Thursday, November 12, 2020

டெல்லியால் கைவிடப்பட்ட போல்ட் சாதனை


 

ட்ரென்ட் போல்ட் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதில் உலகில் முன்னணியில் இருப்பவர். அவர் 2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் முதன்முறையாக இடம் பெற்று 18 விக்கெட்கள் வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

 
அடுத்த ஆண்டு காகிசோ ரபாடா டெல்லி அணியில் இணைந்தார். அவர் விக்கெட் வேட்டையாடி மிரட்டினார். ட்ரென்ட் போல்ட் அணியில் தன் முக்கியத்துவத்தை இழந்தார். சில போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. டெல்லி அணி அவரை மொத்தமாக ஒதுக்கியது.

 2020 ஐபிஎல் சீசனுக்கு முன் ஐபிஎல் அணிகள் வீரர்களை அணி மாற்றம் செய்யும் வாய்ப்பு இருந்தது. அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு சிறந்த புதிய பந்தை வீசும் ஸ்விங் பந்துவீச்சாளர் தேவை என்பதால் டெல்லி அணிக்கு தேவைப்படாத ட்ரென்ட் போல்ட்டை தங்கள் அணிக்கு மாற்றிக் கொள்ள வலை வீசியது.

டெல்லி அணி அவரை பணம் பெற்றுக் கொண்டு மும்பை அணியிடம் தாரை வார்த்து விட்டதாக அப்போது கூறப்பட்டது. 2020 ஐபிஎல் தொடரில் ட்ரென்ட் போல்ட் மும்பை அணிக்கு முதல் ஓவரை வீசினார். பவர்பிளே ஓவர்களில் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்தார் அவர்.

இந்த ஒரே சீசனில் போட்டிகளின் முதல் ஓவரில் மட்டும் அவர் 8 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் தன் பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவருக்கு இறுதிப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

 மும்பை இந்தியன்ஸ் எப்படி சரியாக டெல்லி அணியின் வீரரை சுமார் ஒரு மாதத்துக்கு முன்பே விலைக்கு வாங்கி அதே அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தியது என ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். அம்பானியின் அணி என்பதால் இதெல்லாம் சகஜம் தான் என கிண்டல் செய்தும் வருகின்றனர்.


 இதில் பரிதாப நிலையை அடைந்தது டெல்லி அணிதான். நல்ல வீரரை தவறாக கணித்து வெளியேற்றியதோடு, அவரே தங்கள் அணிக்கு 2020 ஐபிஎல் இறுதிப் போட்டியில் எமனாகவும் வருவார் என அவர்கள் நினைத்துக் கூடப் பார்த்து இருக்க மாட்டார்கள்.

No comments: