Friday, December 29, 2023

ரி10 அணிகளை வாங்கிய சினிமா ஸ்டார்கள்

 ஐபிஎல் ரி20 கிரிக்கெட் போன்று ஐ.எஸ்.பி.எல். ரி10 கிரிக்கெட் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இதில் சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.ஹைதராபாத் அணியின் உரிமத்தை நடிகர் ராம் சரன் வாங்கியுள்ளார். பெங்களூரு அணியின் உரிமத்தை நடிகர் ஹிர்திக் ரோசனும், ஜம்மு காஷ்மீர் அணியின் உரிமத்தை அக்‌ஷய் குமாரும், மும்பை அணியின் உரிமத்தை நடிகர் அமிதாப் பச்சனும் வாங்கியுள்ளனர்.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட் CCS Sports LLP  என்ற விளையாட்டு மேலாண்மை அமைப்பு ஆகும்.  இந்த அமைப்பு இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட்டினை நடத்தினாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்களே CCS Sports LLP அமைப்பிலும் முக்கிய பொறுப்பில் உள்ளனர். அதாவது பிசிசிஐ-யில் பொருளாளராக பணியாற்றி வரும் ஆஷிஷ் ஷெலர், மும்பை கிரிக்கெட் அசோசியேசன் தலைவராகவும் பிசிசிஐ-யில் உறுப்பினராகவும் உள்ள அமோல் காலே இருவரும் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் கோர் கமிட்டி உறுப்பினராக உள்ளனர். இதுமட்டும் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் தலைமை ஆலோசகராக உள்ளார். இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கின் தேர்வுக்குழுவில் முன்னாள் இந்திய ப்ளேயர்கள் பர்வின் ஆம்ரே மற்றும் ஜதின் பரஞ்ஜபே நியமிக்கப்பட்டுள்ளனர்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை இந்த டி10 கிரிக்கெட்டின் முதல் சீசன் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  மொத்தம் நடைபெறவுள்ளா 19 போட்டிகளும் அங்கீகரிக்கப்பட்ட மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத திறமையான வீரர்களை அடையாளம் காணவே இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு அணியும் 10 ஓவர்கள் விளையாடும் என்பதால் ஒரு போட்டி அதிகபட்சமாக ஒருமணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் முடிந்துவிடும். இது ரசிகர்களுக்கு இந்த போட்டிகளை பார்ப்பதற்கு ஆர்வத்தினை அதிகரிக்கும். இது மட்டும் இல்லாமல் இந்த போட்டிக்கு டென்னிஸ் பந்துகள்தான் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த டி10 கிரிக்கெட்டிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் பின்பற்றப்படும் விதிகள் பின்பற்றப்படுமா அல்லது ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் விதிகள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் தெளிவான விளக்கத்தினை இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் டி10 கிரிக்கெட்டை நடத்தும் CCS Sports LLP அமைப்பு தெளிவுபடுத்தவில்லை.


No comments: