அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவை
வீழ்த்தி புதிய வரலாறு படைக்கப்போவதாக பாகிஸ்தான் அணியின் யூனுஸ்கான்
தெரிவித்தார்.
இந்திய பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி மிகுந்த
பரபரப்பை ஏற்படுத்துவது வழமை. இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டிக்கான
டிக்கெட்கள் அனைத்தும் விற்பனையாகிவிடும். பல இலட்சக்கணக்கான ரசிகர்கள்
தொலைக்காட்சியில் போட்டியை பார்ப்பார்கள்.
உலகக்கிண்ண தொடரில் பெப்ரவரி 15ஆம்
திகதி அடிலெய்டில் இடம்பெறும் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்கின்றன.
இப்போட்டி தொடர்பாக யூனுஸ்கான் தெரிவிக்கையில்,
பெப்ரவரி மாதம் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி
நடைபெறவுள்ளது. கடந்த 1975ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இப்போட்டியில், இந்தியாவை
பாகிஸ்தான் வெற்றி கொண்டதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வகையில் இந்தியாவை
வீழ்த்துவோம்.
தற்போதைய சூழ்நிலையில் பாக்கிஸ்தான் வீரர்கள் நல்ல
நிலையில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்படும் நேரத்தில்
அடிலெய்டில் நடைபெறும் உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவை வீழ்த்த
முடியும்.
அண்மையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்
நான் ஆடியபோது ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதே ஆச்சரியம் இந்த உலக்கிண்ணப்
போட்டியிலும் ரசிகர்களிடையே எழும். நல்ல போர்மிலுள்ள வீரர்கள் நிறைய பேர் எங்கள்
அணியில் இருக்கிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் திறமையாகவும் பொறுப்பாகவும்
விளையாடினால் நிச்சயமாக இந்தியாவை வீழ்த்திவிடலாம்.
ஆனால், இந்த முறை யார் சம்பியனாவார்கள் என்று குறிப்பிட்டு
சொல்ல முடியாது. ஏனெனில் சமீப காலங்களாக ஒருநாள் போட்டிகளின் நிலை மாறிவிட்டன.
எனவே இந்தமுறை யார் வேண்டுமானாலும் சம்பியனாக முடியும்.
விதிமுறைகள் மாறியிருப்பது பலம்வாய்ந்த அணிகளுக்கு
சாதகமாக இருக்கிறது. நீங்கள் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தை கூட நினைக்கலாம்.
அவை இரண்டுமே இந்த போட்டியை நடத்தும் நாடுகள்.
இதுதவிர, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து அணிகளை எதிர்பார்க்கலாம். ஆனால், அவற்றைகூட
சாதகமாக சொல்ல முடியாது.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை பற்றி இப்போது
நான் சிந்திக்கவில்லை. நான் இன்னும் விளையாடுவதை ரசிக்கின்றேன்.
என்னுடைய வாழ்க்கையில் இன்னும் சிறந்த காலங்கள்
இருக்கிறது. சர்வதேச போட்டியில் சாதனை படைக்கும் வாய்ப்பை முடித்துக்கொள்ள
விரும்பவில்லை. ஓய்வு பெறுவது எனது தனிப்பட்ட முடிவு என்றார்.
No comments:
Post a Comment