Wednesday, September 13, 2017

சசிகலாவை வெளியேற்றி பதவிகளை உறுதிப்படுத்திய தலைவர்கள்



ஜெயலலிதாவின்  மறைவின் பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பல துண்டுகளாகப் பிரிந்து சிதறிக்கிடக்கிறது. தமிழகத்தில் கால்  ஊன்ற முடியாது தவித்த பாரதீய ஜனதாக் கட்சி, அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்துதிகிறது. சசிகலாவின் பதவி ஆசையால் அன்று முதலமைச்சராக இருந்த ஒ.பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்துவிட்டு முதலமைச்சர் பதவியை இராஜினாமாச்செய்துவிட்டு  கழகத்தில் இருந்து வெளியேறினார்.அப்போது சசிகலா அணி பன்னீர்ச்செல்வம் அணி என இரண்டாகியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என  நீதிமன்றத்தால்  தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா ஜெயலலிதாவின் சமாதியில் சத்தியம் செய்துவிட்டு சிறைக்குச்சென்றார். அவர் சிறைக்குச்செல்ல முன்பு எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகினார். தனது உறவினரான தினகரனை துணைப் பொதுச்செயலாளராக்கினார். தினகரனுக்கும் எடப்படிக்கும் கருத்ஹ்டு முரண்பாடு தோன்றியதால் தினகரனின் பின்னால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றனர். பன்னீர்,எடப்பாடி,தினகரன் ஆகிய மூவரின் தலைமையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பிரிந்து செயற்பட்டனர். இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் பின்னால் சில தொண்டர்கள் அணிவகுத்தனர். அரசியல்வாதிகளின் முன்னால் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.



திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய எம்.ஜி. ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை செய்வதற்காக தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டது. பொதுச்செயலாளருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.சக்தி மிக்க பொதுச்செயலாளர் பதவியைப் பெற பன்னீரும் எடப்பாடியும் முனைப்புக் காட்டியதால் ஜெயலலிதா நிரந்தரப் பொதுச்செயலாளர் எனத் தெரிவித்து அப்பதவியை இல்லாமல் செய்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ஒருங்கமைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக  பன்னீர்ச்செல்வமும் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் நியமிக்கப்பட்டுள்ளனர். செயலாளருக்கு இருக்கும் சகல அதிகாரங்களும்  இவர்கள் இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒரு கட்சியின் இரண்டு அணிகள் இணைந்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  பொதுச்செயலாளராக   சசிகலாவை நியமித்தால் தனது பதவி கைப்பற்றப்படும் என  பன்னீர்ச்செல்வம் நினைத்தார். தனது பதவிக்குக் குறி வைக்கப்பட்டதும் தன்னை மிரட்டியதால் தான் இராஜினாமாச் செய்ததாகத் தெரிவித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தில் தொடர்ச்சியாக  ஐந்து வருடங்கள்   உறுப்பினராக இருப்பவர் தான் அக் கட்சியில் பதவிக்கு தெரிவு செய்யப்பட வேண்டும்,   நிர்வாகிகளும் உறுப்பினர்களும் வாக்களித்துத் தான்    பொதுச்செயலாளர்  தெரிவு  செய்யப்படவேண்டும்  என யாப்பில் தெளிவாகச் செல்லப்பட்டிருக்கிறது. இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி  பொதுச்செயலாளராக சசிகலா  நியமிக்கப்பட்டார். இது  பன்னீர்ச்செல்வத்துக்குக் கிடைத்த வெற்றி.










தினகரன் தரப்பினர் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். பொதுக்குழு கூடுவதை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தை நாடினார். அங்க u அவர்களுக்கு தண்டப் பணத்துடன் எச்சரிக்கை விடப்பட்டது. தினகரனின் ஆதரவாளர்கள் எடப்பாடியின் உருவப் பொம்மையை கொளுத்தி ஆங்காங்கே  ஆர்ப்பட்டம்  செய்தனர்.   பதிலுக்கு எடப்பாடியின் விசுவாசிகள் தினகரனின் உருவப் பொம்மையைக் கொளுத்தினர்.தினகரனை ஆதரிக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பதவி வழங்கினால் அவர்கள் தன்னை விட்டுப் போய்விடுவார்கள் என தினகரன் பயப்படுகிறார்.

எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான தமிழக அரசு அறுதிப்  பெரும்பான்மையை இழந்து விட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை இல்லை என தினகரனின் பின்னால் நிற்கும் தமிழக சட்ட சபை உறுப்பினர்கள் தனித் தனியாக தமிழக பொறுப்பு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இரட்டை இரட்டை இலைச்சின்னத்தில்  போட்டியிட்டு வெற்றி பெற்ற அன்சாரி,தனியரசு,கருணாஸ் ஆகியோரும் முதலமைச்சர் மீதான தமது நம்பிக்கை இன்மையை தனி தனியாக வெளிப்படுத்தி விட்டனர். எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகமும் தனது நிலைப்பாட்டை ஆளுநரிடம் தெரிவித்து விட்டது. இது உட்கட்சி விவகாரம் என ஆளுநர் கையை விரித்து விட்டார்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதாவின் ஆசியினால் தமிழக அரசு தப்பிப் பிழைக்கிறது. மத்திய அரசை எதிர்க்கும் கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருந்தால் தமிழகத்தின் அரசியல்  நிலமை வேறாக இருந்திருக்கும். எதிர்க் கட்சிகள்  ஆளுநரின் இல்லத்துக்குச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்காது. ஆளுநரின் அதிகாரங்கள் என்ற போர்வையில் தமிழக ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும். பெரும்பனமை இல்லாத தமிழக் அரசு பெரும்பான்மையைப்நிரூபிக்க உத்தரவிடக்கோரி திராவிட முன்னேற்றக கழகம் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
தமிழக அரசின எதிர்காலத்தை  நீதிமன்றம்  தீர்மானிக்கப் போகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் பதவி பற்றிய வரையறையை தேர்தல் ஆணையம் சொல்லப்போகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தை தேர்தலின் போது தொண்டர்கள் வெளிப்படுத்தப்போகிறார்கள்.
வர்மா



No comments: