Tuesday, June 4, 2019

தென் ஆபிரிக்காவுக்கு அதிர்ச்சியளித்த பங்களாதேஷ்


இங்கிலாந்துடனான முதலாவது போட்டியில் தோல்வியடைந்த தென். ஆபிரிக்கா பங்களாதேஷுக்கு எதிராக ஓவல் மைதாந்த்தில் நடந்த  இரண்டாவது  போட்டியிலும் தோல்வியடைந்தது.  நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்.ஆபிரிக்க அணித்தலைவர் டுபிளிசிஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். துடுப்பாட்டத்துக்கு ஏதுவான ஓவலில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஆறு விக்கெற்களை இழந்து 330 ஓட்டங்கள் எடுத்தது. 331 எனும் பிரமாண்டமான இலக்குடன் களம்  இறங்கிய தென். ஆபிரிக்கா ஆறு விக்கெற்களை இழந்து 301 ஓட்டங்கள் எடுத்தது. 21 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்ரி பெற்றதால் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய இக்கட்டான நிலைக்கு தென். ஆபிரிக்கா தள்ளப்பட்டது. தென். ஆபிரிக்க அணியில் இருந்து ஹசிம் அம்லா, பிரிட்டோரியஸ் ஆகியோர் நீக்கப்பட்டு டேவிட் மில்லர், க்ரிஸ் மோரிஸ் ஆகியோர்  விளையாடினர்.

பங்களாதேஷின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால், சவும்யா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர். பங்கலாதேஷ் 60 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 16 ஓட்டங்கள் எடுத்த த்மிம் இக்பால் ஆட்டமிழந்தார். அணியின் எண்ணிக்கையை உயர்த்திய சவும்யா சர்கார் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பங்களாதேஷினுடைய இரண்டு விக்கெற்களை வீழ்த்திய தென். ஆபிரிக்காவின் சந்தோசத்தை சகலதுறை ஆட்டக்காரரான ஷகிப் அல் ஹஸனும் விக்கெற் கீப்பர்  முஜிபுர் ரஹ்மானும் சிதறடித்தனர். இந்த ஜோடி தென். ஆபிரிக்க வீரர்களை கதிகலங்க வைத்து 32 ஆவது ஓவரில் 200 ஓட்டங்களை எடுத்தது.

பங்கலாதேஷ்  217 ஓட்டங்கள் எடுத்தபோது 75 ஓட்டங்கள் எடுத்த ஷகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். மூன்றவது விக்கெற்ரில் இணைந்த ஷகிப் அல் ஹஸன்,முஜிபுர் ரஹ்மான் ஜோடி  142 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தது. உலகக்கிண்ணப் போட்டியில் பங்களாதேஷ் ஜோடி ஒன்று அடித்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். 78 ஓட்டங்களுடன் முஜிபுர் ரஹ்மான் ஆட்டமிழந்ததும் ஓட்ட விகிதத்தில் சற்று சரிவு ஏற்பட்டது.

மஹமதுல்லா அதிரடியாக விளையாடி பங்களாதேஷின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். கடைசி நான்கு ஒவர்களில் பங்களாதேஷ் 54 ஓட்டங்கள் எடுத்து மிரட்டியது. 50 ஓவர்களில் பங்களாதேஷ் 330 ஓட்டங்கள் எடுத்தது. மஹமதுல்லா ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்கள் அடித்தார். இம்ரான் தாஹிர்,கிரிஸ் மொறிஸ்,பொலக்வாயோ ஆகியோர் தலா இரண்டு  விக்கெற்களை வீழத்தினர்.

தென்.ஆபிரிக்காவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான டிகொக் 23 ஓட்டங்களில்  ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மர்கம் 45 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அணியைக் காப்பாற்றப் போராடிய தலைவர் டுபிளிசிஸ் 62 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தார். டுசன் 41,  டுமினி 45,  ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.  மற்றைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க மில்லர் 38 ஓட்டங்கள் எடுத்தார். 50 ஓவர்கள் விளையாடிய தென். ஆபிரிக்கா எட்டு விக்கெற்களை இழந்து 309 ஓட்டங்கள் எடுத்தது.
பங்களாதேஷ் வீரர்களின் பந்துவீச்சும், களத்தடுப்பும் தென். ஆபிரிக்க வீரர்களைக் கட்டுப்படுத்தியது. முஜிபுர் ரஹ்மான் மூன்று விக்கெற்களையும்,  முஹமது சைபுதீன் இரண்டு விக்கெற்களையும் வீழ்த்தினர். சஹிப் அல் ஹஸன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

No comments: