Tuesday, January 6, 2009

தொடரை வென்றது இலங்கை


இலங்கை பங்களாதேஷ் அணிகளுக்கிடையே சிட்டாகொங் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 465 ஓட் டங்களினால் வெற்றி பெற்றது.
இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 384 ஓட்டங்கள் எடுத்தது. பங்களாதேஷ் அணி முதலாவது இன்னிங்ஸில் 208 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணி வீரர்களான சமரவீர 72 ஓட்டங்களுடனும் டில்ஷான் 95 ஓட்டங்களுடனும் நான்காம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
சமரவீர 77 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 177 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் ஒன்பது பவுண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார்.
மிகவும் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய டில்ஷான் 143 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 175 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் இரு சிக்ஸர் 14 பவுண்டரிகள் அடங்கலாக 143 ஓட்டங்கள் எடுத்தார். முதல் இன்னிங்ஸில் 162 ஓட்டங்கள் அடித்த டில்ஷான் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து சாதித்தார்.
கபுகெதர 59 ஓட்டங்களும் வாஸ் 20 ஓட்டங்களும் எடுத்தபோது இலங்கை அணி ஆட்டத்தை நிறுத்திக் கொண்டு பங்ளாதேஷ் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியபோது பங்களாதேஷ் வீரர்கள் ஒன்பது பேர் பந்து வீசினார்கள்.
பங்களாதேஷ் அணி வெற்றிபெறுவதற்கு 624 என்ற மிகப்பிரமாண்டமான இலக்கை இலங்கை அணி நிர்ணயித்தது. துடுப்பாட்டத்தில் கலக்கிய டில்ஷான் பந்துவீச்சிலும் தனது திறமையைக் காட்டியதால் பங்களாதேஷ் அணி 158 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
ஷகீப் அல்ஹசன் 46, ரஹீம் 43, தமிம் இக்பால் 17, ஹசான் 10 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கங்களுடன் ஆட்டமிழந்தனர்.
4.2 ஓவர்கள் பந்து வீசிய டில்ஷான் 10 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மென்டிஸ் 3 விக்கெட்டுகளையும் பெர்னாண்டோ, வாஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாகவும் தொடர் நாயகனாகவும் டில்ஷான் தெரிவுசெய்யப்பட்டார்.

No comments: