.
இலங்கை
சுதந்திரமடைந்தபின்னர் தமிழரின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டன.
ஜே.ஆரின் பாதயாத்திரையும் பண்டாரநாயக்கவின் சிங்களம் மட்டும் கொள்கையும்
தமிழருக்கு இந்த நாட்டில் இடமில்லை என்று
பறைசாற்றின.இதை எல்லாம் புரிந்து கொண்டும் சில தமிழர்கள் தமது அபிலாசைகளை
நிறைவேற்றுவதற்காக சிங்கள அரசியல் தலைவர்களுக்கு
சாமரம் வீசினர். அவர்கள்
எல்லோரையும் தமிழ் மக்கள் தூக்கி
எறிந்தது வரலாறு. இத்தகைய வரலாறுகளைத்
தெரிந்து கொண்டும் அரசியல் ஆசை
கொண்டவர்கள் இன்றும் வலம் வருகிறார்கள்.
சேர்.பொன்.இராமநாதன்,ஜி.ஜி.பொன்னம்பலம்,எஸ்.ஜே.வி.செல்வநாயகம்,அமிர்தலிங்கம்,பிரபாகரனின்
வழிகாட்டலில் அன்ரன் பாலசிங்கம்,சம்பந்தன் ஆகியோரின் தலைமையில் தமிழ் மக்களின்
பிரச்சினைகள் பற்றி பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. தமிழ் மக்களின் நியாயங்களை ஏற்க
மறுத்த சிங்களத்தலைமைகள் உரிமைகளைக் கொடுக்க மறுத்து சில சலுகைகளை மட்டும் தரலாம்
என அறிவித்தன.
தமிழ்
மக்களின் உரிமைகளைப் பெறுவதற்காக சத்தியாக்கிரகப் போராட்டங்கள் நடைபெற்றன.
அமைதியான போராட்டம் பின்னர் ஆயுதப்
போராட்டமாக மாறியது.பறிக்கப்பட்ட உரிமைகளைப் பெறுவதற்காக தமிழ் மக்கள் அமையான
முறையில் போராட்டம் நடத்தியதைக் கண்டு கொள்ளாத உலக நாடுகள் ஆயுதப் போராட்டத்தை
அடியோடு அகற்ற இலங்கைக்கு உதவி புரிந்தன.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ,ஐக்கிய தேசியக்
கட்சி ஆகியனவே இலங்கையை மாறி மாறி ஆட்சி
செய்கின்றன. இரண்டு கட்சித் தலைவர்களிடமும் தந்தை செல்வா தமிழ் மக்களின் விருப்பத்தை
வெளிப்படுத்தினார். பண்டா ,செல்வா ஒப்பந்தம், டட்லி, செல்வா என்ற இரண்டு
ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்படடன. சிங்களத்தலைவர்கள் மட்டும் இனவாதம் பேசிய
காலத்திலேயே தமிழர்களின் உரிமையை கொடுக்க
மறுத்தவர்கள், இனவாதத்தில்சிங்கள மக்கள் மூழ்கி இருக்கும் போது சுயநிர்ணயம் உரிமை
தேசியம் என்பனவற்றை கேட்கும் போதே எரிச்சலடைகிரர்கள்.
1940களில்
ஜி.ஜி.பொன்னம்பலம் 50 க்கு 50 கேட்டார். 1950 களில் செல்வநாயகம் சமஷ்டி வேண்டும் என
கோரினர். எதிர்ப்பு வலுத்ததால் அன்றைய பிரதமர் பண்டரநாயக்க அதனை குப்பைக் கூடையில்
போட்டார். பண்டாரநா யக்கவிடம் கொடுத்த சமஷ்டி கோரிக்கையை கொஞ்சம் மாற்றி 1960
களில் டட்லியிடம் கொடுத்தார் செல்வநாயகம், அதுவும் கைவிடப்பட்டது. 1970 ஆம் ஆண்டு
தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணந்து வட்டுக்கோட்டைத்
தீர்மானத்தை முன்மொழிந்தனர். தமிழீழம் என்றதும் இந்தியா மூக்கை நுழைத்து
மாகாண சபைக்குள் முடக்கியது. அதனையும் ஜே.ஆரால் வெளிப்படையாகச் செய்ய முடியவில்லை.
1985 ஆம் ஆண்டு ஆண்டு திம்பு பேச்சுவார்த்தை பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அதுவும் முடிவிலியானது.
தமிழ் மக்களின் விடிவுக்காக ஆயுத்தப் போராட்டம் நடத்தியவர்களும்
இப்பேவார்த்தையில் கலந்துகொண்டனர். விடுதலைப்
புலிகள் தன்னாட்சி அதிகார சபையை அறிவித்தார்கள். வழக்கம் போல் அதுவும்
கிடப்பில் போடப்பட்டது.
சந்திரிகாவும்
ரணிலும் சமாதனப் புறாவைப் பறக்கவிட்டனர்.
வெள்ளைப் புறாக்கள் வல்லூறாக மாறின. சுவிஸ் கண்டோன் முறை,கனடிய சமஷ்டி முறை,
இந்தியகூட்டாசிமுறை என்று உலகம் சுற்றி
பேசினார்கள். தமிழ் மக்களின் உரிமைக்காக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் அனைத்தும்
முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டன. மஹிந்த ஜனாதிபதியாக இருக்கும் வரை தமிழ்
மக்களின் உரிமை பற்றி பேச முடியாத நிலை
இருந்தது. மைத்திரி,ரணில் கூட்டு ஒரு ஆறுதலைத் தந்துள்ளது.
பொது பலசேன,சிஹல உறுமைய போன்ற கட்சிகள்
தமிழர்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என நினைக்கின்றன. மைத்திரி,ரணில் கூட்டை உடைப்பதற்கு முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த,விமல் வீரவன்ச போன்றோர் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர். புதிய அரசியலமைப்பு உருவாக்க வேண்டும் என அரசாங்கம்
விரும்புகிறது. அதற்கான நிபுணர் குழுவை பிரதமர் ரணில் நியமித்துள்ளார்.அதனை குழப்பியடிக்க
சிங்கள இனவாதக் கட்சிகள் கங்கணம் கட்டியுள்ளன. தமிழர்களுன் துன்பம் துயரம் பற்றி
அவர்களுக்கு அக்கறை இல்லை. இனவாத கொதிநிலையில் சிங்கள அப்பாவி மக்களை
வைத்திருப்பதே அவர்களின் நோக்கம்.
சமஷ்டி, தமிழீழம்,மாவட்ட சபை,மாகாணசபை பற்றி அலசி அரா யப்பட்டு
இப்போ கிராம ராஜ்ஜியத்தில் வந்து நிற்கிறது. புதிய அரசியலமைப்பில் எமக்கு எதுவும்
கிடைக்காது என தமிழ்மக்கள் நினைக்கின்றனர். புதிய அரசியமைப்பு எப்படி இருக்கப்
போகிறது என்பதுபற்றி எதுவும் தெரியாத நிலையில் அதனை எதிர்க்கப் போவதாக பொது பலசேன
உறுமுகிறது.
இத்தகைய சூழ் நிலையில்
தமிழ் மக்களுக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக தமிழ் மக்கள் பேரவை
அறிவித்துள்ளது. இது எந்தளவு சாத்தியமாகும் என்பது புரியவில்லை. புதிய
அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் முன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட
வேண்டும். அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெற வேண்டும்.மலையக
மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் அதரவு இல்லாமல் புதிய அரசியலமைப்பை உருவாக்க
முடியாது.
புதிய அரசியலமைப்பில்
தமக்குரிய உரிமைகளை முஸ்லிம் கட்சிகளும் மலையகக் கட்சிகளும் பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கலாம்.
புதிய அரசியலமைப்பு
சகதியாகுமா அல்லது இலங்கையின் பாவத்துக்கு பரிகாரம் தேடுமா என்பதை காலம்தான் கூற
வேண்டும்.
வானதி.
சுடர் ஒளி
ஜனவரி 06,12/16
No comments:
Post a Comment