இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் நகரம், கிராமம் உட்பட பட்டிதொட்டியெங்கும் பிரசித்தமான பாடல்தான் " சின்ன மாமியே உன் சின்னமகளெங்கே ? பள்ளிக்குச்சென்றாளோ
படிக்கச்சென்றாளோ ? "
தமிழ்த்திரைப்படங்கள் சிலவற்றிலும் இடம்பெற்றுள்ளது. இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த கலைஞர் கமலநாதன் இயற்றிய அந்தப்பாடல், தற்பொழுது அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் பிரபல பாடகர் நித்தி கனகரத்தினத்தால் பிரசித்தி பெற்றது.
ஒரு கால கட்டத்தில் இளைஞர்களை பெரிதும் வசீகரித்த இந்தப்பாடலை இயற்றிய கமலநாதன் நேற்று (26-01-2016) வடமராட்சி - வதிரியில் அக்கினியுடன் சங்கமமானார்.
சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த கமலநாதன், வடமராட்சியில் சிறந்த கல்விப்பாரம்பரியத்தின் பின்னணியிலும் கலை, இலக்கிய ஊடகத்துறை செயற்பாட்டாளர்களின் பின்னணியிலும் வாழ்ந்தவர்.
சிறந்த உதைபந்தாட்ட வீரர். பின்னர் உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு மத்தியஸ்தராகவும் விளங்கியவர்.
பாடல் புனையும் ஆற்றலும் இவருக்கிருந்தமையால் சுமார் அரைநூற்றாண்டுக்கு முன்னர் எழுதிய பாடல்தான் சின்ன மாமியே. எனினும் அதனை மேடைகள்தோறும் நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால், கமலநாதனின் பெயர் வெளியில் தெரியவில்லை. எனினும் இப்பாடலின் ரிஷிமூலத்தை காலம் கடந்து எழுத்தாளர் வதிரி சி. ரவீந்திரன் வெளிச்சத்திற்கு
கொண்டுவந்திருந்தார்.
இலங்கை பத்திரிகைகளில் இச்செய்தி பகிரங்கமானபொழுது தன்னடக்கம் பேணியவர் கமலநாதன்.
ஒரு காலகட்டத்தில், ஏ.ஈ. மனோகரன், நித்தி கனகரத்தினம், இராமச்சந்திரன், முத்தழகு, அமுதன் அண்ணாமலை முதலான பலரால் பொப்பிசைப்பாடல்கள் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் பிரபல்யம் பெற்றன.
அவ்வாறே
சிங்கள மக்கள் மத்தியில் எச்.ஆர். ஜோதிபால, பிரடீ
சில்வா,
ஷெல்டன் பெரேரா, எம்.எஸ்.
பெர்னாண்டோ,
மில்டன் மல்லவராச்சி முதலானோரும் பிரபல்யம் பெற்றிருந்தனர்.
சமூக சீர்திருத்தம் தொடர்பாகவும் மனிதர்கள், மற்றும் மாறிவரும் உலகத்தின் நவநாகரீகம் பற்றிய அங்கதச் செய்திகளும் இந்தப்பொப்பிசைப்பாடல்களில் தொனிக்கும். இன்றைய நவீன கணினி தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமலேயே குறைந்தளவு வசதிகளுடன் பொப் பாடல்களின் ஊடாக அவற்றை இயற்றியவர்களின் கருத்துக்களை நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும் நளினமான ஆடல்கள் மூலமும் இந்தப் பாடகர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச்சென்றனர்.
ஆனால், கேட்டு ரசித்து தாமும் பாடும் மக்களுக்கோ இந்தப்பாடல்களை இயற்றியவர் யார் ? என்பது தெரியாது. அவ்வாறே கமலநாதனும் கிணற்றுள் விளக்காக வாழ்ந்தார்.
கமலநாதன் இயற்றிய சின்னமாமியே இளம்வட்டத்தினரை
அக்காலகட்டத்தில் பெரிதும் கவர்ந்தது. வீடுகளிலும் மக்களால் முணுமுணுக்கப்பட்டது. இதனை பல சிங்களப்பாடகர்களும் பாடியதனாலும் சிங்களப்படங்களில் இடம்பெற்றதாலும் சிங்கள ரசிகர்களிடமும் சின்னமாமியும் சின்ன மகளும் சென்றனர். தலைமுறைவேறுபாடுகள் இன்றி பொப்பாடல்கள் மக்களிடம் வாழ்ந்த அக்காலம் பாடலாசிரியர்களினதும் பாடகர்களினதும்
ரசிகப்பெருமக்களினதும் வசந்தகாலம். ஆனால், அந்தக்காலம்
படிப்படியாக
மங்கி மறைந்ததற்கு, தொலைக்காட்சியின் வருகை முக்கிய காரணம்.
இன்றும் இலங்கையில் பொது அரங்குகளில், கட்சி அரசியல் மேடைகளில் இசைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. அவற்றுக்கு கணினி சாதனங்கள் பெரும் துணையாகியுள்ளன.
ஆனால் - தற்காலப்பாடல்கள் நினைவில் தங்குவதில்லை என்பது அனைத்து தரப்பு மூத்ததலைமுறையினரின் கருத்து.
ஆனால் , அவர்கள் பாடிய பொப் பாடல்களை இயற்றியவர்கள் பற்றிய செய்தியை பாடியவர்களும் சொல்லவில்லை. ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. அதனால் ரிஷிமூலம், நதிமூலம் தெரியாதிருப்பதுபோன்று - கட்டிடங்களின் அத்திவாரம் வெளித்தெரியாதிருப்பது போன்று - நெடும் வீதிகளுக்கு அடியில் மறைந்திருக்கும் கற்கள் போன்று - இந்தப்பாடலாசிரியர்களும்
அறியப்படாமல்
மறைந்துவிடுகின்றனர். எழுதியவர்களும் உரிமைகோருவதற்கு முன்வராமல் அடக்கம் பேணிவிடுவார்கள்.
தமிழகத்தின் மூத்த கவிஞர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையா இயற்றிய அலைபாயுதே கண்ணா என்ற பிரசித்திபெற்ற பாடலை சிறந்த இயக்குநர் எனப்பெயரெடுத்த மணிரத்தினமும் தனது அலைபாயுதே படத்தில் ஒரு காட்சியில் பயன்படுத்தினார். ஆனால், தமிழ்மக்களிடம் சாகாவரம் பெற்ற அந்தப்பாடலை இயற்றியவரின் பெயரை அந்தப்படத்தின் Title இல் காணமாட்டீர்கள்.
இலங்கையின் மூவின மக்களிடமும் பிரசித்திபெற்ற சின்னமாமியே
பாடலின் ஆசிரியர் கமலநாதன் வதிரியில் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி மறைந்தார். இவர், தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் மூத்த இலக்கியவாதியும் இலக்கிய மொழிபெயர்ப்பாளரும் அழகு சுப்பிரமணியத்தின் ஆங்கிலப்படைப்புகளை தமிழுக்கு
கொண்டு வந்தவருமான (அமரர்) ராஜஸ்ரீகாந்தனின் அண்ணா உறவு முறையானவர். கமலநாதன், மற்றும் ஒரு ஊடகவியலாளரும், வதிரி தேவரையாளி இந்துக்கல்லூரியின் ஸ்தாபகருமான அமரர்
(சூரன்) அவர்களின் பேரன் ரவிவர்மாவின் நெருங்கிய உறவினருமாவார்.
கமலநாதனும் குடும்பத்தினரும்
1990 இற்குப்பின்னர் எங்கள் நீர்கொழும்பில் - நான் வசித்த சூரியா வீதியில் வசித்தனர். அதனால் இவரின் பிள்ளைகள் எங்கள் ஊர் பாடசாலையில் எனது மனைவியின் மாணவர்களாகவும் இருந்தனர்.அங்கு நடக்கும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதனால் எனக்கும் ஊரில் எனது குடும்பத்தினருக்கும் நெருங்கியவராகவும் கமலநாதன் திகழ்ந்தார்.
1997 ஆம் ஆண்டு நீர்கொழும்பில் மல்லிகை ஜீவாவை நாம்
பாராட்டி
கௌரவித்த நிகழ்ச்சியிலும் கலந்து சிறப்பித்தார். அன்று
இவருடன்
ராஜஸ்ரீகாந்தன், வதிரி சி. ரவீந்திரன், மேமன்
கவி,
(அமரர்) துரை விஸ்வநாதன், தெளிவத்தை ஜோசப், (அமரர்) பிரேம்ஜி ஞானசுந்தரன், மு.
பஷீர்,
திக்குவல்லை கமால், (அமரர்) தங்கவடிவேல் மாஸ்டர், நவமணி ஆசிரியர் சிவலிங்கம், தினக்குரல் ஆசிரிய பீடத்திலிருந்து சிவநேசச்செல்வன், தனபாலசிங்கம், வனொலி ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, ரூபவாஹினியிலிருந்து சி. வன்னியகுலம், வீரகேசரியிலிருந்து சூரியகுமாரி உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரதும் நேசத்துக்குரியவராகவும் திகழ்ந்தவர் கமலநாதன்.
அங்கு எமது இல்லத்தில் 1998 ஆம் ஆண்டு தைப்பொங்கலன்று
நடைபெற்ற
இலக்கியச்சந்திப்பிலும் பங்கேற்றார். இறுதியாக 2013 இல் வடமராட்சியில் என்னை நெல்லியடியில் கண்டுவிட்டு தமது வீட்டுக்கு அழைத்துச்சென்று உபசரித்தார்.வடமராட்சியில் முன்னர் மும்மூர்த்திகள் எனச்சொல்லப்படும் மூவர் இலங்கையில் எந்தப்பாகத்தில் கலை, இலக்கிய, முற்போக்கு அரசியல் கூட்டங்கள் நடந்தாலும் அதில் காட்சி தருவார்கள்.
அவர்கள் எழுத்தாளர் தெணியான், தேவரையாளி இந்துவின் எழுதுவினைஞர் கிளாக்கர் இராஜேந்திரம், சதானந்தன் மாஸ்டர். இவர்களில் சதானந்தனின் தங்கையைத்தான் கமலநாதன் மணந்தார். பெரிய குடும்பத்தின் தலைவனாக விளங்கிய கமலநாதன் மறைந்துவிட்ட செய்தி எனக்கு நேற்று தாமதமாகத்தான் தெரியவந்தது.
தொலைபேசி ஊடாக அவரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவிக்கின்ற சமயத்தில் கமலநாதனின் பூதவுடலுக்கு இறுதிக்கிரியைகள் நடந்துகொண்டிருந்தன.
நேற்று அக்கினியில் சங்கமமான இக்கலைஞரின் பாடல் வரிகள் இன்றும் மங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பல தலைமுறைகளாக சின்னமாமியே ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த
நாடுகளில்
நடக்கும் இசை - களியாட்ட நிகழ்ச்சிகளில் மட்டுமன்றி, வீடுகளில் நடக்கும் பிறந்தநாள் விருந்துகளிலும் இந்தப்பாடல் ஒலிக்கிறது.
முருகபூபதி –
அவுஸ்திரேலியா
2 comments:
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டில் சிலாேன் பாப் இசை வரிசயைில் இந்த சின்ன மாமியே பாடல் பிரபலம்.இந்த பாடலை எழுதிய கவிஞர் கமலநாதன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அன்னாரது ஆன்மா அமைதி பெறட்டும்.
தி.தமிழ் இளங்கோ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment