Sunday, November 1, 2020

பஞ்சாப்பை வெளியேற்றிய சென்னை


 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 55-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கேஎல் ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது. சென்னை அணியை பொருத்தவரை ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. 

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டன் டோனி நாணயச் சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி சிறப்பான துவக்கம் பெற்றது. 5.1 ஓவரில் 48 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் கே.எல் ராகுல் -மயங்க் அகர்வால் ஜோடி பிரிந்தது.  சென்னை அணியின் பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி இருவரையும் ஆட்டமிழக்கச்செய்து பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.


 

அபாயகரமான வீரரான கெய்ல் (12 ஓட்டங்கள்) இம்ரான் தாஹிர் பந்தில் எல்.பி டபிள்யூ ஆனார். இதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் பஞ்சாப் அணியின் ஓட்டவேகம் மட்டுப்பட்டது. ஆனால், தீபக் ஹூடாவின் (30 பந்துகளில் 62 ஓட்டங்கள்) விஸ்வரூப ஆட்டத்தால் பஞ்சாப் அணி சவாலான ஸ்கோரை எட்டியது. பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 6   விக்கெட்டுகள் இழப்புக்கு 153  ஓட்டங்கள் எடுத்தது. பந்து வீச்சை பொறுத்தவரை நிகிடி அதிகபட்சமாக 39 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து   3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

154 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.


 

சென்னை , 9.5 ஓவரில் 82 ஓட்டங்கள் எடுத்தபோது டு பிளிஸ்சிஸ் 34 பந்தில் 48 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 

அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினர். இடையில் இருவரும் தடுமாறினாலும் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 18.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் அடித்தது.


 

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் 6 வெற்றிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். 

தொடர்ச்சியாக மூன்று அரைச் சதப்க்கள் அடித்த ருத்துராஜ் கெய்க்வாட், மூன்றாவது முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்று சாதனை செய்தார்.

No comments: