இலங்கை சோசலிஸ ஜனநாயக குடியரசின் ஜனாதிபதித் தேர்தல் என்றும் இல்லாதவாறு பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் என ஆளும் தரப்பும் எதிரணியும் சொல்கின்றன. அரசியல் தலைமகளின் குத்துக்கரணங்களை மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்வது. ஊழலற்ற ஆட்சியை அமைப்பது. குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவது எனும் மூன்று முக்கிய கருத்துக்களுக்கு உடன்பாடு கண்டு எதிரணியின் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வல்லமை யாருக்கும் இல்லை என்ற என்;ற கருத்தை மைத்திரியின் வரவு ஆட்டம் காணவைத்துள்ளது. தனது சால்வைக்குள் பாதுகாப்பாக இருந்த ஒருவர், தனக்கு எதிராக புறப்படுவார் என ஜனாதிபதி மஹிந்த கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
அரசுக்கு எதிரானவர்கள் அனைவருக்கும் புலி முத்திரை குத்துவது வழமையான ஒன்று. மைத்திரிக்கு எதிராக அப்படி ஒரு முத்திரையை குத்த முடியாதுள்ளது. இலங்கையின் புலனாய்வுக் கண்களுக்குத் தெரியாமல், கனகச்சிதமாக பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். பொதுவேட்பாளரைக் களம் இறக்கும் திட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் பங்கு பிரதானமானது. வேண்டாவெறுப்பாக தனது ஜனாதிபதி பதவியை மஹிந்த் ராஜபக்ஷவிடம் தாரை வார்த்தார் சந்திரிகா பண்டாரநாயக்க. அவருடைய ஒருவருட பதவி சுகமும் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது.
ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேறியதும் அரசியலில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார். மறுபுறத்தில் அவர் மெதுமெதுவாக ஓரங்கட்டப்பட்டார். பண்டாரநாயக்கவின் கட்சி என்ற பரிணாமம் மெதுவாக மறையத்தொடங்கியது. தகப்பன் ஆரம்பித்த கட்சியை திரும்பவும் தனது கையில் எடுப்பதற்கான காலம் வரும்வரை காத்திருந்த அவருக்கு, ஜனாதிபதித் தேர்தல் வரப்பிரசாரமாக அமைந்துவிட்டது.
தேர்தல் தோல்வியில் கின்னஸ் சாதனை என பரிகாசம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதித்தேர்தல் புது உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இருதுருவங்களாக இருந்த சந்திரிகா பண்டாரநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலில் தமது பொது எதிரியான ஜனாதிபதியை பதவியில் இருந்து இறக்குவதற்காக இணைந்துள்ளனர்.
தமிழ்மக்களைப் பகடைக்காயாக்கி சிங்கள வாக்கு வங்கியை அதிகரிக்கும் செயல் இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் தொடர்கதையாக உள்ளது.
பண்டா செல்வா, டட்லி செல்வா, இந்திய - இலங்கை ஒப்பந்தங்கள் எல்லாம் மின்னி மறைந்து போயின. சந்திரிகா, ரணில் ஆகியோரின் சமாதான முயற்சிகள் அப்போதைய எதிரணிகளினால் குழப்பியடிக்கப்பட்டன.
இலங்கையின் பிரதான இரண்டு அரசியல்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலரும், இணைந்து புதிய அரசியல் பாதையை நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டாக உடைந்துள்ளன. எஞ்சியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிரணிக்குத் தாவினர். இன்னும் சிலர் மதில் மேல் பூனையாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரம், ஊழல், குடும்ப ஆதிக்கம் என எதிர்க்கட்சிக் கூட்டணி கூறினாலும் சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் தமது அரசியல் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவே இந்த அரசியல் சதுரங்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
தான் ஜனாதிபதியாக முடியாவிட்டால் இன்னொருவரை ஜனாதிபதி பதவியில் இருத்தி அவரின் கையாலேயே ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பறிப்பதே ரணிலின் திட்டம்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்றமுடியாது என அன்றைய விமர்சனங்கள் கூறின. விகிதாசார தேர்தல் முறையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது இயலாதகாரியம் என கருதப்பட்டது.
ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குத் தேவையான மூன்றில் இரண்டை வெகுசுலபமாகப் பெற்றுவிட்டார். தற்போது பொதுவேட்பாளரின் வரவால் மூன்றில் இரண்டு ஆட்டம் கண்டுள்ளது.
அரசதரப்பில் இருந்து பலர் எதிரணிக்கு தாவிவிட்டார்கள். எதிரணியிலிருந்த சிலர் அரச தரப்புக்கு பாய்ந்துவிட்டார்கள்.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற கோசம் எதிரணியில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்டது. ஆளும் கட்சியில் இருந்து பலர் எதிரணிக்குத் தாவிவிட்டதால், அவர்கள் புனிதர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இராதாகிருஷ்ணன், திகாம்பரம், ரிஷாட் ஆகியோர் பந்தியில் முந்திவிட்டார்கள். கடிதம் எழுதி களைத்துப்போன ஆனந்த சங்கரி, மைத்திரிக்கு ஆதரவு என்கிறார். அவர் வருவார என இரண்டு தரப்பும் யாரையோ எதிர்பார்கிறது. ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோஷமும் ஒருபக்கத்தில் ஒலிக்கிறது.
ஜனாதிபதிப் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷவை அகற்ற வேண்டும் எனக்கூறும் ஜே.வி.பி சரியான வேட்பாளரை இனங்காட்டவில்லை. ஒளித்து விளையாடிய ரவூப் ஹக்கீமும் எதிரணிக்கு தாவிவிட்டார்.
ஆட்சி அதிகாரம் உள்ளவரை அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டே இருப்பார்கள். அரசியல் அதிகாரம் கைமாறும் போது அவர்கள் மாறிவிடுவார்கள். அரசியல்வாதிகளை நம்பி, கொடி பிடிப்பவர்கள் இரண்டும் கெட்டான் நிலையில் தடுமாற்றத்துடன் முடிவெடுப்பார்கள்.
மக்களை நல்வழிப்படுத்தும் அரசியல் அதிகாரமா, அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் அரசியல் அதிகாரமா என்பதை முடிவு செய்யும் சந்தர்ப்பம் மகா பொது ஜனங்களுக்கு கிடைத்துள்ளது. ஆள், அம்பு, படை, சேனை என்பன அரசியல்வாதிகளிடம் இருந்தாலும் வெறும் புள்ளடியால் அரசியல் அதிகாரத்தை மாற்றும் சக்தி மக்களிடம் உள்ளது.
No comments:
Post a Comment