Friday, March 29, 2024

ரியான் பராக் அதிரடி வென்றது ராஜஸ்தான்


 டெல்லி கப்பிட்டலுக்கு எதிராக ஜெய்பூரில் நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ்  12  ஓட்டங்களால்  வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  டெல்லி களத்தடுப்பைத் தேர்வு செய்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் 5  விக்கெற்களை  இழந்து 185  ஓட்டங்கள் எடுத்தது.  186 எனும் வெற்றி இலக்குடன் களம்  இறங்கிய  டெல்லி 18 .6  ஓவர்களில்  5 விக்கெற்களை இழந்து 173  ஓட்டங்கள் எடுத்தது.

ஜெய்ஸ்வால் 5, ஜோஸ் பட்லர் 11 ,கப்டன் சஞ்சு சாம்சன் 15 ஓட்டங்கலில் ஆட்டமிழந்தனர்.  அப்போது களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் நிதானமாக விளையாடினார். அவருடன் ஆச்சரியப்படும் வகையில் ஐந்தாவதாக களமிறங்கி 3 சிக்ஸர்களை பறக்கவிட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் 54 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 29 (19) ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி ரியான் பராக் அரை சதமடித்து அசத்தினார்.   துருவ் ஜுரேல் 20 (12) ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.    கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டலாக விளையாடிய  ரியன் பராக் 20வது ஓவரில் அன்றிச் நோர்ட்ஜேவுக்கு எதிராக 25 ஓட்டங்கள் அடித்து மொத்தம் 7 பவுண்டரி 6 சிக்சருடன் 84* (45) ஓட்டங்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சிம்ரோன் ஹெட்மயர் 14* (7) ஓட்டங்கள் எடுத்ததால் 20 ஓவர்கலில்  ராஜஸ்தான் 185 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி சார்பில் கலீல் அஹ்மத், குல்தீப், அக்சர், நோர்ட்ஜே, முகேஷ் குமார்  ஆகியோர்  தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

186 ஓட்டங்களைத்  துரத்திய டெல்லிக்கு மிட்சேல் மார்ஷை 23  ஓட்டங்கள்   ரிக்கி புய்யை டக் அவுட் எனத் தடுமாறியபோது,

டெல்லியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேப்டன் ரிசப் பண்ட் தடுமாற்றமாக விளையாடினார்.3வது விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் வார்னர் 49 (34) ஓட்டங்களில் அவுட்டாக அடுத்த சில ஓவரில் ரிஷப் பண்ட் தடுமாறி 28 (26) ஓட்டங்களுடன் வெளியேறினார்.    கடைசி நேரத்தில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடி போராடியதால் வெற்றியை நெருங்கிய டெல்லிக்கு ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால் அதில் 4 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த டெல்லி 20 ஓவர்களில் 5 விக்கெற்களை இழந்து 173  ஓட்டங்கள்  எடுத்து போராடி தோல்வியடைந்தது.

 இந்த வருட ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 9 லீக் போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே 9 வெற்றிகளை பெற்ற அரிதான நிகழ்வு அரங்கேறியுள்ளது. இதற்கு முன் கடைசியாக 2019 சீசனில் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகள் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றதே முந்தைய சாதனையாகும்.

                        இளம் புயல்  ரியான்பராக்

 அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரியான் பராக் கடந்த 2019 முதல் ராஜஸ்தான் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த 5 வருடங்களில் 2 அரை சதங்கள் மட்டுமே அடித்து மோசமாக செயல்பட்ட அவர் பல்வேறு தருணங்களில் விராட் கோலியை போல் பேசுவது, நடுவர்களை கலாய்ப்பது, முன்னாள் வீரர்களை மறைமுகமாக கிண்டலடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டார். அதனால் வாயில் பேசாமல் அடக்கமாக இருந்து செயலில் காட்டுங்கள் என்று ரசிகர்கள் அவரை விமர்சித்து வந்தனர்.

கடந்த வருடங்களில் 6, 7 போன்ற கீழ் வரிசையில் விளையாடி வந்த அவருக்கு இம்முறை ராஜஸ்தான் நிர்வாகம் 4வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தது. அதில் லக்னோவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே 43 (29) ஓட்டங்கள் அடித்து அசத்திய அவர் இப்போட்டியில் அபாரமாக விளையாடி 84* ஓட்டங்கள் குவித்து தன்னுடைய அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோரை பதிவு செய்து சொந்த சாதனை படைத்தார்.

  22 வருடம் 139 வயதாகும் ரியான் பராக்  இதுவரை ஐபிஎல் தொடரில் 56, உள்ளூர் தொடரில் 44 என மொத்தமாக 100 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக ரி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 100 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதையும் படிங்க: இன்னும் 2 வருஷத்துல ரியன் பராக் அதையும்

ஐந்து வருடங்களாக திணறிய அவர் தற்போது இளம்  புயலாக முன்னேறி வருகிறார் என்றே சொல்லலாம். அவர் படைத்துள்ள அந்த சாதனையின் பட்டியல்:

 1. ரியன் பராக் : 22 வருடம் 139 நாட்கள்*

 2. சஞ்சு சாம்சன் : 22 வருடம் 157 நாட்கள்

 3. வாஷிங்டன் சுந்தர் : 22 வருடம் 181 நாட்கள்

4. இசான் கிசான் : 22 வருடம் 273 நாட்கள்

 5. ரிசப் பண்ட் : 22 வருடம் 361 நாட்கள்

No comments: