Saturday, September 26, 2020

சென்னையை வீழ்த்தியது டெல்லி


   துபாயில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக நிகிடி நீக்கப்பட்டு ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார். டெல்லி அணியில் காயமடைந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு பதிலாக அமித் மிஸ்ரா இடம் பெற்றார். 

தொடர்ந்து 3-வது முறையாகடாஸ்ஜெயித்த சென்னை கேப்டன் டோனி இந்த தடவையும் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்  முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் அடித்தது. 176 ஓட்டங்கள் அடித்தால்வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 44 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது

பிரித்விஷாவின் அதிரடியும் கட்டுக்கோப்பான பந்து வீச்சும் சென்னையைத் தடுமாறவைத்தன. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இடது,வலது கை வீரர்களை பயிற்ச்சியாளர் பொண்டிங் களமிறக்கினார்.


 டெல்லி அணியின் ஷிகர் தவானும், பிரித்வி ஷாவும் கலம் இறங்கினர் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் 36 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர். சுழற்பந்து வீச்சாளர்கள் பந்து வீச வந்ததும் தாக்குதல் பாணியை தொடுத்தனர். ஜடேஜாவின் ஓவரில் தவான் சிக்சர், பவுண்டரி விரட்டினார். இதனால்ஓட்ட எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. 10.4 ஓவர்களில் 94 ஓட்டங்கள் எடுத்தபோது தவான் 35 ஓட்டங்களில் (27 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். பிரித்வி ஷா 64 ஓட்டங்கள் (43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் பியுஷ் சாவ்லாவின் சுழலில் டோனியால் அற்புதமாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார்

  கப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும், விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும் இணைந்து சென்னை வீரர்களை சலிப்படைய வைத்தனர்.. ஸ்ரேயாஸ் அய்யர் 26 ஓட்டங்களில் (22 பந்து) சாம் கர்ரன் பந்து வீச்சில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் டோனி பாய்ந்து விழுந்து பிரமாதமாக கேட்ச் செய்தார்

20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்புக்கு 175 ஓட்டங்கள் அடித்தது. ரிஷாப் பண்ட் 37 ஓட்டங்களுடனும் (25 பந்து, 5 பவுண்டரி), ஸ்டோனிஸ் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர். சென்னை தரப்பில் பியுஷ் சாவ்லா 2 விக்கெட்களும், சாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


 

பின்னர் 176 ஓட்டங்கள் எனும் இலக்கை நோக்கி ஆடிய சென்னை வீரர்களை, டெல்லி பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி திணறடித்தனர். பந்துகளை வீணடித்த தொடக்க ஆட்டக்காரர்கள் வட்சன் 14 ஓட்டங்களிலும் (16 பந்து), முரளிவிஜய் 10 ஓட்டங்களிலும் (15 பந்து) வெளியேறினர். இந்த மந்தமான தொடக்கத்தில் இருந்து சென்னை அணியால் மீள முடியவில்லை. கைவசம் விக்கெட் இருந்தும் டெல்லி பந்து வீச்சை அடித்து நொறுக்க திணறியது. ருதுராஜ் கெய்க்வாட் 5 ஓட்டங்கள், கேதர் ஜாதவ் 26 ஓட்டங்கள், பாப் டு பிளிஸ்சிஸ் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 6-வது வீரராகக் களம் இறங்கிய டோனியின் 15 ஓட்டங்கள் மட்டும் அடித்தார்.

20 ஓவர்களில் சென்னை அணியால் 7 விக்கெட்டுக்கு 131 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் டெல்லி அணி 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா 3 விக்கெட்களும், நார்ஜே 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

சிஎஸ்கே அணியை தனது பந்துவீச்சில் மிரட்டிவிட்டது டெல்லி அணி. ரபாடா, நார்ஜே, மிஸ்ரா, அக்சர் படேல் 4 பேரும் சிஎஸ்கே வீரர்களை அடிக விடாமல் கட்டுப்படுத்தினர்..


  நார்ஜே மணிக்கு 145 கி.மீ வேகத்தில் சராசரியாக பந்துவீசி சிஎஸ்கே வீரர்களை கதிகலங்கச் செய்துவிட்டார். அதிலும் ரபாடா தனது பந்துவீச்சில் அவ்வப்போது செய்யும் மாற்றங்கள் சிஎஸ்கே வீரர்களை திணறடித்துவி்ட்டது.

ரபாடா, மிஸ்ரா, நார்ஜே, படேல் என 4 பந்துவீச்சாளர்களும் சராசரியாக ஓவருக்கு 5 ஓட்டங்களுக்கு மேல் கொடுக்கவில்லை. ரபாடா 4 ஓவர்கள் வீசி 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களும், நார்ஜே 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களும், படேல் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டும், மிஸ்ரா விக்கெட் வீழ்தாவிட்டாலும் அனுபவமான பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்துவிட்டார்.


அமித் மிஸ்ராவும், அக்சர் படேலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி சிஎஸ்கே ஓட்டங்கள் சேர்க்கும் வேகத்தை மட்டுப்படுத்தினர். 7-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை சிஎஸ்கே அணியால் ஒரு பவுண்டரி கூடஅடிக்க முடியவில்லை

.3-வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே ராஜஸ்தானிடமும் தோற்று இருந்தது. டெல்லி அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

 விளையாட்டு  , ஐபிஎல்2020

 

No comments: