Wednesday, September 30, 2020

ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி; டெல்லிக்கு முதல் தோல்வி


 

இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த ஹைதராபாத்துக்கும் இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற டெல்லிக்கும் இடையே நடைபெற்றபோட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. 

அபுதாபியில் நேற்றிரவு நடந்த11-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அணியில் அவேஷ் கானுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் முகமது நபி, விருத்திமான் சஹா நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன், அப்துல் சமத் இடம் பிடித்தனர்.

ரஷித் கானின் மாயஜால சுழற்பந்துவீச்சு, வில்லியம்ஸனின் அதிரடி,, பேர்ஸ்டோவின் அரைசதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில்டெல்லி கபிடல்ஸ் அணியை 15 ஓட்டங்களில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய  சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் சேர்த்தது. 163 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கபிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 15 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் ஹைதராபாத்தை துடுப்பாடப் பணித்தார். டேவிட் வானரும், ஜானி பேர்ஸ்டோவும் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.


 

டெல்லி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இருவரும் முதல் 5 ஓவர்களில் 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்த ஓவரில் வானர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்கள் சேர்த்தனர். வானர்-பேர்ஸ்டோ கூட்டணி உடையாமல், பவர்-பிளேயில் எடுத்த மந்தமான ஸ்கோர் இதுவாகும்.   வானர் ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும், பேர்ஸ்டோ கேட்ச் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தனர். 

அடித்தாடிய வானர்  35 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்த போது (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அமித் மிஸ்ராவின் சுழலில்  விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே  3 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

. 3-வது விக்கெட்டுக்கு  பேர்ஸ்டோவுடன்வில்லியம்சன் இணைந்தார். பேர்ஸ்டோ 53 ஓட்டங்களில் (48 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்)  ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய  வில்லியம்சன்  26 பந்துகளில் 41 ஓட்டங்கள் ( 5 பவுண்டரி)  எடுத்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 

20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்களை  இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா, காஜிசோ ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


 

  163 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பிரித்வி ஷா 2 ஓட்டங்கள், கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ஓட்டங்கள், ஷிகர் தவான் 34 ஓட்டங்கள் (31 பந்து, 4 பவுண்டரி), ஹெட்மயர் 21 ஓட்டங்கள், ரிஷாப் பண்ட் 28 ஓட்டங்கள், ஸ்டோனிஸ் 11 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தனர். 

மத்திய ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் போட்ட கிடுக்குபிடியில் சிக்கி டெல்லி அணி தடம் புரண்டது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணி 7 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 15ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சுழலில் மிரட்டிய ரஷித்கான் 4 ஓவர்களில் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித்கானின்  .பி.எல்.-ல் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். ரி20 போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஷித் கான். கடந்த இரு போட்டிகளிலும் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்து முடியாமல் சிரமப்பட்ட ரஷித் கானுக்கு நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்தது.3-வது போட்டியில் விளையாடிய ஆடிய ஹைதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.


 

கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் வலிமையான வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணிக்கு எளிதாக அடையக் கூடிய இலக்குதான் என்றாலும் தனது வலிமையான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி குறைந்த ஸ்கோரை அடித்தும் வெற்றி பெற்றதற்கு ரஷித் கான், புவனேஷ்வர் ஆகியோரின்பந்துவீச்சு பிரதான காரணம்.

கடந்த இரு போட்டிகளிலும் தன்னை களமிறக்காமல் இருந்தது தவறு என்பதை கேப்டன் வானருக்கு நேற்றைய ஒரு போட்டியில் நிரூபித்துவிட்டார். வில்லியம்ஸன்.

பந்துவீச்சில் கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட் இன்றி தவித்த புவனேஷ்வர் குமார் நேற்றை ஆட்டத்தில் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய இரு முக்கிய வீரர்களை புவனேஷ்வர் வீழ்த்தினார்.

 தமிழக வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் நேற்று கவனிக்கவைத்துள்ளார். ஸ்டாய்னிஷ்க்கு அவர் வீசி 5 யார்கர்களும் அற்புதமானவை. தொடர்ந்து நடராஜன் இவ்வாறு பந்துவீசினால் பிசிசிஐயால் கவனிக்கப்படுவார்.

No comments: