முதல் மூன்று உலக கோப்பை போட்டியும் இங்கிலாந்தில் நடைபெற்ற நிலையில், 1987ல் 4வது உலக கோப்பை போட்டியை இணைந்து நடத்தும் வாய்ப்பு இந்தியா, பாகிஸ்தானுக்கு கிடைத்தது. கூடவே புருடென்ஷியல் கோப்பைக்கு பதிலாக ரிலையன்ஸ் உலக கோப்பையாக பெயர் மாற்றமும். உலக கோப்பை போட்டியை இங்கிலாந்தில் இருந்து மாற்ற அவ்வளவு எளிதாக அனுமதி கிடைத்துவிடவில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த நிலையில், பல்வேறு மட்டத்தில் பல சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகே பச்சைக்கொடி காட்டினார்கள்.என்.கே.பி.சால்வே, ஜக்மோகன் டால்மியா, ஐ.எஸ்.பிந்த்ரா ஆகியோரது முன்முயற்சிகளின் பின்விளைவாகவே இது சாத்தியமானது. ஐசிசி கூட்டத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடந்தபோதும் கடும் வாக்குவாதம்.
சர்வதேச கவுன்சிலே உடைந்து சிதறும் அளவுக்கு பிரச்னை தீவிரமானது... இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கை கோர்த்து கூட்டு நிர்வாகக் குழுவை அமைக்கும் அளவுக்கு! பின்னர் ஒருவழியாக உலக கோப்பை போட்டி இந்தியா, பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்தது. 60 ஓவருக்கு பதிலாக, தலா 50 ஓவர் கொண்ட போட்டியாக அறிவித்தார்கள். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில், உலக கோப்பைக்கு புதுமுகங்களாக அசாருதீன், வெங்சர்க்கார், நவ்ஜோத் சிங் சித்து, மனோஜ் பிரபாகர், மணிந்தர் சிங், கிரண் மோரே, எல்.சிவராமகிருஷ்ணன், சேதன் ஷர்மா இடம் பெற்றார்கள். ஏ பிரிவில் இடம் பெற்ற இந்தியா, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் லீக் ஆட்டத்தில் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ஜெப் மார்ஷ் 110, டேவிட் பூன் 49, டீன் ஜோன்ஸ் 39 ரன் விளாச, ஆஸி. அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 270 ரன் குவித்தது.
இந்திய அணி சேசிங்கில் கவாஸ்கர் 37, ஸ்ரீகாந்த் 70, சித்து 73, வெங்சர்க்கார் 29 ரன் குவித்து நம்பிக்கையளித்த நிலையில், அடுத்து வந்த அசார், கேப்டன் கபில் உள்பட மற்ற வீரர்கள் சொதப்பினர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை கதையாக இந்தியா 49.5 ஓவரில் 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னியும் (0), பிரபாகரும் (5) தேவையில்லாமல் ரன் அவுட் ஆக, இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டைவிட்டது.அடுத்து பெங்களூரில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா 16 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. சித்து 75, கபில்தேவ் 72 ரன் விளாச இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணியால் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 236 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. மார்டின் ஸ்னெடன் 33, ரூதர்போர்டு 75, ஆண்ட்ரூ ஜோன்ஸ் 64 ரன் எடுத்தார்கள். கபில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
மும்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 56 ரன் வித்தியாசத்திலும் வென்று இந்தியா உற்சாக நடைபோட்டது. சித்து, அசார், கவாஸ்கர், வெங்சர்க்கார் நல்ல பார்மில் இருந்தனர். மீண்டும் ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளுடன் நடந்த லீக் ஆட்டங்களிலும் அபாரமாக வென்ற நடப்பு சாம்பியன் இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது. லாகூரில் நடந்த முதலாவது அரை இறுதியில் ஆஸ்திரேலியா 18 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பைனலுக்கு முன்னேற, மும்பையில் நடந்த 2வது அரை இறுதியில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின. கிரகாம் கூச் 115, கேப்டன் மைக் கேட்டிங் 56, ஆலன் லேம்ப் 32* ரன் விளாச, இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன் குவித்தது.
கவாஸ்கர் (4) தவிர்த்து, மற்ற முன்வரிசை பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தாலும், கடைசி கட்டத்தில் கிரண் மோரே (0), மனோஜ் (4), சேதன் ஷர்மா (0) சொதப்பியதால் இந்தியா 45.3 ஓவரில் 219 ரன்னுக்கு சுருண்டு 35 ரன் வித்தியாசத்தில் பைனலுக்கு முன்னேறும் வாய்ப்பை வீணடித்தது. நவம்பர் 8ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த விறுவிறுப்பான பைனலில் ஆஸ்திரேலியா 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக உலக சாம்பியன் ஆனது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து வலுவாக சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணி, கேப்டன் மைக் கேட்டிங் தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி விக்கெட்டை தானம் செய்ததால் தடுமாறி தோல்வியைத் தழுவியது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
* இங்கிலாந்தின் கிரகாம் கூச் 8 போட்டியில் 471 ரன் விளாசி (அதிகம் 115, சராசரி 58.87) ரன் குவிப்பில் முதலிடம் பிடித்தார்.* விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலிய வேகம் மெக்டர்மாட் 8 போட்டியில் 18 விக்கெட் கைப்பற்றி முதலிடமும் (சிறப்பு: 5/44), பாகிஸ்தானின் இம்ரான் கான் 7 போட்டியில் 17 விக்கெட் வீழ்த்தி (சிறப்பு: 4/37) 2வது இடமும் பிடித்தனர். இந்தியாவின் மணிந்தர் சிங் 7 போட்டியில் 14 விக்கெட்டுடன் (சிறப்பு: 3/21) 4வது இடம் பிடித்தார்.* கராச்சியில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 181 ரன் விளாசி உலக சாதனை படைத்தது, தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
* அதே போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 360 ரன் குவித்தது, அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
No comments:
Post a Comment