Saturday, June 22, 2019

இங்கிலாந்தைத் தோற்கடித்து அரை இறுதி வாய்ப்பை தக்க வைத்தது இலங்கை



லீட்சில்   இங்கிலாந்தை எதிர்த்து விளையாடிய இலங்கை  20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.. இலங்கை அணியில் இரு மாற்றமாக திரிமன்னே, ஸ்ரீவர்தனா  ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ் ஆகியோர் இடம் பிடித்தனர்.  நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று     முதலில்  துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்து 232  ஓட்டங்கள் எடுத்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 47 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 212  ஓட்டங்கள் எடுத்தது.  

கப்டன் கருணாரத்னவும், விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். இவர்களை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். கருணாரத்ன ஒரு ஓட்டத்துடனும் குசல் பெரேரா இரண்டு ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அஷ்விக பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். அஸ்விக பெர்னாண்டோ 49 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸுடன் மத்தியூஸ் ஜோடி  சேர்ந்தார்.  ஓட்ட வேகம் மந்தமானது 23.2 ஓவர்களில் இலங்கை 100 ஓட்டங்களைத் தொட்டது. 16 ஓவர்களில் மூன்று பவுண்டரிகள் மட்டுமே அடிக்கப்பட்டன.  சுழற்பந்து வீச்சாளர்களான அடில் ரஷித்தும், மொயீன் அலியும் இலங்கை வீரர்களைக் கட்டுப்படுத்தினர். ரஷித்தின்   ஒரே ஓவரில் குசல் மென்டிஸ் 46 ஓட்டங்களுடனும்  ஜீவன் மென்டிஸ் ஓட்டமெடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மெண்டிஸ் கடசி வரை நிலைத்து நின்று ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் எடுத்தார்.


50 ஓவர்களில் ஒன்பது விக்கெற்களை இழந்த இலங்கை 232 ஒட்டங்கள் எடுத்தது. ஆர்ச்சர்,மாக் வூட் ஆகியோர் தலா மூன்று விக்கெற்களையும்,ரஷீட்  இரண்டு விக்கெற்களையும் வோக்கஸ் ஒரு விக்கெற்றையும் வீழ்த்தினர். 233 எனும் இலகுவான  இலக்கை எதிர்கொண்டும் களம்  இறங்கிய இங்கிலாந்து  வீரர்கள், இலங்கையின் பந்து வீச்சாளர்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் 47 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 121 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது.

யார்க்கர் மன்னன் மலிங்கவின் பந்து விச்சில் இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ (0), ஜேம்ஸ் வின்ஸ் (14)  ஆட்டமிழந்தனர். முந்தைய ஆட்டத்தில் 17 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்த கப்டன் மோர்கனும் [21]அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இங்கிலாந்து ரசிகர்கள் நம்பி இருந்த ஜோ ரூட் [57] ஜோஸ் பட்லர்[10] ஆகியோரையும் மலிங்க  வெளியேற்றினார். அதன் பின்னர் விளையாட்டு இலங்கையின் பக்கம் சாயத்தொடங்கியது.

மொயின் அலி [16],இ  ரஷீட் [2], ஆர்ச்சர் [1] ஆகியோர் அகில தனஞ்ஜெயவின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இலங்கையின் வெற்றி உறுதியானது. இங்கிலாந்தின் வெற்றிக்காக பென் ஸ்டோக்ஸ் மட்டும் தனி ஒருவனாகப் போராடி ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்கள் எடுத்தார். நான்கு விக்கெற்களை வீழ்த்திய மலிங்க ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆறு போட்டிகளில் விளையாடிய இலங்கைக்கு இது இரண்டாவது வெற்றி. ஆறு போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்துக்கு இது இரண்டாவது தோல்வி.
 

ஜோப்ரா ஆர்ச்சர் 15 விக்கெற்களை வீழ்த்தியுள்ளார். உலகக்கிண்ணப்போட்டியில் அதிக விக்கெற்களை வீழ்த்திய இரண்டாவது இங்கிலாந்து வீரரானார். முதலிடத்தில் இயன் போத்தமும், [16 விக்கெற்கெற் 1992] மூன்றாவது இடத்தில் அண்ரூ பிளிண்டாப்பும் , [14 விக்கெற் 2007] உள்ளனர். உலகக்கிண்ணப்போட்டி முடிவதற்கிடையில் ஆர்ச்சர் முதலிடத்துக்கு முன்னேறிவிடுவார்.
மலிங்க வீசிய முதல்  ஓவரின் இரண்டாவது பந்தில் இங்கிலாந்து வீரர் ஜானி போஸ்டோவ் ஓட்டமெடுக்காது கோல்டன் டக்கில்  இரண்டாவது முறையாக ஆட்டமிழந்தார். முன்னதாக தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இம்ரான் தாஹீரின் பந்தில் கோல்டன் டக் அவுட்டானார்.
ஜோரூட்டை ஆட்டமிழக்கச்செய்த மலிங்க உலகக்கிண்ணப் போட்டியில் 50 ஆவது விக்கெற்றை வீழ்த்தினார். சமிந்தவாசை [49] முந்தி நான்காவது இடத்தைப் பிடித்தார். அவுஸ்திரேலியாவின் மெக்ராத் ,[71] இலங்கி வீரர் முரளிதரன்[68]  பாகிஸ்தான் வீரர்  வாசீம் அக்ரம் [55] ஆகியோர்  முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

 
இங்கிலாந்து அணியின் எதிர்பாராத தோல்வியினால் உலகக்  கிண்ணப் போட்டி சுவாரசியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. இலங்கை அணியின் திடீர் விஸ்வரூபம் போட்டியைப் பரபரப்பாக்கியுள்ளது. இதனால் அடுத்து வரும் லீக்  ஆட்டங்கள் முக்கியத்துவம் அடைந்துள்ளன.
இந்த ஆட்டம் தொடர்பான புள்ளிவிவரங்கள்:

 இந்த உலகக்  கிண்ணப் போட்டிகளில் விளையாடும் அணிகளுடன் விளையாடிய கடைசி 12 ஆட்டங்களில் ஓர் ஆட்டத்தில் மட்டுமே இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த உலகக்  கிண்ணப்  போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகப் பெற்ற வெற்றி அது. பெரிய அணிகளுடன் இலங்கை அணி கடைசியாக கடந்த வருடம் அக்டோபரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிராக.
  உலகக்  கிண்ணப் போட்டிகளில் இலங்கையுடன் விளையாடிய கடைசி 4 ஆட்டங்களில் இங்கிலாந்து அணி தோற்றுள்ளது. 1999-ல் இலங்கையை வென்றபிறகு இங்கிலாந்தால் அந்த அணியை வெல்ல முடியவில்லை. 1999 வரை உலகக்  கிண்ணப் ஆட்டங்களில் இலங்கைக்கு எதிராக 7-ல் ஆறில் வென்றுள்ளது இங்கிலாந்து. அதன்பிறகு இலங்கையின் ஆதிக்கம் தான்.
  2015 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு 275 ஓட்டங்களுக்குக் குறைவான இலக்கை 24 முறை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, இருமுறை மட்டுமே தோல்வியடைந்துள்ளது. 2016-ல் பங்களாதேஷுக்கு எதிராக 238 ஓட்டங்களை அடைய முடியாமல் தோற்றது.   இலங்கை அடித்த 232 ஓட்டங்களை எட்ட முடியாமல் தோற்றது.
  2015 உலகக்  கிண்ணப் போட்டிக்குப் பிறகு உள்ளூரில் 275 ஓட்டங்களுக்கு குறைவான இலக்கை ஒவ்வொரு முறையும் அடைந்துள்ளது இங்கிலாந்து அணி. 13 ஆட்டங்களில்   முதல்முறையாகத் தோற்றுள்ளது.
  உள்ளூரில் முழுவதுமாக நடைபெற்ற ஒருநாள் ஆட்டங்களில் 233 என்கிற இலக்கை அடைய முடியாத நிலைமை கடந்த 11 வருடங்களில் முதல்முறையாக இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டுள்ளது.

  இந்த உலகக்  கிண்ணப் போட்டிக்கு வரும் முன்பு பாகிஸ்தான் தொடர்ச்சியாக 10 ஒருநாள் ஆட்டங்களிலும் இலங்கை அணி ஆடிய 9 ஆட்டங்களில் 8 ஆட்டங்களில் தோற்றும் இருந்தன. இந்த இரு அணிகளுடமும் இங்கிலாந்து அணி தற்போது தோற்றுள்ளது. 
  6 ஆட்டங்களில் 8 புள்ளிகள் எடுத்து 3-ம் இடத்தில் உள்ளது இங்கிலாந்து அணி. இப்போது பெரிய பிரச்னையில்லைதான். ஆனால்இ அடுத்ததாக  அவுஸ்திரேலியாஇ நியூஸிலாந்துஇ இந்தியா ஆகிய அணிகளைச் சந்திக்கிறது இங்கிலாந்து அணி. கடந்த 27 வருடங்களில் இந்த மூன்று அணிகளையும் உலகக்  கிண்ணப் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றதில்லை. இதனால் லீக் சுற்றின் கடைசிக் கட்டத்தில் நெருக்கடியைச் சந்தித்துள்ளது இங்கிலாந்து அணி.


No comments: