Friday, August 4, 2023

தெரிந்தசினிமா தெரியாத சங்கதி -76

நாடகத்தில் இருந்து சினிமாவுக்குச் சென்ற அனைவரும் சினிமா நடிகர்களாகப் போற்றப்படுகிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்த ஆர்.எஸ். மனோகர்  ஒருவர்தான்  "நாடகக் காவலர்" என்ற  பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். இராவணன், சூரன்  போன்ற வரலாற்று வில்லன்  பாத்திரங்களைக் கதாநாயகனாக்கியவர் மனோகர். "இலங்கேஸ்வரன்" என்றால் அது மனோகர்தான்.

நாடக மேடையில் சரித்திரம் படைத்தவர்.  சினிமா வில்லன். நாடகத்தில் கதாநாயகன். எம்ஜிஆர் சிவாஜி ஆகியோரின்  இனிய நண்பன். லட்சுமி நரசிம்மன் என்ற அவரது பெயர் மனோகரா நாடகத்தில் நடித்ததால் மனோகர் ஆனது.

சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. சமஸ்கிருதம் படித்தார். அப்போது, 'மிருச்சகடிகா' என்ற சமஸ்கிருத நாடகத்தில் கதாநாயகனாக நடித்து, அனைவரையும் கவர்ந்தார். நாடகக் களத்தில் அடியெடுத்து வைத்தவர், சுகுண விலாஸ் சபாவின் 'தோட்டக்காரன்' நாடகத்தில் நடித்தார். 'நாடகத் தந்தை' பம்மல் சம்பந்த முதலியார் நாடகத்தைப் பார்த்து இவரைப் பாராட்டினார்.

1950 லேயே வி.சி.கோபாலரத்தினம் நாடகசபாவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் மனோகர். அங்கு தான் நடிப்பு மற்றும் உச்சரிக்கும் திறனை வளர்த்துக்கொண்டார். தோட்டக்கார விஸ்வநாதனின் நட்பு கிடைத்தது. அவருடைய நாடகத்தில் பங்கேற்று தன்னை மேன்மை படுத்திக்கொண்டார்.14 நவம்பர் 1954 அன்று தேசிய தலைவர் நேருவின் பிறந்தநாள். அன்று தான் ஆரம்பிக்கப்பட்டது நேஷனல் தியேட்டர். முதலில் சமூக நாடகங்கள், பிறகு புராண நாடகங்கள் என்று போட்டார்கள். அத்தனையையும் மக்கள் ரசித்தார்கள். நாடகம் தயாரிக்க நான் மானசீக குருவாக கருதுவது நவாப் ராஜமாணிக்கம் அவர்களை தான் என்கிறார் மனோகர்.

1953-ம் ஆண்டு ’லட்சுமி’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். சேலத்தில் இலங்கேஸ்வரன் நாடகம் நடந்த போது, அதைக் காண வந்திருந்தார் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம். மனோகரின் நடிப்பு அவருக்கு பிடித்து விட்டது. அப்போது   தான் வண்ணக்கிளி  பட வாய்ப்பு  கிடைத்தது. ‘சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்’ பாடலையும் அதில் மனோகரின் அட்டகாசமான நடிப்பையும் இன்றைக்கும் ரசிகர்கள் மறக்கவில்லை .

‘கைதி கண்ணாயிரம்’ படத்தின் நாயகனான  மனோகர், நடிப்பில் உருகவைத்திருப்பார். மாடர்ன் தியேட்டர்ஸில், அப்போதே ஒரு புதுமையைச் செய்தார்கள். அசோகனை நல்லவனாகவும் மனோகரை பொலிஸ் அதிகாரியாகவும் ஜெமினி கணேசனை வில்லனாகவும் மாற்றி, ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற படத்தைக் கொடுத்தார்கள். மூவரின் நடிப்புமே அசத்தல்ரகம்தான் என்றாலும் இந்தப் படத்தில் மனோகரின் நடிப்பை  பத்திரிகைகள் வெகுவாகக் கொண்டாடின. பத்திரிகைகள்.

நம்பியார், அசோகன், ஆர்.எஸ். மனோகர் ஆகிய மூவரும் வில்லன் பாத்திரத்தில் கலக்கினார்க.  சில படங்களில், மூன்றுபேருமே இருந்தார்கள். ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மனோகரின் நடிப்பு தனித்து வெளிப்பட்டது.  அதேபோல் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திலும் அட்டகாசமாக மிரட்டினார் மனோகர். சிவாஜிக்கும் வில்லனாக பல படங்களில் நடித்தார். ‘சொர்க்கம்’ படத்தில் இரண்டு மனோகர்கள். இதில் இருவருக்கும் உடல்மொழியில் தனி ஸ்டைலே உருவாக்கிக் கலக்கியிருப்பார்.எம்.ஜி.ஆருடன் ‘பணம் படைத்தவன்’, ‘ஒளி விளக்கு’, ‘அடிமைப்பெண்’, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ உட்பட பல படங்களில் மனோகர் நடித்துள்ளார். தோள்களை ஆட்டி உடலைக் குலுக்கி வசனம் பேசி நடித்து தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

‘அடிமைப்பெண்’ படத்தில் நடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு மனோகரை எம்.ஜி.ஆர். அழைத்துச் சென்றார். நாடகத்துக்குத் தேவையான அலங்காரப் பொருட்களுக்கு ஜெய்ப்பூர் மிகவும் பிரபலம்.

மனோகரை அழைத்த எம்.ஜி.ஆர்., ‘‘நீங்கள் நடத்தும் நாடகங்களுக்கு தேவையான பொருட்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லாம் என்னுடைய செலவு’’ என்றார்.

மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போய்விட்டாராம் மனோகர். அதோடு எம்.ஜி.ஆரின் அன்பான வேண்டுகோளுக்கு இணங்க, தனது நாடகங்களுக்கு தேவையான பொருட்களையும் வாங்கினார்.

கதாசிரியர் துறையூர் மூர்த்தி ஒரு புராண நாடகத்தை மனோகரிடம் கொடுத்தார். புராண நாடகம் நடத்த நம்மைவிட சிறந்த ஜாம்பவான்கள் இருக்கிறார்களே என்றார். இது வேற ரகம். என்னங்க பெயர்? என்று மனோகர் கேட்டார். இலங்கேஸ்வரன் என்றார்.

பெயரைக் கேட்டு ஒரம் கட்டினார் மனோகரன். துறையூரார் விடாமல் துரத்தினார். இராவணனை ஹீரோவாக வைத்து நாடகம் நடத்தினால் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றார் மனோகர். 

சும்மா மேக்கப் டெஸ்ட் போடுங்களேன் என்றார்.   ஆர்.நாகராஜன் என்பவர்தான் மனோகரின் மேடை நிர்வாகி. மேக்கப், உடை, செட்டிங்ஸ், தந்திரக் காட்சிகள், பணியாளர்களின் பொறுப்பாளர் என ஒரு நாடகத்தை நடத்த 30 பேரை சரியாக வேலை வாங்குவார். சுமார் 5000 நாடகங்களை மேடையேறிய வெற்றியாளர் இவர்.

மனோகரின் திறமையை மதித்து, நன்கு ஆலோசித்து துணிந்து இராவணனை மேடையேற்றினார். ராஜாஜியிடமிருந்து எதிர்ப்பு வந்தது. எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை. மனோகர் தளர்ந்து விடவில்லை.

நேரே காஞ்சிமடத்திற்கு போனார். என்ன இப்ப..? இராவணன் மகள் சீதை என்று சொல்கிறீர்கள். ராமபிரானை எங்கும் அவமதிக்கவில்லை. போய் வேலையைத் துவங்குங்கள். மகானின் ஆசீர்வாதம் பலித்தது.

இலங்கையில்  இலங்கேஸ்வரன் நாடகம் நடந்தபோது  "நாடகக் காவலன்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.   இதன் பிறகு சூரபத்மன், நரகாசுரன், சிசுபாலன், மாலிக்காஃபூர் என  வரலாற்று நாடகங்கள் தொடர்ந்தன. 

நாடக  மேடைகளின் அகலம் 22 அடி இருக்கும். மனோகரது மேடை நாடகத்தில் 30 அடியில் டிராமாஸ்கோப் முறையில் பிரம்மாண்டமாக நடத்துவார். அவர் தான் மனோகர். மற்ற நாடகத்தில் ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கும் வரும் இடைவெளியில் படுதா போட்டுவிட்டு அபஸ்வரத்தில் ஆர்மோனியம் ஒலிக்கும்.

நாடகத்தில் கதை என்ன, வசனங்கள் என்ன என்கிற எதிர்பார்ப்புகளையெல்லாம் கடந்து, மேடைக்கு யானையை எப்படி வரச்செய்கிறார், மழையை எப்படிப் பொழியச் செய்கிறார் என்று கரவொலி எழுப்பி மலைத்துப் போனது ரசிகக் கூட்டம். காட்சிக்குக் காட்சி இவர் போடுகிற செட்டுகள், அத்தனை தத்ரூபமானவை. மலைக்கவைப்பவை.

மலையைக் கொண்டுவருவார். மழையைக்கொண்டுதருவார். வானமே இறங்கி வந்து நிற்கும். மேகக்கூட்டங்கள் அலையும். இடிச்சத்தத்துடன் மின்னல் வெட்டும். கையில் குடை வைத்திருக்கிறோம், கவலை இல்லை எனும் முடிவுக்கு ரசிகர்கள் வருவார்கள். அரங்கத்தையே ஒவ்வொரு இடமாக, வனமாக, கோயிலாக, கோயில் வாசலாக, அரண்மனையாக, அந்தப்புரமாக, கடலாக, நதியாக, நாணலாடும் கரையாக மாற்றுகிற ஜித்துவேலைகள், அதுவரை நாடக உலகில் எவரும் செய்யாத தனித்ததான சாதனை

’சாணக்கிய சபதம்’ நாடகத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘நரகாசுரன்’ நாடகத்தையும் அந்தக் காட்சிகளையும் கண்டு திரும்பத் திரும்பப் பார்த்தவர்கள் உண்டு. ’சூரபத்மன்’, ’சிசுபாலன்’ என அத்தனை நாடகங்களும் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்பட்டு ஏகப்பட்ட வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றன.

மனோகர் நாடகத்தில் ஒரு விநாடியில் காட்சி மாறிவிடும். ஒரு வேளை தாமதமாகிற மாதிரி இருந்தால் காமெடியை நுழைத்து விடுவார். அம்பு பறந்து நாகமாக மாறும். யானை வந்து மாலையிடும். இதெல்லாம் சினிமாவில் செய்வது ரொம்பவே எளிமையான விஷயம். ஆனால் அதை எல்லாம் நாடகத்தில் சாத்தியமாக்கி மக்களை ரசிக்க வைத்தார் மனோகர்.

வை.ஜி.பார்த்தசாரதி, டி.கே.சண்முகம் அண்ணாச்சி, மெளலி, பாலசந்தர், சோ என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கலக்கிக் கொண்டிருக்க, பிரம்மாண்டமான புராணக்கதைகளை எடுத்துக்கொண்டு, அதை இன்னும் பிரம்மாண்டமாகக் கொடுத்து பிரமிக்கச் செய்தார் மனோகர்.இலங்கேஸ்வரன் நாடகம் 1,800 முறைக்கு  மேல்  மேடையேறியது.

  'சாணக்கிய சபதம்', 'சூரபத்மன்', 'சிசுபாலன்', 'இந்திரஜித்', 'நரகா சுரன்', 'சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்களும் குறிப்பிடத்தக்கவை. சொன்ன நேரத்துக்கு நாடகம் தொடங்கிவிட வேண்டும்; அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். ஒவ்வொரு நாடகத்துக்கும் 30 நாட்கள் ஒத்திகை பார்ப்பாராம்.

 சினிமா உலகில் கதாநாயகனாக அறிமுகமான பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வில்லன் கதாபாத்திரத்தில் முத்திரை பதித்தவர். 'வண்ணக்கிளி', 'கைதி கண்ணாயிரம்', 'வல்லவனுக்கு வல்லவன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'அடிமைப்பெண்', 'இதயக்கனி' உட்பட 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

  இசைப்பேரறிஞர், நாடகக் காவலர் உட்பட பல விருதுகள், பட்டங்கள் பெற்றவர்.    ஜெ.ஜெ. டிவிக்காக பிரமாண்ட சீரியலை இயக்கிக்கொண்டிருந்தார். அது ஒளிபரப்பாகவேயில்லை. அந்த வருத்தம் அவருக்கு எப்போதும் உண்டு.

 

No comments: