Tuesday, January 26, 2016

பாலித்தீவு இந்துத் தொன்மங்களைத் நோக்கி


 மடத்துவாசல் பிள்ளையார் ,உலாத்தல்,ஈழத்து முற்றம் ஆகிய வலைப்பூக்கள் மூலம் உலகில் பல்லாயிரக் கணக்கான வாசகர்களை தன்னகத்தே கொண்டுள்ள கானா பிரபாவின் பாலித்தீவு இந்துத் தொன்மங்களை நோக்கி எனும்  புத்தகம் பாலித்தீவுபற்றிய புதிய பல விஷயங்களைத் தாங்கி வெளிவந்துள்ளது. அவுஸ்திரேலிய வானொலியில் கடமையாற்றும் கானா பிரபாவின் விரல் நுனியில்சினிமாத்தகவல்கள்உள்ளன.நடிகர்கள்,நடிகைகள்,பாடலாசிரியர்கள்,பாடகர்கள்,இயக்குநர்கள்,இசையமைப்பாளர்கள்  என  சினிமாத்துறையில் உள்ள சகலரைப்பற்றியும் ஆவணம்போல் தரவுகளுடன் வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவரின் பாலித்தீவு பயணம் பற்றிய இந்த நூலும் ஒரு ஆவணம் போன்ற அரிய பொக்கிஷமாக உள்ளது.
பாலித்தீவு பற்றி நாம் ஊடகங்களின் மூலம் அறிந்தவற்றுக்கும் கானாபிரபா  சொல்வதற்குமிடையில் நிறைய  வேறுபாடு உள்ளது.பாலித்தீவு என்றதும் போதைவஸ்து,உல்லாசம்,கடற்கரை,குண்டுவெடிப்பு என்பனதான் எம்முன் நிழலாடும்.இந்தியா இந்துசமயம் என்பனவற்றுக்கும் பாலித்தீவுக்கும் இடையி உள்ள தொடர்பை கானாபிரபாவின் பாலித்தீவு பயணக்கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இது  பயணம் சார்ந்த புத்தகம் அல்ல.பாலித்தீவின் வரலாறு,சமயம்,கலை,கலாச்சாரம்,பண்பாடு,வாழ்வியல்,பொருளாதாரம் ஆகியவற்றை ஆய்வு நூல்களைப் படித்து அறிந்தபின் வாசகர்களுக்குக் கொடுத்துள்ளார். கி.பி 914 ஆம் நுற்றாண்டு முதல் இன்றுவரையான பாலித்தீவின் சரித்திரத்தை விலாவாரியாகத் தந்துள்ளார்.பாலித்தீவை ஆண்ட கேசரி வர்மன்,தபேனேந்திர வர்ம தேவன்,சிங்கவர்மதேவன்,உதயணன் போன்ற மன்னர்களின் பெயர்கள் இந்தியத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றன.  உயர் வகுப்பில் இந்து நாரிகத்தைப் படித்போதே  இந்துக் கோயில்களைப் பற்றிய ஆர்வம் அதிகமானது என குறிப்பிடுகிறார்.
 சிட்னியில் இருந்து பாலித்தீவுக்கு செல்பவர்கள் எப்படிச்செல்ல வேண்டும்.எவ்வளவுபனம் செலவளிக்க வேண்டும். விமான நிலையங்களில் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் அங்குள்ள ஹோட்ட்டல்கள், பார்க்கவேண்டிய இடங்கள் பற்றிய குறிப்புகளுடன் பயண வழிகாட்டியாகவும் இந்த நூல் உள்ளது. கஜா,நாகா,புத்ரி,கப்பால்,சிங்கராஜா போன்ற வடமொழி ச் சொற்களும் தமிழ்ச்   சொற்களும் பாலித்தீவில் உள்ளன. இராமாயண,மகாபாரதக்கதைகள் அங்கே நாட்டியமாக நடத்தப்படுகின்றன.இராமன்,சீதை,ஆஞ்சநேயர் போன்ற பெயர்கள் வாழக்கத்தில் உள்ளதாக இப்புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.
பிள்ளையார்,சிவன்,உமாதேவி,காளி,இலட்சுமி,சரஸ்வதி,பிரமா,விஷ்ணு  ஆகியோருக்கு பிரமாண்டமான் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.கோயில்களில் மிகப்பெரிய சிலைகளும் உள்ளன. கடோற்கஜன்,பீமன், கருடன் ஆகிய சிலைகள்  பாலித்தீவின் அடையாளத்துக்குச் சான்றாகும
பாலித்தீவு இந்தோனேசியாவின் ஒரு மாநிலமாகும். இங்கு வாழும் மக்களில் 84.5வீதமானோர் 
இந்துக்கள்.மீதிப்பேரில் 12 வீதமானோர் இஸ்லாமியர்களாகவும்,மற்றும் சிறுபான்மை பெளத்தவ்ர்களும் கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். இன்பத்தை இப்புத்தகத்தின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.
பாலித்தீவு எவ்வளவுதூரம் உல்லாசப்பயண‌த்துக்கு  பெருவிருப்ப ஸ்தலமாக இருந்தாலும் அதன் பின்னால் மோசமான இன்னொரு பக்கமும் இருக்கின்றது.நீங்கள் எந்த இடத்திலிருந்து பயணிக்க ஆரம்பித்தீர்களோ அங்கே உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கு அளவான அமெரிக்க டொலர்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன்ற எச்சரிக்கை கலந்த சிறுகுறிப்புகளை ஆங்காங்கே தந்துள்ளார். 106 பக்கங்களில் உள்ள இந்த நூல் மிக நேர்த்தியாக உயர்த்ர கடதாசியில் அச்சிடப்பட்டுள்ளது.  23 சிறிய படங்களும் ஒன்பது பக்கங்களில் முழுப்படங்களும் உள்ளன. காநா பிரபா எழுத்தாளர்,வானொலியில் வேலை செய்பவர் மட்டுமல்ல. சிறந்த புகைப்படப் பிடிப்பாளர் என்பதையும் அவருடைய புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.
பயணம்  என்பது வெறும் இடங்களைப்பார்த்து சுகம் கொண்டாடுவது அல்ல.அது பல்வேறு மனிதர்களின் வாழ்க்கை முறைகளையும் அவர் தம் தனித்துவமான பண்புகளையும் எடுத்துச்சொல்லும் அனுபவப்பாடமாக அமைந்திருக்கிறது.அந்தவகையில் என் பாலித்தீவுப் பயணம்  என்பது  இன்னொரு சுகானுபவமாக அமைந்த திருப்தியோடு  2013 ஆண்டுக்கு விடை கொடுத்தேன் என கானா பிரபா கூறுகிறார். வாசகர்களுக்கு இப் புத்தகம் ஒரு சுகானுபவமாக உள்ளது.
நூல் ;    பாலித்தீவு  இந்துத் தொன்மங்களைத் தேடி.
ஆசிரியர் ; கானா பிரபா,
வெளியீடு  மடத்துவாசல் பிள்ளையாரடி
சூரன்  

தினக்குரல்
24/01/16


No comments: