ஏழாவது உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்தது. கற்றுக்குட்டிகள் வங்கதேசம், கென்யா, ஸ்காட்லாந்து உள்பட மொத்தம் 12 அணிகள் இரண்டு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதின. இரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர்-6 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் மற்ற 2 அணிகளுக்கு எதிராகப் பெற்ற புள்ளிகளும் கணக்கில் வைக்கப்படும் என்ற துணை விதி வேறு! சூப்பர்-6 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவில் இருந்து வந்த 3 அணிகளுடன் மட்டும் மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்... படிக்கும்போதே தலைசுற்ற வைக்கும் இந்த புதிய நடைமுறையை புரிந்துகொள்வதே அணிகளுக்கு பெரிய குழப்பமாக இருந்தது. இந்த தொடரில் இருந்து தான், ஸ்பான்சர் நிறுவனத்தின் பெயர் இல்லாமல், பொதுவான ‘ஐசிசி உலக கோப்பை’ என்ற பெயர் அறிமுகமானது.
ஏ பிரிவில் பலம் வாய்ந்த இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளை அதிர்ச்சி தோல்வியடைய வைத்த ஜிம்பாப்வே அணி முதலிடம் பிடித்து அசத்தியது. முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவிடமும், 2வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடமும் தோற்ற இந்தியா, பின்னர் சுதாரித்துக் கொண்டு விளையாடி கென்யா, இலங்கை, இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அசார் தலைமையில் சச்சின், கங்குலி, டிராவிட், ஜடேஜா, ராபின் சிங் என்று வலுவான பேட்டிங் வரிசை அமைந்திருந்ததால் இந்திய அணி நிச்சயம் சாதிக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினார்கள். ஜிம்பாப்வே அணியுடன் நடந்த போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது ஏமாற்றமாக இருந்தது.சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே அணியால் வாலாட்ட முடியவில்லை.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்து வெளியேறியது. இந்திய வீரர்கள் வழக்கம்போல பாகிஸ்தானுக்கு எதிராக மட்டும் சிறப்பாக விளையாடி வென்று ரசிகர்களை திருப்தியடைய வைத்தனர். மான்செஸ்டரில் நடந்த அந்த போட்டியில் இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்தது. சச்சின் 45, சடகோபன் ரமேஷ் 20, டிராவிட் 61, கேப்டன் அசார் 59 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் 45.3 ஓவரில் 180 ரன்னுக்கு சுருண்டது. வெங்கடேஷ் பிரசாத் 5, ஸ்ரீநாத் 3, கும்ப்ளே 2 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினர். முன்னதாக, லீக் சுற்றில் வங்கதேச அணியிடம் 62 ரன் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியதால் ஏகக் கடுப்பில் இருந்த பாகிஸ்தான் ரசிகர்கள், இந்தியாவிடம் மீண்டும் தோற்றதால் கொந்தளித்தனர். ஆனாலும், அந்த அணி ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவிடம் 77 ரன் வித்தியாசத்திலும், நியூசிலாந்திடம் 5 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்ற இந்தியா ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது. மான்செஸ்டரில் நடந்த முதலாவது அரை இறுதியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா - தென் ஆப்ரிக்கா இடையே நடந்த பரபரப்பான 2வது அரை இறுதி ஆட்டம் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி ‘டை’ ஆன நிலையில், சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஆஸ்திரேலியா வென்றிருந்ததால் அந்த அணி பைனலுக்கு முன்னேறியது.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 39 ஓவரில் 132 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 20.1 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 2வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. பைனலில் ஆஸி. ஸ்பின்னர் ஷேன் வார்ன் (9-1-33-4) ஆட்ட நாயகன் விருது பெற்றார். தென் ஆப்ரிக்காவின் லான்ஸ் குளூஸ்னர் (17 விக்கெட் மற்றும் 281 ரன்) தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
* இந்திய அணியுடன் நடந்த லீக் ஆட்டத்தின்போது தென் ஆப்ரிக்க அணி கேப்டன் ஹன்சி குரோனி, வேகப் பந்துவீச்சாளர் ஆலன் டொனால்டு இருவரும் நவீன ரேடியோமைக் உதவியுடன் வீரர்கள் அறையில் தங்கியிருந்த பயிற்சியாளர் பாப் உல்மருடன் அடிக்கடி ஆலோசித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. டிவி நேரடி ஒளிபரப்பில் இதை பார்த்துக் கொண்டிருந்த ஐசிசி போட்டி நடுவர், குளிர்பான இடைவேளையின்போது உள்ளே வந்து ‘ஆலோசனை’க்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
* ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற அருமையான வாய்ப்பு கிடைத்தும், 2 பந்து மீதம் இருந்த நிலையில் எல்வொர்தி, டொனால்டு இருவரும் ரன் அவுட் ஆகி ஆட்டம் ‘டை’ ஆக வைத்தனர். இதனால், பதற்றமான சூழ்நிலையில் ஆடத் தெரியாமல் திக்பிரமை பிடித்து நிற்கும் அணி என்ற மோசமான பெயர் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்தது.
* இந்திய வீரர் ராகுல் டிராவிட் 8 போட்டியில் விளையாடி 461 ரன் குவித்து (அதிகம் 145, சராசரி 65.85) முதலிடம் பிடித்தார். சவுரவ் கங்குலி 7 போட்டியில் 379 ரன் விளாசி (அதிகம் 183, சராசரி 54.14) 3வது இடம் பிடித்தார்.
* விக்கெட் வேட்டையில் நியூசிலாந்தின் ஜெப் அலாட் 9 போட்டியில் 20 விக்கெட் (சிறப்பு 4/37) வீழ்த்தி முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் 10 போட்டியில் 20 விக்கெட் கைப்பற்றி (சிறப்பு 4/29) 2வதாக வந்தார்.
* டான்டன் மைதானத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் சவுரவ் கங்குலி 183 ரன் விளாசியது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. மொத்தம் 11 சதங்கள் விளாசப்பட்டன. டிராவிட் 145 மற்றும் 104*, சச்சின் 140*, ஜடேஜா 100* ரன் எடுத்தனர்.
* இலங்கைக்கு எதிராக இந்தியா 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது, அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
No comments:
Post a Comment