தமிழ் சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம்
முயற்சிசெய்தாலும் அதற்கு முட்டுக்கட்டையாக சில சம்பவங்கள் முன்வந்து கெடுத்துவிடுகின்றன. கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங்களில்
இருந்து மீளவேண்டும் என தமிழ் மக்கள் நினைக்கின்றனர். உயர்பாதுகாப்பு வலயம்,தமிழ்
அரசியல் கைதிகள்விடுதலை,காணாமல்
போனவர்களைக் கண்டறிவது என்பன அவற்றுள் முக்கியமானவை. உயர்பாதுகாப்பு வலயம்
மெதுமெதுவாக விடப்படுகின்றன. அரசியல் கைதிகள் விடுதலை இழுபறியில் நிற்கிறது.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதில் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
காணமல் போனவர்களைக் கண்டறிவதற்காக வெளிநாட்டு அழுத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின்
வழிகாட்டலில் ஆணைக்குழு ஒன்று
நியமிக்கப்பட்டது. ஜனாதிபதி ஆணைக்குழு
வெறும் கண்துடைப்புத்தான் எனத்தெரிந்து கொண்டபின்னரும் காணாமல்போனவர்களின்
உறவினர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.
ஜனாதிபதி மைத்திரியின் காலத்தில் காணமல் போனவர்களைக் கண்டறியலாம் என்ற
நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு பிரதமர்
ரணிலின் பேச்சு அதிர்ச்சியளித்துள்ளது. யாழ்ப்பணத்தில் பெரும் எடுப்புடன் நடைபெற்ற
தேசியப்பொங்கல் விழாவில் கலந்துகொண்ட
ரணில் காணாமல் போனவர்கள் உயிருடன்
இல்லை மயிலிட்டி மீன்பிடி துறைமுகம் விடுவிக்கப்பட மாட்டாது என்று
போட்டுடைத்தார். காணாமல் போன தமது உறவுகள்
உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்பவர்களுக்கு இச்செய்தி பேரிடியாக
விழுந்துள்ளது. காணாமல் போனவர்கள் திரும்பி வரவேண்டும் என்று கோயில்களில்
நேர்த்தி வைத்துள்ளனர். சிலர் சாத்திரம்
பார்த்து அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர். தமது உறவினர் உயிருடன் இருப்பதாக சாத்திரம்
சொல்கிறது என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரிடம்
கூறியபோது முன்னாள் ஜனாதிபதி
சாத்திரத்தால் தான் தோல்வியடைந்தார் என அவர் கூறினார்.
காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை நம்புவதற்கு அவர்களது உறவினர்கள்
தயாராக இல்லை. பிதமரிடம் இருந்து இப்படியான வார்த்தையை அவர்கள்
எதிர்பார்க்கவில்லை. காணாமல் போனவர்களில் அதிகமானோர் கண்முன்னாலேயே கைது செய்யப்பட்டனர்,சிலர் சரணடைந்தனர், சிலரை
உறவினர்கள் ஒப்படைத்தனர், சிலர் சோதனைச்சாவடிகளைக் கடந்து செல்லவில்லை என அவர்களது
உறவினர்கள் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவில் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
மஹிந்த அரசின்மிது நம்பிக்கை இல்லாத தமிழ் மக்கள் மைத்திரியின் அரசின் மீது
நம்பிக்கை வைத்தனர். காணாமல் போனவர்களைக் கண்டறிவது,உயர்பாதுகாப்பு வலயங்களை
அகற்றுவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற செயற்திட்டங்களுக்காகவே ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ் மக்கள்
மைத்திரிக்கு வாக்களித்தனர். ஜனாதிபதி மைத்திரியின் அரசாங்கத்தின் பிரதமரான
ரணில் கூறும் சில கருத்துக்களால் தமிழ்
மக்கள் குழப்பமடைகின்றனர்.
காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது?. அவர்கள்
எப்படி இறந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு பிரதமர் பதிலளிக்க வேண்டும். காணாமல் போனவர்கள் கொல்லப்பட்டால் கொலை
செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் தயாராக
இருக்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்காக
நியமிக்கப்பட்ட ஆணைக்குழு
அவர்களைக் கண்டுப்பிடிப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை. காணாமல்
போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் கொடுப்பதில்
அதிக கவனம் காட்டுகிறது. காணாமல்
போனவர்களின் உறவினர்களுக்கு இழபீடு கொடுப்பதில் ஜனாதிபதி ஆணைக்குழு ஆர்வமாக உள்ளது.
மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெறுவதற்கு காணாமல் போனவர்களின் உறவினர்கள் மறுப்புத்
தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்கள்
கண்டறியப்பட வேண்டும். அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவர
வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர். அவர்களின் மன உணர்வுகளுக்கு
மதிப்பளித்து நீதியை வழங்க வேண்டிய கடமை இந்த அரசாங்கத்துக்கு உள்ளது.
வலிகாமம் வடக்கு முழுமையாக விடுவிக்கப்படும் என உறுதியளித்த பிரதமர்
ரணில் இன்று மயிலிட்டி மீன்பிடி துறைமுகம்
விடுவிக்கப்படமாட்டாது என்கிறார். கடற் தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மயிலிட்டி
மக்களுக்கு இது பேரதிர்ச்சியாக உள்ளது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி மயிலிட்டி மீன் பிடித்துறைமுகம் விடுவிக்கப்பட
மாட்டாது என்கிறார் பிரதமர் ரணில். இடம் பெயர்ந்த நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு
மத்தியில் வாழும் மயிலிட்டி மக்கள் மீண்டும் தமது ஊரில் தெரிந்த தொழிலைச்செய்யலாம்
என்ற உற்சாகத்தில் இருந்தனர். பிரதமரின் அறிவிப்பு அவர்களின் உற்சாகத்தைக்
குலைத்துவிட்டது.
அவலவாழ்க்கை வாழும் மக்களை மீட்டெடுப்பது
நல்லெண்ண அரசாங்கத்தில் குறிக்கோள்களில் ஒன்று என்பதை அவர்கள் சில சமயங்களில்
மறந்துவிடுகிறார்கள்.
வானதி
சுடர் ஒளி
ஜனவரி27,பெப்ரவரி02
No comments:
Post a Comment