Wednesday, January 14, 2009

இலங்கையை வீழ்த்தியது பங்களாதேஷ்


பங்களாதேஷில் நடைபெற்ற பரபரப்பான மூன்றாவது லீக் போட்டியில் பங்களாதேஷ் இலங்கையை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
சிம்பாப்பே, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது போட்டியில் சிம்பாப்பே, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்றது.
சிம்பாப்பே அணி 38 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இலங்கை, சிம்பாப்பே ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 130 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
சிம்பாப்பேயிடம் தோல்வியடைந்த பங்களாதேஷ் இலங்கையை எதிர்த்து விளையாடியது.
இலங்கையை தோற்கடித்தால் தான் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்ற இக்கட்டான நிலையில் பங்களாதேஷ் அணி களமிறங்கியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் களத்தடுப்பை தேர்வு செய்தது. போதிய வெளிச்சம் இன்மையினால் 31 ஓவர்கள் விளையாடுவதென நடுவர்கள் தீர்மானித்தனர்.
முதலில் களம் இறங்கிய இலங்கை அணி 30.3 ஓவர்கள் சகல விக்கட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது.
ஜயசூரிய அதிகபட்சமாக 54 ஓட்டங்கள் எடுத்தார். ஏனையோர் மிகக் குறைந்த ஓட்டங்களையே எடுத்தனர். அறிமுக வீரரான ருபல்ஹசன், மோட்டரசா ஆகியோரின் பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்கள் மளமளவென ஆட்டம் இழந்தனர்.
மஹேல ஜயவர்த்தன, கபுகெதர ஆகியோர் தலா 28 ஓட்டங்களும் முபாரக் 10 ஓட்டங்களும் எடுத்தனர்.
தரங்க, சங்கக்கார, துஷார, மெண்டிஸ் ஆகியோர் ஓட்டங்கள் எதுவும் எடுக்காது ஆட்டம் இழந்தனர்.
5.3 ஓவர்கள் பந்து வீசிய ருபல் ஹசன் 33 ஓட்டங்களை கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார். மோட்டரசா மூன்று விக்கட்டுகளையும் மஹபுல் அலாம், நயிம் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
148 என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையை வெற்றி இலக்காகக் கொண்டு களமிங்கிய பங்களாதேஷ் 23.5 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து 151 ஓட்டங்கள் எடுத்து ஐந்து விக்கட்டுகளினால் வெற்றி பெற்றது.
சஹிப் அல் ஹசன் தனி ஒருவராக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷûக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.
11 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பங்களாதேஷின் மூன்று விக்கட்டுகள் வீழ்ந்ததனால் இலங்கை வீரர்கள் உற்சாகமடைந்தனர்.
நான்காவது இணைப்பாட்டமாக விளை யாடிய மொஹமட் அஷ்ரபுல், சஹிப் அல் ஹசன் ஆகியோர் 39 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து தெம்பூட்டினர்.
45 பந்துகளுக்கு முகம் கொடுத்த சஹிப் அல் ஹசன் நான்கு சிக்சர், ஒரு பௌண்டரி அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
பங்களாதேஷ் அணி 102 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 26 ஓட்டங்கள் எடுத்த மொஹமட் அஷ்ரபுல் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய இக்பால் ஹசன் மூன்று ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அப்போது பங்களாதேஷ் அணி 126 ஓட்டங்கள் எடுத்தது.
சஹிட் அல் ஹசன் நயீம் இஸ்லாம் ஜோடி பங்களாதேஷûக்கு வெற்றியைத் தேடி கொடுத்தது.
சஹீப் அல் ஹசன் ஆட்டம் இழக்காது 92 ஓட்டங்கள் எடுத்தார். 69 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர் இரண்டு சிக்சர் 10 பௌண்டரி அடங்கலாக 92 ஓட்டங்களை எடுத்தார்.
ஆறு பந்துகளுக்கு முகம் கொடுத்த நயிம் இஸ்லாம் இரு சிக்சர், ஒரு பௌண்டரி அடங்கலாக ஆட்டம் இழக்காது 12 ஓட்டங்கள் எடுத்தார்.
குலசேகர, மெண்டிஸ், துஷார ஆகியோர் தலா ஒரு விக்கட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக சஹிப் அல் ஹசன் தெரிவு செய்யப்பட்டார்.

No comments: