Sunday, January 25, 2009

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாரகும் அழகிரி



திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத பிரமுகராக அழகிரி வளர்ந்துவிட்டார். அழகிரி தலையிட்டால் தோல்வி கிடையாது என்ற நம்பிக்கையை அவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தி உள்ளன. அழகிரியின் மகன் அரசியலில் குதிக்கப் போகிறார் என்று ஆருடம் சொல்லப்பட்ட வேளையில் அழகிரியே அரசியலில் இறங்குவதற்கு திராவிட முன் னேற்றக் கழகம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.
மதுரையில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அழகிரியின் பங்களிப்பு கட்டியமானது என்ற நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியை வேட்பாளராக்குவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முன்வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பொறுப்பு எதுவும் இல்லாத நிலையில் வெற்றிக்காக பாடுபட்ட அழகிரிக்கும் தென்மண்டலத்தில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் மு.க. அழகிரியை களம் இறக்குவதற்கு ஜெயலலிதாவும் ஒரு காரணம். தமிழக அரசியல் தலைவர்கள் முதல்வர் கனவில் மிதக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் கருமமாற்றுகிறார். மூன்றாவது அணியை உருவாக்க ஜெயலலிதா பலமுறை முயன்றார். அவரது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. மூன்றாவது அணி கனவு கலைந்தாலும் பிரதமர் பதவி என்ற அவரது கனவு கலையவில்லை.
இந்தியப் பிரதமராவதற்கு முன்னோடியாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா திட்டமிடுகிறார். எம்.ஜி.ஆருக்கும் தனக்கும் வெற்றியைத் தேடித்தந்த மதுரை மாவட்டத்தில் போட்டியிட ஜெயலலிதா விரும்புகிறார். ஜெயலலிதாவின் விருப்பத்தை முறியடிப்பதற்காகவே அழகிரியை வேட்பாளராக்க திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கிறது.

மதுரையில் நடந்த மூன்று இடைத் தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. மூன்று வெற்றியின் பின்னணியிலும் அழகிரியின் செல்வாக்கு உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியின் வேட்பாளராக அழகிரி அறிவிக்கப்பட்டால் அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை மட்டுமல்லாது அழகிரியின் செல்வாக்கையும் பல மடங்கு உயர்த்தும். இதன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத பிரமுகராக அழகிரி உயர்ந்துவிடுவார்.
இதேவேளை இலங்கைத் தமிழர்களுக்காக திருமாவளவன் நடத்திய சாகும்வரை உண்ணாவிரதம் இலங்கை அரசிடமும் இந்திய மத்திய அரசிடமும் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவரது உண்ணாவிரதம் தமிழக அரசியலில் சூறாவளியை ஏற்படுத்தி உள்ளது
.
திருமாவளவனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துப் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் ஆற்றிய உரை தமிழக முதல்வரை சஞ்சலப்படுத்தி உள்ளது. தனது அரசாங்கத்தைக் கவிழ்க்க டாக்டர் ராமதாஸ் முயற்சி செய்கிறாரோ என்ற சந்தேகம் முதல்வருக்கு எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழ் மக்கள்படும் துன்பதுயரங்கள் களையப்பட வேண்டும் என்ற அக்கறை தமிழக அரசியல் தலைவர்களிடம் உள்ளது. ஆனால் தமிழக அரசியல் சதுரங்கத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான சக்திகள் பல முனைகளாகப் பிரிந்துள்ளன.
டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் முதல்வர் கருணாநிதி தலைமையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனர். இலங்கைத் தமிழர்களின் விடிவுக்காகப் பதவியையும் துறக்கத் தயாராக உள்ள முதல்வர் கருணாநிதி காங்கிரஸ் கட்சியை கைவிடத் தயாராக இல்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் புலிகளுக்கு உதவி செய்தது போலாகி விடும் என்ற பயத்தில் காலத்தைக் கடத்துகிறது.
காங்கிரஸ் கட்சியை துறக்க முடியாமலும் திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரை கைவிட முடியாமலும் தவிக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறனின் பணி வேறு விதமாக உள்ளது. யாரையும் எதிர்பார்க்காது தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக உள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதியின் செயற்பாடுகள் திருப்தி தருவதாக இல்லை என்று அவர் கருதுகிறார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான வைகோவும் இலங்கைத் தமிழ் மக்களின் விடிவுக்காக தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி வரும் தா.பாண்டியனும் விடுதலைப் புலிகளை ஜென்ம விரோதியாகக் கருதும் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்துள்ளனர். இலங்கைத் தமிழர்களுக்காக இவர்கள் இருவரும் உரத்துக் குரல் கொடுக்கையில் ஈழத்தமிழர் என்ற ஒரு இனமே இல்லை என்று ஜெயலலிதா வசைபாடி உள்ளார். ஜெயலலிதா கோ.சுப்ரமணியம் சுவாமி ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்தால் அது புலிகளுக்கு செய்யும் உதவியாகவே இவர்கள் கருதுகிறார்கள்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஏதாவது ஒரு சுமுகமான தீர்வை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு உள்ளது. இந்திய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் யுத்தத்தை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தாவிட்டால் தமிழகத்தின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பாதகமானதாகவே அமையும்.
தமிழகத்தில் செல்வாக்கு இழந்து நிற்கும் பாரதீய ஜனதாக் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வகை செய்வேன் என்று உறுதி பூண்டுள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சியின் இத்தேர்தல் வியூகத்தை உடைப்பதற்கு தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியும் முயற்சிக்கின்றனர்

.வர்மா
வீரகேசரி வாரமலர் 25 01 2009

No comments: