13-வது ஐபிஎல் சீசனுக்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சோதனைக்கு மேல் சோதனை தொடர்ந்து வருகிறது. தனது தனிப்பட்ட காரணங்களால் திடீரென தொடரிலிருந்து துணைக் கப்டன் சுரேஷ் ரெய்னா விலகினார்.
அடுத்ததாக நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் கொரோனாவில் பாதிக்கப்பட்டார்கள். இதில் தீபக் சாஹர் பயிற்சிக்குத் திரும்பிவி்ட்டாலும், கெய்க்வாட் இன்னும் வரவில்லை.
சோதனைகள் பல வந்தாலும் சிஎஸ்கே வீரர்கள் வைத்துள்ள மூன்று சாதனைகளை ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் இனிமேல் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
நெருங்கமுடியாத இடத்தில் ஹர்பஜன் சிங்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் இந்த முறை விளையாடாவிட்டாலும், அவரின் சாதனைகள் பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். ஐபிஎல் தொடரில் அதிகமான டொட் பந்துகள் (அதாவது ஓட்டம் எடுக்காத பந்துகள்) வீசிய வீரர் எனும் பெருமையை ஹர்பஜன் சிங் வைத்துள்ளது.
இதுவரை ஐபிஎல் வரலாற்றில் 1,249 டொட் பந்துகளை ஹர்பஜன் சிங் வீசியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் இலங்கை வீரர் லசித் மலிங்கா 1,155 டொட் பந்துகளை வீசியுள்ளார். இந்த முறை இருவருமே விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3-வது இடத்தில் புவனேஷ்வர் குமார் 1,124 டொட் பந்துகளும், அமித் மிஸ்ரா 1,111 டொட் பந்துகளும் வீசியுள்ளனர். இதில் புவனேஷ்வர் குமாரும், அமித் மிஸ்ராவும் நிச்சயம் ஹர்பஜன் சிங் சாதனையை இந்த முறை தொட முடியாது. ஏறக்குறைய 125 பந்துகள் வி்த்தியாசத்தில் ஹர்பஜன் சிங் இருக்கிறார்.
புவனேஷ்வர் குமாருக்கு அதிகபட்சமாக 4 ஓவர்கள் மட்டுமே ஒரு போட்டியில் வீச முடியும் என்பதால், 125 டொட் பந்துகளை தொடர் முழுவதும் எட்டுவது மிகக்கடினம்தான். ஆதலால், நிச்சயம் ஹர்பஜன் சிங் சாதனையைத் தொடக்கூட முடியாது.
ஐபிஎல் தொடரில் இதுவரை ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரெய்னா பெயர் சொல்லும் சாதனை
13-வது ஐபிஎல் சீசனில் இருந்து ரெய்னா விலகினாலும், அவரின் சாதனை அவரின் பெயர் சொல்கிறது. இதுவரை சிஎஸ்கே, குஜராத் லயன்ஸ் ஆகியவற்றுக்காக விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 193 ஆட்டங்களில் பங்கேற்று அதிகமான போட்டிகளில் பங்கேற்ற வீரர் எனும் பெருமையை வைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5,368 ரன்கள் சேர்த்து முன்னணி ரன் சேர்ப்பாளராக ரெய்னா இருக்கிறார்.
ரெய்னாவுக்கு அடுத்த இடத்தில் டோனி 190 போட்டிகளிலும், ரோஹித் சர்மா 182 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 182 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளனர். இந்த முறை மூவரும் ரெய்னாவின் சாதனையை முறியடித்துவிடக்கூடும். ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, ராபின் உத்தப்பா ஆகியோர் தலா 177 போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
டோனியின் சாதனைகள்
ஐபிஎல் தொடரில் தல என்று வர்ணிக்கப்படும் சிஎஸ்கே கப்டன் டோனியின் சாதனை சர்வதேசப் போட்டிகளில் மட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் தொடர்கிறது. டோனியின் மின்னல் வேக விக்கெட் கீப்பிங்கிற்கு இணையாக சர்வதேச தரத்தில் வேறு எந்த விக்கெட் கீப்பரும் இல்லை என்று சவால் விடலாம்.
ஐபிஎல் தொடரில் கண்ணிமைக்கும் நேரத்தில் டோனி செய்யும் ரன் அவுட், ஸ்டெம்பிங், தவறவிடாமல் கச்சிதமாகப் பிடிக்கும் கேட்ச் என அசைக்க முடியாத இடத்தில் தோனி இருக்கிறார்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 190 போட்டிகளில் விளையாடிய தோனி, 94 கேட்ச்சுகளையும், 38 ஸ்டெம்பிங்குகளைச் செய்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிகமான டிஸ்மிஸல்களைச் செய்த விக்கெட் கீப்பர் எனும் பெருமையை தோனி வைத்துள்ளார்.
டோனிக்கு அடுத்தாற்போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கப்டன் தினேஷ் கார்த்திக் 2-வது இடத்தில் இருக்கிறார். இதுவரை தினேஷ் கார்த்திக் 101 கேட்ச்சுகளையும், 20 ஸ்டெம்பிங்குகளையும் செய்துள்ளார். இரு வீரர்களும் ஏறக்குறைய சமநிலையில் இருப்பதால் இந்த முறை டோனியை முந்திச் செல்வாரா தினேஷ் கார்த்திக் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ராபின் உத்தப்பா 90 டிஸ்மிஸல்கள் செய்து 3-வது இடத்தில் இருக்கிறார். ஐபிஎல் 2020 தொடரில் சிஎஸ்கே அணியில் ரெய்னா, ஹர்பஜன் சிங் இல்லாத நிலையில் டோனியின் பேட்டிங், விக்கெட் கீப்பிங், கேப்டன்ஷிப் ஆகியவற்றுக்கு இன்னும் கூடுதல் சுமை சேரப்போகிறது.
No comments:
Post a Comment