Monday, March 4, 2024

இந்திய அரசியலுக்காக பலிக்கடாவான சாந்தன்

இந்தியத் தேர்தல்களம்  மிகச் சூடாக மிகச் சூடாக  இருந்த காலகட்டத்தில் தேர்தல்பரப்புரைக்காக தமிழகத்துக்கு  விஜயம் செய்த முன்னாள்  பிரதமர் ராஜீவ் காந்தி குண்டு  வெடிப்பில் பலியான செய்தி உலகை அதிர்ச்சியடையச் செய்தது. தற்கொலைக் குண்டுதாரியால் ராஜீவ் காந்தி  படுகொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றப் பின்னனியில் விடுதலைப்பு புலிகள்  இருப்பதாக வெளியான செய்தியால்  இலங்கைத் தமிழர்கள்  நிலை குலைந்தனர்.  இந்தியாவின்  புலனாய்வாளர்கள்  குற்றவாளிகளைத் தேடி  வலை விரித்தார்கள்.

 அந்த வலையில் சிக்கிய சாந்தன்     உடல் நலக் குறைவால் கடந்த  புதன்கிழமை வைத்தியசாலையில் காலமானார். விசாரணை, கைது, தடுப்பு , மரணதண்டனை, விடுதலை என 1991 ஆம்  ஆண்டு  ஆரம்பமான  சிறை வாழ்க்கைக்கு இயற்கை முற்றுப்புள்ளி வைத்தது. மிகுந்த  போராட்டத்தின்  மத்தியில்   விடுதலை செய்யப்பட்ட  சாந்தனை இலங்கைக்கு அனுப்ப  இந்திய மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்கவில்லை. காலம் தாழ்ந்து அனுமதி   கொடுக்கப்பட்டபோது  கோமா நிலையில் இருந்த சாந்தனுக்கு  எதுவுமே தெரியாது.

இந்திரா காந்தியைக் கொடூரமாகக் கொலை செய்த சீக்கியர்களை மன்னித்தவர்களால்,  ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்களை வெளியில் விட மனம்  இல்லை.  ராஜீவ்  கொலையில் சம்பந்தப்பட்டவர் என  குற்றம் சாட்டப்பட்ட  நளினியை சிறையில்  சந்தித்த   ராஜீவ் காந்தியின்  மகள்  பிரியங்கா சந்தித்து உரையாடினார். ராஜீவ் காந்தியின் குடும்பம் மன்னித்தது. ஆனால், இந்திய அரசியல்களம் அவர்களை மன்னிக்கவில்லை. கடைசி நேரத்திலாவது தாயின்  கையால் சாப்பிஅட  வேன்டும் ந்ன  சாந்தன் விரும்பினார். தாயாரும்  உணவுடன் காத்திருந்தார்.  சாந்தனின் உடல்தான  இலங்கைக்கு வந்துள்ளது.

ராஜீவ்  கொலைக் குற்றச் சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட எழு பேரின் விடுதலையும்  மிகுந்த  போராட்டத்தின்  மத்தியில்  நிறைவேறியது. தமிழகத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்கள்   நெடுமாறன், வைகோ போன்றவர்கள்  முழு முயற்சி செய்தனர்.  புகழ்  பெற்ற சட்டவல்லுநர்கள்  பணம் வாங்காமல்  ஆஜரானார்கள்.  நளினியின்  மரண தண்டனைகருணாநிதி காலத்தில் ஆயுள் தண்டனையானது.  ஏனைய ஆறு பேரின்  மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. ப்பட்டது. ஆயுள்  தண்டனை காலம் 20  வருடங்களின்ன்  பின்னர் விடுதலை செய்யலாம் என்ற கோரிக்கை  நிராகரிக்கப்பட்டது. சிறப்பு நீதிமன்றம், சிறப்பு விசாரணை என்று முட்டுக்கட்டை போடப்பட்டது. அன்றைய  முதலமைசரான  ஜெயலலிதா ஏழு பேரின் விடுதலையைக் கையில் எடுத்து அரசியலாகினார்.  மத்திய அரசு  தடுப்பணை போட்டது.

யார் இந்த சாந்தன்

1991ம் ஆண்டு மே 21ம் திகதி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில்  அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்திய பிரதமர் மரணம் என்பது உலகத்தையே உலுக்கும் ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில்தான் ராஜீவ் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நளினி கைது செய்யப்ட்டார். இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர்தான் சாந்தன்.

சுரேந்திர ராஜா என்று அழைக்கப்பட்ட இந்த சாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இவர் இலங்கையில் பிறந்தவர். சாந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவில் பணியாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படியில் 1991 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி சாந்தன்  கைது செய்யப்பட்டார்.

பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் மரண தண்டணை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சாந்தன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 2022ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் இலங்கை தமிழரான சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த புதன் கிழமை  அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாந்தன் மறைவு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன் கூறுகையில்,

"கல்லீரல் செயலிழப்பு காரணமாக அவருக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு சாந்தன் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயம் சுயநினைவு குறைந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பிள்ல இருந்தார். நேற்று இரவு அவரது உடல் நிலை கடும் பின்னடைவை சந்தித்து சுயநினைவை இழந்தார். இந்நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டது. சிபிஆர் சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை குற்றவாளிகள் கைது, தண்டனை, விடுதலை

1991 மே 21  ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில்  கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 1998 ஜனவரி 28 ஆம் திகதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.

அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 திகதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 8 ஆம் திகதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 1999 அக்டோபர் 10ஆம் திகதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர். 1999 அக்டோபர் 29ஆம் திகதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

1999 நவம்பர் 25 ஆம் திகதி ஆளுநரின் உத்தரவை ரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் திகதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை இரத்து செய்யப்படவில்லை.

2000 ஏப்ரல் 26ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் இந்திய ஜனாதிபதிக்குக்  கருணை மனு அனுப்பினர். அன்றைய ஜனாதிபதியான     கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியான  பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் திகதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

பின்னர் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் சேர்ந்து, தாங்கள் அதிக வருடங்கள் சிறையில் கழித்துவிட்டோம் என்று, தூக்கு தண்டனையை இரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் 2014 பிப்ரவரி 18ஆம் திகதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை இரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19ஆம் திகதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி சிபிஐ விசாரித்த வழக்குகளில் எடுக்கும் முடிவை மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று கூறி, மத்திய அரசுக்கு தெரிவித்த போது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி விடுதலைக்குத் தடை பெற்றது. பின்னர் நடைபெற்ற அந்த வழக்கில், 2015 டிசம்பர் 2  ஆம் திகதி மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது.

2016 மார்ச் 2 ஆம்  திகதிபேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 2018 மார்ச் 6, 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது. 2018 டிசம்பர் 6ஆம் திகதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் , ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர். வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட ஏழு  பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே உயிரிழந்துள்ளார்.

விடுதலை கோரிய   சாந்தனின் கடிதம்

திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில்   முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த ஆண்டு இலங்கை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்அந்த கடிதத்தில்,

"இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன். தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரைப் பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன். இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் என கோரியிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் வழக்கும் தொடரப்பட்டது. அதில், இலங்கையில் முதுமையில் இருக்கும் தாயாரை கவனித்துக்கொள்ள திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்து இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கொடுத்திருந்தேன். இம்மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தம்மை இலங்கைக்கு அனுப்ப மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என சாந்தன் கோரியிருந்தார்.

 இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  இரண்டு  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வழங்கி இருக்கிறது. இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுஆனால் மத்திய அரசு தரப்பிலோ, தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் கிடைத்த உடன் ஒரு வாரத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 இந்த நிலையில்தான் சாந்தனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனின் உடல் நிலையில் நேற்றைய தினம் பின்னடைவு ஏற்பட்டது. கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான சாந்தனுக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச சுழற்சி உள்ளிட்டவை சீராக இருப்பதாகவும், பிற பாதிப்புகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சாந்தன் இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகள் விரைவில் முன்பதிவு செய்யப்படும் என தகவல் வெளியானது. சாந்தன் இலங்கை செல்வதற்கான அனுமதி கடிதத்தை திருச்சி கலெக்டருக்கு மத்திய அரசு அனுப்பியது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் இன்று உயிரிழந்தார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் சொந்த மண்ணான இலங்கைக்கு சென்று வசிக்க வேண்டும் என்று நினைத்த சாந்தனின் ஆசை கடைசி வரை நிறைவேறாமல் போனது. அவரது உயிர் ராஜீவ்காந்தி மருத்துமனையில் பிரிந்து விட்டது.

விடுதலையான  பேரறிவாளனை  தமிழக  முதல்வர் கட்டி அணைத்தது விமர்சனத்துக்குள்ளானது. பேரறிவாளனின் வாக்குமூலம் என்ற ஒற்றை சாட்சியம்தான், ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எதிரான வலுவான சாட்சி. அதுதான் பேரறிவாளனை இப்போது தூக்குக் கொட்டடியில் துடிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்த சி.பி.. அதிகாரி தியாகராஜன்,அந்த வாக்குமூலம் முழுமையாகப் பதிவாகவில்லை. பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலமும் தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. பேரறிவாளன் ஒரு நிரபராதி என்று  ஓய்வு பெற்ற பின்னர்  தெரிவித்துள்ளார். இது ஒரே  ஒரு உதாரணம்  இது போன்றபல தகவல்கள் ஆங்காங்கே  சந்தேகத்துடன்  இருக்கின்றன.

பேரறிவாளனின் தாய் நடத்திய போராட்டங்கள்  வெற்றி பெற்று அவர் விடுதலையானார். பேரறிவாளனின் தாய் மகிழ்ச்சியில் உச்சத்துக்குச் சென்றார்.   சாந்தனின் தாயார் நடத்திய  போராட்டங்கள் சமூக  வலைத் தளங்களில்  பதிவாகி இருந்தன  உரிய நடவடிக்கை  எடுக்கப்ப்டவில்லை. சாந்தன் உயிருடன்  இலங்கைக்கு வருவார் என  உணவுடன் காத்திருந்த தாயார் ஏமாற்றமடைந்துள்ளார்திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும்  மற்றைய மூவரையுமாவது  இந்தியா  ஊயிருடன் விடுதலை செய்யுமா என்ற கேள்வி  பலமாக எழுந்துள்ளது.

ரமணி

No comments: