Saturday, June 8, 2019

இரட்டைத்தலைமைக்கு எதிராக அதிமுகவுக்குள் கலகக்குரல்


எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தை, ஜெயலலிதா கட்டுக்கோப்புடன் வழிநடத்தினார். ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின்னர் சசிகலாவின் முதல்வர் ஆசை, பன்னீர்ச்செல்வத்தின் தர்மயுத்தம், தினகரனின் சூழ்ச்சி, இரட்டைத் தலைமை ஆகியவற்றால் கழகத்தின் செல்வாக்கு குறைந்துள்ளது. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வைக்குத் தவமிருந்தவர்கள்  அனைவரும் ஆளுக்கொருபக்கம் கட்சியை வழிநடத்த  முற்படுகின்றனர். எமிஜிஆர் உருவாக்கிய பொதுச்செயலாளர் பதவியை அகற்றிபோதே தலைமைப் போட்டி வெளிப்படையாகத் தெரிந்தது. பதவியைத் தக்கவைக்கவும், கட்சியைக் காப்பாற்றவும் எடப்பாடியும் பன்னீரும் ஒற்றுமையாகினர்.நாடாளுமன்ற சட்டசபை  இடைத்தேர்தல்  முடிவின் பின்னர்  கலகக்குரல் எழுந்துள்ளது.
மதுரை வடக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், மதுரை  நகரத்தின்  முன்னாள் மேயருமான ராஜன் செல்லப்பாவின் பேட்டி கட்சிக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை பகிரங்கப்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைமைதான் வேண்டும். இரட்டைத்  தலைமை வேண்டாம் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் வழிநடத்திய கட்சியை எடப்பாடியும் பன்னீரும் போட்டுடைத்துவிட்டார்கள் என ராஜன் செல்லப்பா  வேதனைப்படுகிறார்.

பன்னீர்ச்செல்வத்திடமிருந்து முதலமைச்சர் கைப்பற்றிய எடப்பாடி பழனிச்சாமி, கச்சிதமாகக் காய் நகர்த்தி கட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். துணை முதலமைச்சர், ஒருங்கிணைப்பாளர் பதவிகளுடன் பன்னீர்ச்செல்வம் அதிருப்தியுடன் இருக்கிறார். எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே தினகரனுடைய ஆதரவாளர்களின் வேண்டுகோள். அதற்காகவே 18 சட்டசபை உறுப்பினர்களின் பதவி பறிக்கப்பட்டது. முதலமைச்சர் பதவி எடப்பாடியிடம் இருந்து பறிக்கப்பட்டால் அதனை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள யாரும் குரல் கொடுக்க மாட்டார்கள்.

எடப்பாடியிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பிடுங்குவதற்கு பன்னீர்ச்செல்வம் காத்துக்கொண்டிருக்கிறார். தேர்தல் முடிவுகள் பன்னீருக்கு ஆதரவாகவே இருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பன்னீரின் மகன் வெற்றி பெற்றார். சட்டமன்ற இடைத்தேர்தலில் பன்னீரின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பன்னீர்ச்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், மறைந்த ஜெயலலிதாவின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார். ஒன்பது சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லவில்லை. ஜெயலலிதா இருந்தபோது அம்மா அம்மா என காவடி தூக்கியவர்கள் ஜெயலலிதாவை மறந்து விட்டார்கள். ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்ல அந்த ஒன்பது பேரும் விரும்பியபோதும் யாரோ தடுத்துவிட்டதாக ராஜன் செல்லப்பா குண்டு ஒன்றைத் தூக்கிப்போட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும்,  அதன் கூட்டணிக்கட்சிகளின் உறுப்பினர்களும் கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினர். இதனால் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றவர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்குச் செல்லாததால் அந்தக் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ராஜன் செல்லப்பா தனி ஆளாகப் பேசி இருக்க முடியாது. அவருக்குப்பின்னால் இன்னும் சிலர்  இருக்கக்கூடும். ராஜன் செல்லப்பாவின் குரலின் பின்னர் எடப்பாடி எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து  மற்றைய குரல்கள்  ஒலிக்கும்.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டத் தலைமைக்கு எதிராக ராஜன் செல்லப்பா முதலில் குரல் எழுப்பியுள்ளார்.அந்தக் குரலுக்கு ஆதரவாக மேலும் குரல்கள்  ஒலிக்குமா, அல்லது அந்தக்குரல் அடக்கப்பட்டுவிடுமா என்பதை எடப்பாடி பன்னீர்ச்செல்வத்தின் அடுத்த நகர்வு முடிவு செய்யும்.

No comments: