Tuesday, September 26, 2017

பதவியைக் காப்பாற்ற எடப்பாடி போராட்டம்



சசிகலா சிறைக்குச்சென்ற பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற  எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியைக் காப்பாற்றுவதற்காக பல உள்ளடி வேலைகளை அரங்கேற்றி வருகிறார். அதன் உச்சக் கட்டமாக அவருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய 18  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எடப்படிக்கு எதிராகக் கிளம்பிய பன்னீர்ச்செல்வம்  துணை முதல்வர் பதவியுடன் அமைதியடைந்து விட்டார். ஜெயலலிதாவின் மரணம் பற்றிய விசாரணை, சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்தை கழகத்தில் இருந்து வெளியேற்றுவது போன்ற உறுதி மொழிகளால் பன்னீர்ச்செல்வத்தின் வாய் அடைக்கப்பட்டது.

சசிகலாவால் துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்ட தினகரனின் குடைச்சல் எடப்பாடி பழனிச்சாமியின் முதலமைச்சர் பதவிக்குக் குறி வைத்தது. தினகரனின் பின்னால் நிற்கும் 19 அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது ஊழல் முற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். சபாநாயகர் தனபாலின் அழைப்பை ஏற்று விளக்கம் கொடுத்த ஜக்கையன் தினகரன் அணியில் இருந்து விலகி  எடப்பாடியின் பக்கம் சேர்ந்துவிட்டார். இந்தச்சந்திப்பின் பின்னால் குதிரை பேரம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனைய 18   உறுப்பினர்களும் சபாநாயகர் தனபாலைச் சந்திக்கவில்லை. அவர்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் பொறுப்பேற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தனது பதவியைக் காப்பாற்றுவதற்காகச் செயற்படுகிறதே  தவிர தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த விதமான நடவடிக்கைகளையும்  முன்னெடுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் முதலமைச்சர் பதவியை நீடிப்பதற்காக கூவத்தூரில் சிலர்  தங்க வைக்கப்பட்டனர். எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து முதலமைச்சர் பதவியைப் பிடுங்குவதற்காக தினகரனின் பக்கம் இருக்கும் சட்டசபை உறுப்பினர்கள் ஓரிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதலமைச்சருக்கு எதிராக அந்தக் கட்சியைச்சேர்ந்த உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்ததால் சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுட திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக பொறுப்பு  ஆளுநரைச் சந்தித்தது. அது  உட்கச்சிப் பிரச்சினை எனக்கூறிய அவர் கையை விரித்தார். தமிழக ஆளுநரை இயக்குவது மத்தியில் உள்ள பாரதீய ஜனதாதான் என்பது பட்ட வர்த்தனமான உண்மை. அடுத்த அரசியன் நகர்வு எப்படி இருக்கும் என்பதை உணர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தமிழக சட்ட சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்ற மனுவுடன்  நீதிமன்றத்தை நாடினார்.








ஸ்டாலின் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.  18  தொகுதிகள் காலியாக இருப்பதாக அவசர அவசரமாக அறிவிப்பு வெளியானது. ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகரே இன்னமும் காலியாக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாமல் தள்ளிப் போகிறது. இந்தப் பிரச்சினையும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவர்களின் தகுதி நீக்கத்தால் தமிழக அரசு தப்பிவிட்டது. என்றாலும் நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டில் எடப்பாடி அரசு இருக்கிறது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக சட்டசபை உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 

தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தற்காலிகத் தடை. 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கத்துக்குத் தடை இல்லை. ஆனால், அவர்களின் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அடுத்த மாதம் 4 ஆம் திகதி வழக்கு மீண்டும்  விசாரணைக்கு எடுக்கப்படும்.

எடப்பாடியின் அரசைத்  தூக்கி ஏறிய முயற்சி செய்த பன்னீர்ச்செல்வம் துணை முதல்வர் பதவியுடன் அமைதியாகிவிட்டார். இரட்டை  இலைச்சின்னத்தைக் கைப்பற்ற தேர்தல் ஆணையத்தில் ஏட்டிக்குப் போட்டியாகத் தாக்கல் செய்த மனுக்களை வாபஸ் வாங்கும் முயற்சியில் இருக்கின்றனர். இரட்டை இலைச்சின்னத்தைப் பெறுவதுதான் அவர்களது ஒரே குறிக்கோள். எடப்பாடியும்  பன்னீரும் ஒற்றுமையாகி விட்டனர். தினகரன் விடுவதாக இல்லை. பொதுச்செயலாளர் சசிகலா சசிகலாவின அனுமதி இன்றி சட்ட விரோதமாக பொதுச்சபை கூடியதாக புகார் தெரிவித்துள்ளார். இரட்டை  இலைச்சின்னம் தமக்கே உரிமையானது என கோரிக்கை  விடுத்துள்ளார். 

நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு தினகரன் குடைச்சல் கொடுக்கிறார். எடப்பாடி தனது அரச பலத்தைக் காட்டி தினகரனின் பின்னால் நிற்கும் சட்ட சபை உறுப்பினர்களை விரட்டுகிறார். பழைய ஆவணங்களைக் கிளறி குற்றப் பத்திரம் தயாரிக்கப்பட்டதால்        தினகரனின் தரப்பில் இருந்த இருவர் தலை மறைவாகிவிட்டனர்.எடப்பாடி பழனிச்சாமியின் மீது குற்றம் சுமத்தியவர்களில் இருவர் மீது குற்றம் சுமத்தப் பட்டு மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் அதிக காலத்தை தனக்கு எதிரான வழக்குகளுக்குப் பதிலளிப்பதிலேயே  கழித்தார்.இதனால் சட்டங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக சுமார் 24  வழக்குகள் தொடுக்கப்பட்டன. மூன்று வழக்குகளைத் தவிர மற்றைய அனைத்து வழக்குகளிலும் இருந்து சட்டத்தின் ஓட்டையால் தப்பிவிட்டார். ஜெயலலிதாவுக்கு  எதிராக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா குற்றம் சுமத்தியபோது அமையகப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. எடப்பாடி அரசு  18  சட்டசபை உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சிக்கலில் அகப்பட்டுள்ளது.  சபாநாயகரால் நிறைவேற்றப்பட்ட அதிகமான தகுதி நீக்கங்கள் நீதிமன்றத்தின் முன்னால் நிற்கவில்லை. 
 

தமிழக அரசியல்   வரலாற்றில் இது நான்காவது தகுதி நீக்க சம்பவமாகும். 1986 ஆம் ஆண்டு அரசியல் சட்ட நகலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் கருணாநிதி உட்பட  10  சட்டசபை உறுப்பினர்களை அன்றைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன் தகுதி நீக்கம் செய்தார். 1988  ஆம் ஆண்டு 33 சத வீதா இட ஒதுக்கு விவாதத்தின் போது  திராவிட முன்னேற்றக் கழக  சட்ட மன்ற உறுப்பினர்களை அன்றைய சபாநாயகர் பி.எச்.பாண்டியன்  தகுதி நீக்கம் செய்தார். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் விஜயகாந்தின் கட்சியைச்சேர்ந்த ஆறு  உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்தாகக் குற்றம் சாட்டி ஒரு வருடத்துக்குத்  தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்றம் அவர்களுக்கு நீதி வழங்கியது. 


எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசுமீது தமிழக மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அடுத்த தேர்தல் வரும் வை அவர்கள் பொறுமையாக இருக்கிறார்கள்.








No comments: