Monday, January 26, 2009

பலப்பரீட்சை நாளை ஆரம்பம்


இந்திய, இலங்கை அணிகளுக்கிடையேயான ஒரு நாள் போட்டி நாளை தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் மும்பைத் தாக்குதலினால் நடைபெறவில்லை. மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகள் தான் காரணம் என்று இந்தியா ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல முடியாது என அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்தியா விளையாடாததால் அதிருப்தியுற்ற பாகிஸ்தான் அணி தமது நாட்டில் பயங்கரவாதம் இல்லை என்பதை வெளி உலகுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது.
பாகிஸ்தானுக்கு உதவி செய்ய இலங்கை அணி அங்கு சென்றது. பாகி ஸ்தானுடனான தொடர் இரத்துச் செய்யப்பட்டதனால் இந்திய அணி இலங்கையுடன் ஒரு நாள் தொடரை விளையாட விரும்பியது. இலங்கை கிரிக்கெட் சபையும் சம்ம தம் தெரிவித்தது.
பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு தொடர், பாகிஸ்தானில் நடைபெற்ற ஒருநாள் தொடர் ஆகியவற்றில் சம்பியனான இலங்கை அணி நம்பிக்கையுடன் இந்திய அணி யை சந்திக்கிறது.
பங்களாதேஷில் சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகியவற்றுடனான ஒரு நாள் போட்டித் தொடரில் மிகுந்த கஷ்டப்பட்டே இலங்கை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறுவது சந்தேகம் என்ற நிலையே தோன்றியது. முரளிதரனின் அதிரடியினால் இலங்கை அணி வெற்றி பெற்றது.

தனது பந்து வீச்சு மூலம் இலங்கை அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்த முரளிரதன், தனது துடுப்பாட்டம் மூலமும் இலங்கை அணிக்கு வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்தார்.
பாகிஸ்தானுடனான முதலாவது ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது. இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகியவற்றை வீழ்த்திய பலமான நிலையில் உள்ள இந்திய அணி நம்பிக்கையுடன் இலங்கையை எதிர்கொள்கிறது.
இலங்கையின் பந்துவீச்சு பலமாக உள்ளது. துடுப்பாட்டம் எதிர்பார்த்தது போன்று பிரகாசிக்கவில்லை. இந்திய அணியின் பந்து வீச்சும் துடுப்பாட்டமும் பலமாக உள்ளன. டோனியின் தலைமைத்துவம் எதிரணிக்கு சவாலாகவே உள்ளது.
வசீம் அக்ரமின் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைப்பதற்கு முரளி தயாராகவுள்ளார்.

No comments: