Monday, January 12, 2009

இலகுவாக வென்றது இலங்கை


பங்களாதேஷில் நடைபெறும் மூன்று நாடுகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் சிம்பாப்வே அணியை
வென்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி
முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி மிகுந்த
சிரமத்தின் மத்தியில் ஆறுவிக்கெட்டுகளை இழந்து
210 ஓட்டங்கள் எடுத்தது.
சிம்பாப்வே வீரர்களின்பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாத இலங்கை அணி வீரர்கள் வரிசையாக வெளியேறியதால் இலங்கை மிகக் குறைந்த
ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்கும் என எதிர் பார்க்கப்பட்டது. இலங்கை அணி ஐந்து விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது சிம்பாப்வே அணியின் கைமேலோங்கி இருந்த முபாரக் மத்தியூஸ், துஷார, ஆகியோர் இலங்கையின் மானத்தைக் காத்தனர்.
சிம்பாப்வே அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்ததினால் இலங்கை அணிவீரர்கள்
ஓட்டங்கள் குவிக்க சிரமப்பட்டனர். இலங்கை அணி
51 ஒட்டங்கள் எடுத்திருந்தபோது 22 ஓட்டங்கள் எடுத்த ஜயசூரிய ஆட்டம் இழந்தார். சிம்பாப்வே அணியை துவம்சம் செய்யும் நோக்குடன் களமறிங்கிய சங்கக்கார நான்கு ஓட்டங்களுடன் களத்தை விட்டு வெளியேறினார். அணித்தலைவர் மஹேல ஜயவர்த்தன ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். கபுகெதர ஏழு பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு பௌவுண்ரியுடன் ஆட்டமிழந்தார். இலங்கை அணி விக்கெட்டுகள் மளமளவென விழுந்தபோது ஒருபக்கத்தில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த தரங்க 43 ஓட்டங்களில்
ஆட்டம் இழந்தார்.
20.2 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 97 ஓட்டங்கள் எடுத்த போது களமிறங்கிய முபாரக், மத்தியுஸ் ஜோடி இலங்கை அணியை தூக்கி நிறுத்தியது முபாரக் 31ஓட்டங்களில் ஆட்டம் இழக்க, 50 ஓவர்கள் முடிவில் இலங்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்தது. மத்தியூஸ் ஆட்டம் இழக்காது 52 ஓட்டங்களும், துஷார ஆட்டம் இழக்காது 28 ஓட்டங்களும் எடுத்தனர். சிம்பாப்வே அணி 26 ஓட்டங்களை உதிரிகளாக விட்டுக்
கொடுத்தது. ரொபின் ஸ்ரொட் மூன்று விக்கெட்டுகளையும்,
சிக்கும்புரா, உசேயி பிரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சிம்பாப்வே அணி 28.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 80 ஓட்டங்கள் எடுத்த மஸ்ரி தென்பதி 15 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர். குலசேகர, மெண்டிஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் முரளிதரன் இரண்டு விக்கெட்டுகளையும் துஷார மத்தியுஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
19 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய மென்டிஸ் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை செய்தார். ஆட்டநாயகனாக மத்தியூஸ் தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை சிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
மூன்றாவது நாடாக விளையாடும் பங்களாதேஷ் ஒரு போட்டியில் விளையாடி தோல்வியடைந்துள்ளது.

No comments: