Sunday, December 3, 2023

16 வயதில் உலகின் நம்பர் 1 வீராங்கனை கைகளற்ற ஷீத்தல் தேவி

உலக வில்வித்தை கூட்டமைப்பு வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட தரவரிசையில், இந்தியாவைச் சேர்ந்த 16 வயதே ஆன பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, மகளிருக்கான காம்பவுண்ட் வில்வித்தை திறந்த பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை ஆனார்.

 சர்வதேச அளவில் கைகள் இல்லாமல் வில்வித்தையில் போட்டியிடும் முதல் சர்வதேச வீராங்கனை என்ற சிறப்பை கொண்டவ இவர்   ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.

  சீனாவின் ஹாங்சோவில் நடந்து முடிந்த பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஷீத்தல் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி உட்பட மூன்று பதக்கங்களையும் வென்றார்.உலக வில்வித்தை அமைப்பின் தகவலின்படி, ஷீத்தல் மட்டும் தான் தனது கால்களால் வில்லை ஏவும் ஒரே சர்வதேச வில்வித்தை வீராங்கனை ஆவார்.

பிறக்கும்போதே ஃபோகோமெலியா என்ற நோயுடன் பிறந்தார். இது கைகள் அல்லது கால்கள் வளர்ச்சியடையாத பிறவி குறைபாடு ஆகும். 2021 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரில் இந்திய ராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டியின் போது அவரது வில்வித்தை விளையாட்டுத் திறமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து பயிற்சியாளர்களும் குடும்பத்தினரும் செயற்கைக் கையை அவருக்கு பொருத்த முயன்றனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. செயற்கை கைகளை பொறுத்த முடியாததால் ஏமாற்றம் அடைந்தாலும், ஷீத்தல் மனம் தளரவில்லை.

மேலும், மருத்துவ மதிப்பீட்டில், உடலின் மேற்பகுதி வலுவாக இருப்பது கண்டறியப்பட்டது. அது அவருக்கு வில்வித்தை விளையாட்டில் பங்கேற்பதற்கு சாதகமாக அமைந்தது. ஷீடல் 18 வயதுக்குட்பட்டோருக்கான உடல் திறன் கொண்ட போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களையும் வென்றுள்ளார். செக் குடியரசின் பில்சனில் நடைபெற்ற பாரா வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில்   பங்கேற்றபோது, கைகள் இல்லாமல் வில்வித்தை போட்டியில் விளையாடும் பிரபல வீரர் மாட் ஸ்டட்ஸ்மேனின் கண்ணில் சிக்கினார்.

மாட் ஸ்டட்ஸ்மேன் அவர் நுட்பத்தை முழுமையாக்க உதவினார். 2012 இல் லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டிகளில் மாட் ஸ்டட்ஸ்மேன் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒரு தடகள வீரர் ஆவார்.

No comments: