Saturday, January 2, 2016

புதிய அரசியல் ஓட்டம் தமிழருக்கு விடிவு தருமா?

  வடக்கு கிழக்கில் எத்தனை அரசியல் கட்சிகள் கால்பதித்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைக்க முடியாது என்பதை நடந்து முடிந்த அனைத்துத் தேர்தல்களும்  பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளன.தமிழரின் நம்பிக்கைக்குரிய கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  உடைப்பதற்கு கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற மாயை கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கலைந்தது.
வடமாகாண முதலமைச்சருக்கும் கூட்டமைப்புக்கும் இடையிலான அரசியல் முரண்பாடுகள் அண்மைக்கால தலைப்புச்  செய்திகளாக மக்கள் மத்தியில் சென்றன. வடமாகாண முதலமைச்சர்  சி. விக்னேவரனுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் எம் .ஏ.சுமந்திரனுக்குமிடையின அறிக்கைப்போர் ஏதோ ஒன்று நடக்கப் போவதை  உறுதி செய்தன.  வடமாகாண முதலமைச்சர் தலைமையிலான புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகப் போகிறது   என்ற செய்தி அரசல் புரசலாக வெளியாகின. கூட்டமைப்பு பலவீனமாக வேண்டும் என நினைப்பவர்கள்   அப்படியான ஒரு செய்தியை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
 எமக்குள் பிரச்சினைகள் ஏதுமில்லை. பேசித்தீர்ப்போம் என தலைவர் சம்பந்தன் அறிவித்தார். தமிழ் அரசுக் கட்சிக்கும் முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான தூரம் அதிகரித்தது. இப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படும் என்றே மக்கள் நினைத்தார்கள்.  தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டதாக அறிந்தபின்னர் மக்களின் நினைப்பு பொய்யானது. தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு உருவாகப் போகிறது என்ற செய்தி யாருக்குமே கசியவில்லை. இந்த அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அழைக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று கூடி தமிழ் மக்கள் பேரவை அமைப்பப்பட்டதாக அறிவித்தார்கள்.
 முதலமைச்சர் சி.விக்னேஸ்வரன்.மருத்துவர் பி.லக்ஷ்மன்,மட்டக்களப்பு சிவில் சமூக செயலாளர் ரி.வசந்தராஜா ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது அரசியல் கட்சியல்ல தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பெற்றுத்தருவதற்கான அமைப்பு என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியல்ல என்பதை நிலைநிறுத்துவதற்காக பல விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். தமிழ் அரசுக்கட்சியின் உபதலைவர் சி.கே.சிற்றம்பலம்,புளொட் அமைப்பைச்சேர்ந்த க.சிவனேசன்,அரசியல் கட்சித்தலைவர்கள், சமயத் தலைவர்கள்,சிவில் சமூகப் பிரதிநிதிகள் இப் பேரவையில் அங்கத்தவர்களாக உள்ளனர்.என்றாலும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கடுமையாக எதிர்ப்பவர்கள் இதன் பின்னணியில் பலமாக இருக்கின்னறனர்.  கூட்டமைப்பை மிக மூர்க்கமாக எதிர்க்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் சுரேஷ் பிரேமச்சந்திரன் கைகோர்த்துள்ளார்.
 தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி அல்ல என்று அமைப்பாளர்கள் கூறினாலும் பிரேமசந்திரனும் கஜேந்திரகுமாரும் ஒன்றானதால் இதுஅரசியல் கட்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சுரேஷ்பிரேமச்சந்திரன் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபின்னர் கூட்டமைப்பின் சகல நடவடிக்கைகளையும் கண்டித்து அறிக்கை விட்டு தனது  இருப்பை வெளிக்காட்டுகிறார். கூட்டமைப்பை எதிர்க்கும் பலமான ஒருவர் கஜேந்திரகுமாருடன் இணைந்துள்ளார். பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஓரணியில் திரண்டுள்ளார்கள் என பேரவைக்கு எதிரானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசுக் கட்சிக்கும் ரெலோவுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.  இந்த அமைப்பின் முக்கியஸ்தர்களுக்கு வேண்டப்படாத  கூட்டமைப்பு உறுப்பினர்களும் உள்வாங்கப்படவில்லை. ஆனந்தசங்கரி வழமைபோல ஓரம் கட்டப்பட்டுள்ளார். மேலோட்டமாகப் பார்க்கும் போது  ஒருசில முரண்பாடுகள் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றன. கீரைக் கடைக்கும் எதிர்க்கடை தேவைதான். கூட்டமைப்பு விடும் தவறுகளை நாசூக்காக தட்டிக் கேட்க வேண்டும். கூட்டமைப்பின் தவறுகள் சில மிகை ப்படுத்தப்படுகின்றன.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்  அரசிலே பயணம் கரடு முரடு நிறைந்ததாக உள்ளது.  தமிழ் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசினால் சிங்கள கடும்போகாளர்கள் கொந்தளிக்கின்றனர். சிங்களத் தலைவர்களுடன் இணக்கமாகச் செயற்பட்டால் இதற்காகவா உங்களை பாராளுமன்றத்துக்கு அனுபினோம்என்ற கண்டனக் கணைகள் தமிழர் தரப்பில் இருந்து வெளி வருகின்றன. தம் மீதான விமர்சனங்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் தயங்குகின்றனர். சிலவேளை அவர்கள் கொடுக்கும் பதில்களுக்கு உரிய  முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. சமூகவலைத்தள விமர்சனங்கள் சில ஒருதலைப்பட்சமாக உள்ளன. இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கம் கூட்டமைப்புக்கு சவாலைக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமை,அரசியலமைப்பு என்பனபற்றி கவனம் செலுத்தப் போவதாக தமிழ் மக்கள் பேரவை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைத் தலைவர்கள் மூவர் உள்ளனர். அவர்களில் எவரும் தமது கொள்கை  கோட்பாடு பற்றி வாய் திறக்கவில்லை. அமைப்பு விடுத்த அறிக்கைதான் ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு கிடைத்தது. இவர்களுடைய அடுத்த செயற்பாடு என்ன எதை நோக்கி இந்த அமைப்பு செயற்படப்போகிறது என்பது பற்றிய தெளிவு இல்லாமையால் அடுத்த அறிக்கை போவரும் என மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இடம்பெயர்ந்த மக்களின் அவலம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், கைதுசெயப்பட்டு விடுதலையானவர்களின் வாழ்வாதாரம்,உயர்பாதுகாப்பு வலயம்,அகதி முகாம் வாழ்க்கை,கானாமல்போனவர்களின் குடும்பத்தவர்களின் எதிர்பார்ப்பு,அரசியல் கைதிகள் விவகாரம் என்பன இன்னமும் தீர்க்கப்படாதவையாக உள்ளன. தமிழ் மக்கள் பேரவை இவற்றில் கவனம் எடுக்குமா என்பதை தெரியப்படுத்தவில்லை.
அரசியல் கட்சி உறுப்பினர்கள் கட்சித் தலைமையின் அனுமதி இன்றி பேரவையில் அங்கம் வகிப்பது சிக்கலை ஏற்படுத்தும். கட்சியின் கொள்கைக்கு விரோதமாக பேரவையின் செயற்பாடு அமைந்தால் கட்சித் தலைமை தட்டிக் கேட்கும். பேரவையில் உள்ள எவருக்கும் அவர் சார்ந்த கட்சி அப்படிப்பட்ட கடிதம் எதனையும் அனுப்பவில்லை. இது  அக்கட்சியின் பலவீனமா அல்லது மெத்தனப் போக்கா எனத் தெரியவில்லை.
2016 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிடும் என சம்பந்தன் கூறியுள்ளார். புதிய அரசியமைப்பை உருவாக்க  பிரதமர் ரணில் முயற்சிசெய்கிறார். தமிழ் மக்களின் கருத்தைக் கேட்டறிந்து  புதிய அரசியலல் தீர்வுத் திட்டம் வரையப்பட்டு தமது தலைமையினால் முன்வைக்கப்படும் என தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஒரணியில் நின்று நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பம்.
வானதி  
சுடர் ஒளி
டிசம்பர் 30 ஜனவரி 05 /16
  

No comments: