Sunday, January 3, 2016

தடுமாறும் விஜயகாந்த் தவமிருக்கும் தலைவர்கள்

தமிழக அரசியலும் தமிழ் சினிமாவும் ஒன்றாகப் பின்னிப்பிணைந்துள்ளன.அண்ணாத்துரை,கருணாநிதி, எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து அரசியலில் நுழைந்து  முதலமைச்சரானார்கள். சிவாஜி,பாக்கியராஜா போன்றவர்கள் சினிமாவில் இருந்து அரசியலுக்குச் சென்று காணாமல் போனார்கள். ரஜனியும் விஜயும் அரசியலுக்கு வரப்போவதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். வீர வசனம் பேசி கதாநாயகனான விஜயகாந்துக்கு அரசியல் ஆசை வந்தபோது அடுத்த முதல்வர் நான்தான் என்ற கனவில் மிதந்தார். தொண்டை கிழிய கத்திப் பேசி கைதட்டல் வாங்கியதால்  மகிழ்ச்சியடைந்த விஜயகாந்த் அரசியலிலும் இலகுவாக வெற்றி பெறலாம் என நினைத்தார்.

சிவாஜி,எம்.ஜி.ஆர்,கமல்,ரஜனி,விஜய்,அஜித்  போன்ற நடிகர்களுக்கு இருப்பது போன்ற வெறிபிடித்த ரசிகர்கள் விஜயகாந்திடம் இல்லை. அப்படி இருந்தும் அரசியலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை கொண்ட சிலர் அவரின் பின்னால் அணிவகுத்தனர். திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி  இல்லை. கடவுளுடனும் மக்களுடனும் தான் கூட்டணி என்ற தாரக மந்திரத்துடன்  தேர்தல்களைச் சந்தித்த விஜயகாந்த்  பிரதான கட்சிகளின் வாக்குகளை சிதறடித்து தோல்வியடைந்தார். .  கூட்டணி  அமைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை காலம் கடந்து உணர்ந்த விஜயகாந்த் கூட்டனிக்கு ஆசைப்பட்டார்.

 விஜயகாந்தைத் தம் பக்கம் இழுக்க கருணானிதியும் ஜெயலலிதாவும் முயற்சி செய்தனர். மிகுந்த கெடுபிடிகளின் மத்தியில் ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் இணந்தார் விஜயகாந்த்.கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதே விஜயகாந்தின் குறிக்கோளாக இருந்தது. அவர் நினைத்தபடியே கருணாநிதி பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். அரசியலில் கீழ்மட்டத்திலிருந்த விஜயகாந்த் உச்சாணிக்கொம்பில் ஏறி நின்றார். விஜயகாந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற மகுடத்தைச்சூட்டிய ஜெயலலிதா அவரைப் படுகுழியில் வீழ்த்தினார்.

சென்னையில் பத்திரியாளர் ஒருவரை காறித்துப்பிய வீடியோவால் விஜயகாந்தின் மதிப்பு குறைந்துள்ளது  2016  ஆம் ஆண்டு உங்கள் கட்சி ஆட்சியைப்பிடிக்குமா என் ஒரு நிருபர் கேட்டபோது  இதைப்போய் ஜெயலலிதாவிடம் கேள்  என்று த்தூ என காறித்துப்பினார். கேள்விக்கு பதிலளிக்காது நிருபரையும் ஊடக முதலாளிகளையும் அவமானப்படுத்தியதால் சமூக வலைத்தளங்க:ள்  விஜயகாந்துக்கு எதிராகத் திரும்பி உள்ளன.

  சட்டசபைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய போது  விமான நிலையத்தில்  செய்தியாளர்கள் மத்தியில் எகிறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

 அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கோபமடைந்த விஜயகாந்த், "போயா..உனக்கு பதில் சொல்ல முடியாதுஎன்று தமக்கே உரித்தான நாக்கை துறுத்தும் பாணியில் எகிறினார்பின்னர் அவரை அவரது மச்சான் சுதீஷ், மனைவி பிரேமலதா ஆகியோர் சமாதானப் படுத்தினர்.

 சென்னை விமான நிலையத்தில் ஏர்போர்ட்' பாலு என்ற செய்தியாளரை நாய், நாய்' என்று திட்டி பரபரப்பை கிளப்பினார் விஜயகாந்த், நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?' என்று கோபமாக கேட்டார்.அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள்.

 இதேபோல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் சந்தித்தனர்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த்,செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் ஆத்திரமடைந்தார்.
 அப்போது அவர் கூறிய, தூக்கிஅடிச்சிருவேன் பாத்துக்க' என்ற வாக்கியம் இன்றும் சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாகவே உள்ளது 

   ஆளுநரை சந்தித்துவிட்டு வந்த போது செய்தியாளரை சந்தித்த விஜயகாந்த் மணல் கொள்ளை,சுந்தர்பிச்சை பற்றி கலவையாக பேசிக்கொண்டிருந்தார்அப்போது ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்ப,புரியாத விஜயகாந்த், என்ன    கேட்டீங்க் கிட்ட வாங்க அடிக்க மாட்டேன் என்று சிரித்தபடி கூறினார்.


சட்டசபையிலும் விஜயகாந்த் தனது சண்டித் தனத்தை காட்டினார். அவரைப்பற்றி விமர்சனம் செய்தால் நாக்கைத்துருத்தி கையைக்காட்டி எச்சரிக்கை செய்வார். விஜயகாந்தின் செயலை அரசியல் தலைவர்கள் கண்டிக்கவில்லை. கூட்டணிக் கதவை அகலத்திறந்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் வாய்மூடி மெளனமாக இருக்கின்றனர். விஜயகாந்தை எதிர்த்தால் கூட்டணி குலைந்து விடும் எனப்பயப்படுகிறார்கள்.விஜயகாந்தின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஸ்டாலின் அவருக்கு சார்பாக கருத்துத் தெரிவித்துள்ளார். இதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 விஜயகாந்த் வந்தால் வெற்றி பெறலாம் என மனக்கணக்கு போட்டிருக்கும் வைகோவின்  சகபாடிகள் இன்னமும்   வாயைத் திறக்கவில்லை. வாயைத்திறந்தால் விஜயகாந்த் வரமாட்டார் என அவர்கள் நினைக்கிறார்கள். வைகோ மட்டும் படும் படாமலும் அறிவுரை கூறியுள்ளார்.
விஜயகாந்த்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினாருக்குமான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இரத்ததான முகாமில் கலந்து கொண்ட  விஜயகாந்தின் கண்ணில் பட்ட ஜெயலலிதாவின் படம் புதிய பிரச்சினையை உண்டாக்கியுள்ளது. ஜெயலலிதாவின் படத்தைக்  கிழித்தெரியுமாறு தனது தொண்டர்களுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டார். தலைவனின் உத்தரவை  சிரமேற் கொண்ட தொண்டர்கள் ஜெயலலிதாவின் படத்தை கிழித்து எறிந்தனர்.
ஜெயலலிதாவின் படம் கிழிக்கப்பட்டதால் கொதித்தெழுந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள்  எதிர்த்  தாக்குதல் நடத்தினர்.  தஞ்சாவூர் களேபரமானது.  விஜயாந்தின் கட்சிக்கொடி படம் என்பன தீக்கிரையாகின. இரண்டு கட்சித்  தொண்டர்களும்  கைது செய்யபட்டனர். விஜகாந்துக்கு எதிராகவும் பொலிஸில்  முறைப்பாடு செய்யப்பட்டது. வியகாந்துக்கு எதிரான போராட்டத்தை ஜெயலலிதா விரும்பவில்லை. போராட்டங்களைக் கைவிடுமாறு அவர் அறிவித்த்துள்ளார். ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள்  கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். வன்செயலாக மாறிய அப்போரட்டங்க்களை கைவிடுமாறு ஜெயலலிதா உடனடியாக அறிவிக்கவில்லை.

விஜயகாந்துக்கு எதிரான போராட்டங்கள் விபரீதமாகி வன்செயலாக மாறினால் அவர் மீது அனுதாபம் ஏற்பட்டுவிடும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழி விழுந்துவிடும் என ஜெயலலிதா அஞ்சுகிறார். எதிர்க்கட்சிகள் இதனை ஊதிப் பெருப்பித்துவிடும் என்ற என்பதை ஜெயலலிதா உணர்ந்துள்ளார்.
 விஜயகாந்துக்கு எதிராக பொலிஸில் புகார் செய்யப்பட்டதால்  கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காக முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை நாடினார் விஜயகாந்த்.

விஜயகாந்தைக் கைதுசெய்து அவருக்கு  பப்ளிசிற்றி வழங்க ஜெயலலிதா விரும்பமாட்டார் எனக் கூறிய நீதிபதி 5 ஆம் திகதிவரை விஜயகாந்தை கைது செய்ய தடை விதித்தார் இந்த அரசியலை அறியாத விஜயகாந்த் நல்லதொரு சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுள்ளார்.
கும்பகோணம்,தஞ்சாவூர்,சென்னை,நாமக்கல் ஆகிய இடங்களில் விஜயகாந்துக்கு எதிராக போராட்டங்கள்  நடைபெற்றன. புதுச்சேரயில் ஹோட்டல் ஒன்றில் விஜயகாந்த் தங்கி  இருப்பதாக அறிந்த பத்திரிகையாளர்கள் அக ஹோட்டலை முற்றுகையிட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் அங்கு கூடி  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திராவிட முன்னேற்றக் கழகம்,பாரதீய ஜனதாக் கட்சி வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி என்பன  விஜகாந்தின் வருகைக்காக காத்திருக்கின்றன. ஒருகட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் ஊடகங்களின் கைகளிலேதான் உள்ளன. பத்திரிக்கை,தொலைக்காட்சி என்பனவற்றுடன் விஜயகாந்த் மோதிக்கொண்டிருந்தால் அவருக்குரிய முக்கியத்துவத்தை ஊடகங்கள் குறைத்துவிடும் அபாயம் உள்ளது. இது அவரது அடுத்த கட்டவளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும். அரசியல் தலைவருக்குரிய பக்குவம் விஜயகாந்திடம் இல்லை.பொதுமக்களுடனும் பத்திரிகையாளர்களுடனும் நல்லுறவைப் பேணத் தவறிவிட்டார்.
வர்மா 
தமிழ்த்தந்தி
1/3/16

No comments: