Wednesday, November 4, 2020

வெளியேறினார் வட்சன்


 

என் கனவுடன் நான் நிஜத்தில் வாழ்ந்தது அதிர்ஷ்டம். முடிவுக்கு வரும் இந்த சகாப்தம் கடினமாக இருக்கும். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வட்சன் இன்று அறிவித்துள்ளார்.


இந்தியர் களுக்கு பிடித்தமான நிறம் மஞ்சள். ஆனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மஞ்சளைப் பிடிக்காது. இந்திய கிரிக்கெட் அணியை புரட்டி எடுக்கும் அவுஸ்திரேலிய வீரர்கள் அணியும்சீருடை மஞ்சள்.


ஐபிஎல்தொடர் ஆரம்பமான பின்னர் இந்தியா மட்டுமல்ல உலகின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மஞ்சள்  பிடித்தமான நிறமாகியது. சென்னை அணியின்  சீருடை மஞ்சள் என்பதால் மஞ்சள் மகிமை பெற்றது. சென்னை அணி வீரர்கள் குடும்ப உறுப்பினரானார்கள்.


ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெளியேறியவுடன் அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் வட்சன் ஓய்வு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.


அவுஸ்திரேலியாவுக்கு வட்சன் சென்றபின் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், வீடியோ மூலம் தனது ஓய்வை வாட்ஸன் அறிவித்துள்ளார்.


ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வட்சன் லீக் போட்டிகளில் மட்டும் பல்வேறு நாடுகளில் விளையாடி வந்தார். இந்த அறிவிப்பின் மூலம் ஐபிஎல் மட்டுமின்றிஅவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக்கிலும் வாட்ஸனின் ஆட்டத்தைக் காண முடியாது.


ரி20 ஸ்டார்ஸ் எனும் யூடியூப் சேனலில் வட்சன் அளித்த பேட்டியில், “நான் 5 வயதில் டெஸ்ட் போட்டியைக் காணும்போது, என் அம்மாவிடம் நான் அவுஸ்திரேலிய அணிக்காக விளையாட வேண்டும் என்று கூறினேன். அது என் கனவாக இருந்தது.


ஆனால், இப்போது அதிகாரபூர்வமாக அனைத்துவிதமான கிரிக்கெட்டிலிருந்தும் நான் விடைபெறுகிறேன். என்னுடைய கனவுகளுடன் வாழ்ந்ததால் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டக்காரன்.


கடந்த மாதம் 29‍ம் திகதி கொல்கத்தா, சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் முடிந்தவுடனே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டேன்.


இப்போதுதான் சரியான நேரம் என உணர்கிறேன். நான் மிகவும் நேசிக்கும் சிஎஸ்கே அணியுடன் கடைசியாக கிரிக்கெட் விளையாடினேன். கடந்த 3 ஆண்டுகளாக என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தனர்.


பல காயங்கள், ஓய்வுகள் பின்னடைவுகளுக்குப் பின், 39 வயதில் என்னுடைய கிரிக்கெட் பயணத்தை முடிக்கிறேன். இந்த சகாப்தம் அடுத்துவரும் காலங்களில் மிகவும் கடினமாக இருக்கும். ஆனாலும் முயல்கிறேன்என்று தெரிவித்துள்ளார்.


கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியில் இடம் பெற்று வரும் வட்சன் அந்த ஆண்டு கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார்.

2018 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்து கோப்பையை வென்று கொடுத்தார். 2019 ஆம் ஆண்டில் மும்பை அணிக்கு எதிராக இறுதிப்போட்டி வரை சிஎஸ்கே அணி நகர வட்சன் பங்களிப்பு முக்கியக் காரணமாக அமைந்தது.

 

2018 ஆம் ஆண்டில் சிஎஸ்கே அணிக்காக 555 ஓட்டங்களும், 2019இல் 398 ஓட்டங்களும் வட்சன் சேர்த்தார். ஆனால், 2020 ஆம் ஆண்டு சீஸன் சிஎஸ்கே அணிக்கே சோகமாக முடிந்த நிலையில் அதில் 11 இன்னிங்ஸில் 299 ஓட்டங்கள் மட்டுமே வாட்ஸனால் சேர்க்க முடிந்தது.


ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஐபிஎல் தொடரில் சிறந்த ஆல்ரவுண்டராக வாட்ஸன் வலம் வந்துள்ளார். இதுவரை 145 போட்டிகளில் 3,874 ஓட்டங்கள் சேர்த்துள்ள வட்சன் பந்துவீச்சில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகளில் விளையாடியுள்ளார். இதில் சிஎஸ்கே அணிக்காக மட்டும் 43 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் ஐபிஎல் தொடர் நாயகன் விருதையும் வட்சன் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments: