதி அமைச்சு, கிராமிய
பொருளாதார அமைச்சு, சமூக சேவைகள் அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளையும்
உள்ளடக்கியுள்ளது.
வீட்டுத்திட்டத்துக்கான மாதிரி வீடு யாழில்
அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஜனாதிபதியும் அங்கு வருகை தந்து
பார்வையிட்டிருந்தார். அவ் வீட்டுத் திட்டம் தொடர்பான விமர்சனங்களை போக்குவதற்காக
மக்கள் கருத்துக்கள் பெறப்படுகின்றன. இந்த மாத இறுதிக்குள் அக்கருத்தறிக்கை
வெளியிடப்படவுள்ளது என்றார்.
பயனாளிகளின் கருத்து மிக முக்கியமானது. அங்கு வசிக்கப்
போகும் மக்களின் கருத்து அறியப்படுவது அவசியம்.
வானதி
சுடர் ஒளி
மார்ச் 29/ஏப்ரல் 5
No comments:
Post a Comment