இந்திய ஜனாதிபதித் தேர்தல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான நேரடிப் போட்டியாகவே தமிழகத்தில் கணிக்கப்படுகிறது. இந்திய ஜனாதிபதித் தேர்தல் பற்றிய சூடு கிளம்ப முன்னரே பி.ஏ.சங்கமாவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார் ஜெயலலிதா. இந்திய மத்திய ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியுமே ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது வழமை. இந்த மரபை மீறிய ஜெயலலிதா ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துத் தன்னை முன்னிலைப்படுத்தினார்.
காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பையும் மீறி பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதி வேட்பாளராக்கியது காங்கிரஸ் கட்சி. சோனியா காந்தி அறிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதில் உறுதியாக இருப்பதாக கருணாநிதி அறிவித்தார். ஜனாதிபதி வேட்பõளராக அறிவிக்கப்பட்ட பிரணõப் முகர்ஜி ஆதரவு கோரி முதன் முதலாகத் தமிழகத்துக்குச் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். பிரதீபா பட்டீல் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது முதன் முதல் ஆதரவு தேடி தமிழகத்துக்கு விஜயம் செய்து கருணாநிதியைச் சந்தித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கருணாநிதி பங்கு மிக முக்கியமானது என்பதை மத்திய அரசு சமிக்ஞை மூலம் வெளிப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே பிரச்சினை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தை விட காங்கிரஸ் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துள்ளது. காங்கிரஸ் கட்சிக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வரும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் காத்திருக்கிறது என்ற கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஜெயலலிதாவின் முக்கியத்துவத்தைக் குறைத்து கருணாநிதியை முதன்மைப்படுத்தியுள்ளது காங்கிரஸ். பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுத்தாக்கலின்போது காங்கிரஸின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். சங்மா வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது ஜெயலலிதா உடனிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா டெல்லி செல்லாது ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தன்னால் முன்மொழியப்பட்ட ஒருவரின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்ய வேண்டிய ஜெயலலிதா வேட்பு மனுத் தாக்கலின்போது தலை காட்டாதது ஏன் என்று புரியவில்லை.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியை அடையாளம் காட்ட வேண்டிய பாரதீய ஜனதாக் கட்சி ஜெயலலிதாவின் பின்னால் ஒழிந்து கொண்டு சங்மாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு எதிராக ஒருவரை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே ஜெயலலிதாவும் எதிர்க்கட்சித் தலைவர்களும் சங்மாவைப் பலிக்கடாவாக்கியுள்ளனர். சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் சங்மாவை மேலும் உசுப்பிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள். பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருந்து பிரணாப் முகர்ஜி இராஜினாமாச் செய்யவில்லை. பிரணாப் முகர்ஜி இராஜினாமாச் செய்த பத்திரங்களில் உள்ள கையெழுத்துக்கள் போலியானவை என்ற புகார் தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்திய ஜனாதிபதியாக வட மாநிலத்தவர் தேர்வு செய்யப்பட்டால் துணை ஜனாதிபதியாக தென் மாநிலத்தவர் தேர்வு செய்யப்படுவார். இந்திய ஜனாதிபதியாக தென் மாநிலத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் வட மாநிலத்தவர் துணை ஜனாதிபதியாவார். ராஜேந்திரப் பிரசாத் முதன் முதல் ஜனாதிபதியானபோது இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டது. இடையில் இரண்டு தடவை இந்த மரபு மீறப்பட்டது. தென்னகத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியான போது தென்னகத்தைச் சேர்ந்த ஜாகீர் ஹுசைன் துணை ஜனாதிபதியானார். வட மாநிலத்தைச் சேர்ந்த வி.வி. கிரி ஜனாதிபதியானபோது வடமாநிலத்தவரான கோபால் சுவரூட் துணை ஜனாதிபதியானார். இப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் துணை ஜனாதிபதி ஹமீத் ஹன்சாரியும் வட மாநிலத்தவர்களே. காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் இரண்டாவது முறையாகவும் தென் மாநிலத்தைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. இதனைத் தட்டிக் கேட்கவேண்டிய ஒரே துணிவுள்ள தலைவரான கருணாநிதி பொங்கி எழாது பொறுமையாக இருக்கிறார்.
இந்திய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 5.50 இலட்சம் வாக்குகளைப் பெற வேண்டும். இன்றைய நிலையில் பிரணாப் முகர்ஜிக்கு சுமார் 6.29 இலட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் சங்மா சுமார் 3.10 இலட்சம் வாக்குகளையே பெறலாம். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக முகர்ஜிக்கு கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. சுமார் 25 கட்சிகள் முகர்ஜியை ஆதரிக்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பஜூ ஜனதா தளம், சிரோன்மணி அகாலி தளம் ஆகியன சங்மாவை ஆதரிக்கின்றன. 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4120 சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 4896 மக்கள் பிரதிநிதிகள் இந்திய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பார்கள். இவர்களின் வாக்குகளின் மதிப்பீடு 10.98 இலட்சமாகும்.
முலாயம் சிங், மாயாவதி ஆகியோரும், ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா மத சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் பிரணாப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆகையினால் காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களின் வாக்குகளும் முகர்ஜிக்குக் கிடைப்பது உறுதியாக உள்ளது. தமிழகத்தில் முகர்ஜியை விட சங்மாவுக்கு 1656 வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும்.
தமிழகத்தில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தமிழக சட்ட சபையில் 234 உறுப்பினர்கள் உள்ளனர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 708. ஒரு சட்ட சபை உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் 155 சட்டசபை உறுப்பினர்களும் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 37,192, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 41 சட்ட சபை உறுப்பினர்களும் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களின் மொத்த வாக்கு மதிப்பு 35.536.
விஜயகாந்துடன் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 29 சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்ட விஜயகாந்தின் கையில் 5,104 வாக்குகள் உள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட எட்டு சட்ட சபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களின் வாக்குகளின் மதிப்பு 2,116 ஆகும். முகர்ஜிக்கு எதிராக இவர்களும் வாக்களித்தால் 42,756 வாக்குகள் சங்மாவுக்கு கிடைக்கும்.
தமிழகத் தேர்தல்களில் ஜெயலலிதாவை வீழ்த்த முடியாத கருணாநிதி இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஜெயலலிதாவைத் தோற்கடித்து வெற்றி பெறலாம் என்ற மகிழ்ச்சியில் உள்ளார்
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/07/12
2 comments:
Late Shri VV Giri was a Telugu born in Berhampur (now in Orissa) then in combined Madras State. He was a south indian, geographically and linguistically.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.தங்களின் புதியதகவலை கருத்தில் கொள்கிறேன்.
அன்புடன்
வர்மா
Post a Comment