Friday, September 29, 2017

கோஹ்லியின் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலியா

 100 ஆவது போட்டியில் 100 அடித்த வார்னர்


இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வெற்றிபெற்று பத்தாவது போட்டியின் வெற்றியை சாதனையுடன் கொண்டாட இந்திய அணித் தலைவர் கோஹ்லி காத்திருந்தார். தொடர்ச்சியாக 11  போட்டிகளில் தோல்வியடைந்து,     இரண்டு போட்டிகளில் முடிவு  எட்டப்படாமையால் ஒரே ஒரு வெற்றிக்காக அவுஸ்திரேலிய அணித் தலைவர்  காத்திருந்தார். ஆகையால் பெங்களூரில் நடந்த போட்டி கோஹ்லிக்கும் ஸ்மித்துக்கும் மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்தது. அதிரடியாக விளையாடிய அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித்துக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 5  விக்கெற்களை இழந்து 334 ஓட்டங்கள் எடுத்தது. 335 என்ற இமாலய இலக்கி நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா  50 ஓவர்களில் 8 விக்கெற்களை இழந்து 313 ஓட்டங்கள் 313 எடுத்தது. அவுஸ்திரேலியா 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

 ஒருநாள் தொடரை ஏற்கனவே வென்று விட்டதால் இந்திய அணியில் குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அக்‌ஷர் பட்டேல், முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவுஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெலும் கடந்த போட்டியில் காயமடைந்த ஆஷ்டன் அகரும்விளையடவில்லை அவர்களுக்கு பதிலாக மேத்யூ வேட், ஆடம் ஜம்பா ஆகியோர் இடம் பிடித்தனர்.

94இல் ஆட்டமிழந்து சதத்தைத் தவற விட்ட ஆரோன் பிஞ்ச்

 


  டேவிட் வார்னரும், ஆரோன் பிஞ்சும் போட்டியை ஆரம்பித்தனர்.  துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளத்தைஇருவரும் சரியான முறையில் பயன்படுத்தி ஓட்டங்களைக் குவித்தனர். 35 ஆவது ஓவர் வரை  இவர்களைப் பிரிக்க முடியாது இந்திய வீரர்கள் தடுமாறினார்.

இந்தியாவின் சுழல், வேகம் எதுவுமே இவர்களைக் கட்டுப்படுத்தவில்லை. 15.4 ஓவர்களில் 100 ஓட்டங்களை எட்டினர். 31.2 ஓவர்களில் 200 ஓட்டங்களைக் கடந்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 231  ஓட்டங்கள் எடுத்தனர்.இந்த மைதானத்தில் 200 ஓட்டங்களுக்கு மேல் அடித்த முதல் ஜோடி இதுதான். அரைசதத்திற்கு பிறகு டேவிட் வார்னரின்  வேகம் சூடுபிடித்தது. சாஹலின் சுழலில் இரு சிக்சர்களை பறக்க விட்டார். இந்திய பந்து வீச்சை சிதறடித்த அவர் பவுண்டரி அடித்து தனது 14வது சதத்தை நிறைவு செய்தார். வார்னருக்கு இது 100வது ஒரு நாள் போட்டியாகும். 100வது ஆட்டத்தில் சதம் விளாசிய முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார்.

இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்த இந்தக் கூட்டணியை ஒரு வழியாக   சுழற்பந்து வீச்சாளர் கேதர் ஜாதவ் பிரித்தார்.  231  ஓட்டங்களை எடுத்தபோது டேவிட் வார்னர் ஆட்டமிழந்தார். 119 பந்துகளுக்கு முகம் கொடுத்த டேவிட் வார்னர் 12 பவுண்டரி 12 சிக்ஸர் அடங்கலாக 124 ஓட்டங்கள் எடுத்தார்.  இந்தியாவுக்கு எதிராக முதலாவது  விக்கெட்டுக்கு அவுஸ்திரேலிய ஜோடி எடுத்த அதிகபட்சம்   இது தான். 1986ம் ஆண்டு ஜெப்மார்ஷ்- டேவிட் பூன் எடுத்த 212 ஓட்டங்களே அதிகபட்சமாக இருந்தது.

வார்னரைத் தொடர்ந்து சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் 94  ஓட்டங்களில்  ஆட்டம் இழந்ததால் சத்தத்தைத் தவறவிட்டார். 96 பந்துகளை எதிர்கொண்ட ஆரோன் பிஞ்ச்  10 பவுண்டரி, 3 சிக்ஸர் அடங்கலாக  94 ஓட்டங்கள் எடுத்து அடுத்த ஓவரிலேயே ஆட்டம் இழந்தார்.  கப்டன் ஸ்டிவன் ஸ்மித் மூன்று ஓட்டங்களுடன் வெளியேறினார்.


 ரன் அவுட்டாகும் ரோகித்





அவுஸ்திரேலியா 375 ஓட்டங்கள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.   . ஆனால் 5 ஓட்டங்களில் இடைவெளியில் 3 வீரர்கள் ஆட்டமிழந்ததால்ஓட்ட எண்ணிக்கை குறைந்தது. அடுத்த 7 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை.ஆனால், கடைசி நேரத்தில் பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பின் அதிரடி இந்தியாவைக் கலங்கடித்தது. 30 பந்துகளைச் சந்தித்த ஹேன்ட்ஸ்கோம்ப், 3 பவுண்டரி. ஒரு சிக்ஸர் அடங்கலாக 43 ஓட்டங்கள் எடுத்தார் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்த அவுஸ்திரேலியா 334 ஓட்டங்கள் குவித்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறுவதற்கு   335  என்ற மெகா இலக்கை  நோக்கி களம் புகுந்த இந்திய அணி வீரர்களான  ரஹானேயும் ரோகித் சர்மாவும் அருமையான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர். தொடர்ந்து 3வது அரைசதம் அடித்த ரஹானே 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்..

 ரஹானே வெளியேற கப்டன் விராட் கோஹ்லி புகுந்தார். அவ்வப்போது பந்தை சிக்ஸருக்கு தூக்கியடித்து ரசிகர்களை குஷிப்படுத்திய ரோகித் சர்மா, 65 ஓட்டங்களில் துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். சிறிது நேரத்தில் கப்டன் விராட் கோஹ்லியும் 21 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இதன் பிறகு ஹர்திக் பாண்ட்யா  41 ஓட்டங்கள், கேதர் ஜாதவ் 67 ஓட்டங்கள்,  மனிஷ் பாண்டே 33 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசிக்கட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட டோனி 13 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெற்களை இழந்த இந்தியா 313  ஓட்டங்கள் எடுத்தது.  அவுஸ்திரேலியா 21 ஓட்ட  வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவின் அபாரகளத்தடுப்பு  இந்திய வீரர்களுக்கு  கடும் நெருக்கயைக் கொடுத்தது. தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தப்  போட்டியில்  தோல்வியடைந்ததால்,, கோஹ்லியின் தலைமையில் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியாவின் வெற்றிப் பயணம் முடிவடைந்தது. 2003ம் ஆண்டுக்கு பிறகு பெங்களூருவில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இது தான். அதே சமயம் வெளிநாட்டு மண்ணில் விளையாடிய  13 ஒரு நாள் போட்டிகளில் வெற்றியைக் காணாத   அவுஸ்திரேலியாவின்  வரலாறு முடிவுக்கு வந்தது.. 


இத்தொடரின் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற ஒக்ரோபர் முதலாம் திகதி  நாக்பூரில் நடக்கிறது

No comments: